மூன்று தரை சோழ முத்தரையர்கள் (21முதல் 25வரை)

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
_____________________________________
சோழ முத்தரையர்(கள்)
__________________________

21.அரங்குளவன் கொற்றவன்
----------------------------------------------------
இவனைப்பற்றிய கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோயிலில் வீரபாண்டிய தேவரின் 9வது ஆட்சியாண்டில் (கி.பி.1306)ல் வெட்டப்பட்டுள்ளது. அரங்குளவன் மிகப்பெரிய நிழக்கிழாராகவும், அரசியல் முக்கியத்துவம் பெற்றவனாகவும் விளங்கியுள்ளான். இவனைப்பற்றி பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவனது தம்பி திறையன் வில்ல முத்தரையன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரங்குளவன் கொற்றன் திருவரங்குளம் கோயிலுக்கு தனது தம்பிமார் திரையன் வில்ல முத்தரையனும், அவனது தம்பிமாரும் சேர்ந்து பெரும் நிலப்பரப்பை, மா, புளி இதர மரங்களுடன் 10,000/- பொற்காசுகளுக்கு விற்றுள்ளான். இந்த நிலத்திற்கு எல்லை கூறும்போது பாண்டி  முத்தரையனின் எல்லைக்கு வடக்கு எனக் கூறுகிறது. எனவே இந்நிலம் திருவரங்குளம், திருக்கட்டளை, மாஞ்சன் விடுதிக்கு தெற்கில், வெள்ளாற்றுக்கு உட்பட்ட பெரும் பரப்பாக இருந்ததை அறியலாம்.

13ம் நூற்றாண்டில் முத்தரையர்கள் பெரும் நிலக்கிழார்களாக இருந்ததை அறியலாம். திருவரங்குளம் பகுதி சோழ நாட்டு எல்லையிலும் வெள்ளாற்றுக்கு தெற்கு பாண்டிய நாடாக இருந்ததையும், தென் பகுதியிலிருந்தவன் பாண்டி முத்தரையன் என்பதும் இக்கல்வெட்டு மூலம் அறியலாம். க.எ.606.

22.அனந்த கோப முத்தரையன்
-----------------------------------------------------
திருச்சி, தஞ்சை மாவட்ட எல்லையில் புதுக்குடி என்னும் சிற்றூருக்கு அருகிலுள்ள பழங்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் பிற்கால சோழர் காலத்தில் வாழ்ந்த நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையரைப் பற்றி குறிப்பிடுகிறது.

இவன் இக்கோயிலில் இரவும் பகலும் எரியக்கூடிய நந்தாவிளக்கு ஒன்று எரிக்க முதலீடாக 240 வெள்ளாடுகளை கொடையளித்துள்ளான். இந்த ஆடுகள் குறையாமல் வளர்த்துக் கிடைக்கும் முதலீட்டில் அந்த விளக்கை எரியச் செய்துள்ளான். (நன்றி. தினமலர்.25/10/2008)

23.கண் திறந்ததும் மயில் பறந்ததும்
-------------------------------------------------------------
திருத்துறைப் பூண்டியிலிருந்து நாகப்பட்டிணம் செல்லும் வழியில் எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இத் தலத்தில், மயில் மீது வீற்றிருக்கும் முருகனைப்பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

சோழருக்கு உட்பட்ட குறுநில மன்னனாக விளங்கிய முத்தரைய மன்னர். முருகப் பெருமானின் திருமேனியை உருவாக்க விரும்பி சிற்பியிடம் சிலை வடிக்கச் சொன்னார். சிற்பி சிலையும் வடித்தான். மயிலையும், அதன்மீது ஆறு முகங்களுடன் முருகப்பெருமானையும் உருவாக்கினான்.

முருகனின் உடலில் வியர்வையும், வெப்பமும் உண்டாயிற்று, இதை அறிந்த முத்தரைய மன்னர் சிலையை காண சென்றான். வேலையை பூர்த்தி செய்துவிட்ட சிற்பி, நன்னாளில் மயிலின் கண்களை திறந்த போது, மயில் மேலே பறக்க முயன்றது. உடனே முத்தரைய மன்னர் சிற்பியிடம், மயிலின் நகத்தில் பின்னத்தை (குறையை) உண்டாக்கக் கூறவே, அப்படியே சிற்பியும் செய்தான்.

மயிலும் பூமியில் நிலைகொண்டது. ஆறு முகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட இப் பெருமானுக்கு மயிலின் இரண்டு கால்களே ஆதாரமாக இருப்பது சிற்பக் கலையின் உன்னதத்தை வெளிப்படுத்துவதாகும். பெரும்பாலான தலங்களில் மயில் தென்புறம் திரும்பியிருக்கும். ஆனால் எட்டுக்குடி கோயிலில் குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பது குறிப்பிடதய்க்கதாகும்.

24.நானூற்றி முத்தரையன்
-----------------------------------------------
திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி பகுதியை நானூற்றி முத்தரையன் ஆட்சி செய்து வந்தான். அந்தச் சமயம் முகமதியர் படை ஒன்று உத்தமர் சீலி நாட்டை பிடிக்கும் நோக்கில் வந்தது. இதனை அறிந்த நானூற்றி முத்தரையன் தனது தலைமையில் எதிர் நோக்கிச் சென்று போரிட்டான்.

நானூற்றி முத்தரையனுக்கும் அரியநாச்சி என்ற மங்கைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் எதிரிகள் படை நடத்தி வந்ததால் திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு, போருக்குச் சென்ற நானூற்றி முத்தரையன் வீரப் போரில் இறந்துபட்டான். இந்தப் போரில் படைத் தலைவனாக குடுமி கட்டிச் சங்கிலி என்பவன் இருந்து போரிட்டான்.

பெண் குலத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் கணவன் என்றே மனதில் நிலைத்துவிட்ட நானூற்றி முத்தரையன் போரில் வீரமரணமடைந்து விட்டதை பெருமையாக கருதி தானும் உடன்கட்டை ஏறித் தெய்வமானால் அரியநாச்சி.

இவர்களின் புகழ்பாடும் வரலாற்று சின்னமாக, உத்தமர் சீலியில், நானூற்றி முத்தரையனுக்கும், அரியநாச்சிக்கும், கல்லில் தெய்வச்சிலையாக வடித்துள்ளனர். நானூற்றி முத்தரையன் வழி வந்தோர் இச்சிலைகளை வணங்கி, பட்டவன் கோயில் என்றும் கருதி குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

25.பிரம்மாதராய முத்தரையன்
------------------------------------------------------
திருச்சி மாவட்டம் ஊற்றத்தூரில்,
உள்ள கல்வெட்டில், பிரம்மாதராய முத்தரையன், மற்றும் அவனது தம்பி
வீர ராஜ கேசரி பன்மாறன் என்பர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

இவன் ஊற்றத்தூர் சோழீஸ்வரமுடையார், நிர்வாகிகளுக்கும், கோயில் பராமரிக்கவும், கால பூசைக்கு திருவிழா நடத்தவும், பொன்னும் மணிகளும், நிலங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் தானமாக வழங்கியுள்ளான். இவர்களின் பெயர்களில் இருந்தே இவர்கள் ஆட்சி பீடத்திலிருந்த, செல்வாக்கு மிக்கவர்கள் என்பதையும் அறியலாம்.

இச்செய்தி தென்னிந்திய
கோயில் சாசனங்கள் பாகம்
11 க.எ. 1081ல் விளக்கப்பட்டுள்ளது.

தொடரும்....

என்றும் அன்புடன்....
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்