வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்

 


வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்

------------------------------------------------------------

வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவ கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை

    1.வேட்டுவர் நாகர் இனத்தவர்.
    2.குரு குலத்தவர்.
    3.கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்.
    4.கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்.

இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம்.

நாகர்
---------

வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார். நாகரும் வேட்டையாடும் இனத்தின் தலைவர்களே ஆவர். எனவே தொழில் ஒற்றுமை கருதி, வேட்டுவரை நாகர் இனத்தினர் எனும் கனகசபையின் கருத்தினைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வ குடிகளுள் நாகரும் ஒருவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால், கொங்கு நாட்டில் பழங்காலத்தில் நாகர்கள் வாழ்ந்தமைக்கோ, நாகர் வேட்டுவரின் முன்னோர் என்பதற்கோ இதுகாறும் சான்றுகள் கிடைக்கவில்லை. என்வே இக்கருத்து பொருத்தமுடையதல்ல.

குரு குலத்தவர்
-----------------------------

புராணங்களும் பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர். பாண்டவரது வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களது கால்வழியினர் சிலர், தென்னிந்தியாவிற்கு வந்து, பொத்தப்பி நாட்டை உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பொத்தப்பி நாடு, தொண்டை நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வம்சத்தில் தோன்றியுள்ள வேந்தருள் நாகராஜன் குறிப்பிடத்தக்கவன். இவ்வேந்தனது மகன் கண்ணப்பன். கண்ணப்பனுக்கு வேட்டுவன், வேடன், காவிலவன், பூவிலவன் மற்றும் மாவிலவன் எனும் ஐந்து மக்கள் இருந்தனர். கண்ணப்பனுக்குப் பின்னர் மூத்த மகனான வேட்டுவன் என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்தினை வேல்சாமி கவிராயர் என்பார் ‘குருகுல வரலாறு’ எனும் நுலில் குறிப்பிடுகிறார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர்
----------------------------------------------------------------------------

மேற்கூறப்பட்டுள்ள கருத்தும் வேட்டுவர் சைவ நாயன்மாராகிய கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர் என்னும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரர்களின் பட்டயங்களிலும், ‘திங்களுர் நொண்டி நாடகம்’[2] எனும் கையெழுத்துப் பிரதியிலும் வேட்டுவரின் முன்னோன் கண்ணப்பர் என்று கூறப்பட்டுள்ளன. புராணகாலத்தலைவர்களுள் புகழ் மிக்கவரைத் தனது முன்னோன் என்று கூறிக்கொள்ளும் வீண் பெருமை பலருக்கு உண்டு. இது அவ்வகையைச் சார்ந்த்தே. கண்ணப்பர் வேட்டுவர் குலத்தவர் என்பதும் உண்மையே. அவரை வேட்டுவ கவுண்டர் வணங்கி வருவதும் உண்மையே. ஆனால், இவரே வேட்டுவ கவுண்டரின் முன்னோர் என்று கூறுதல் பொருந்தாது. இவன் காளகஸ்தி வேடன் என்பது யாவரும் அறிந்ததே.

கொங்கு நாட்டின் பூர்வ குடிகள்
-----------------------------------------------------------

இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.[3] வேட்டுவர்கள் தங்கட்கு அதிக எண்ணிக்கையில் படை தேவைப்பட்டபோது காளஹஸ்தி சென்று, அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.

பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் கார்வெளிவெளு(வேள்) வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவருக்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓர் இனத்தவராகவும் இருக்கலாமோ? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
வேட்டுவரின் பிற பெயர்கள்

வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி, வேட்டுவ கவுண்டர் மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.

வேட்டுவ கவுண்டரின் குலங்கள்
--------------------------------------------------------------

கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டரிடையே பல பிரிவுகள் காணப்படுகின்றன. இவர்களிடையே,
    வேட்டுவர்
    வேடர்
    காவிலுவர் (காவவர்)
    மாவிலுவர் (மாவலர்)
    பூவிலுவர் (பூவலர், பூலுவர்)
எனும் பெரும் பிரிவுகள் இருந்தனவென்று பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன. [1]காவலர் என்போர் நாடு காவல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் போலும். இவர்களே முத்தரையர் ஆகலாம். பூவிலர் நிலம் தொடர்பான அதாவது வேளாண்மை புரிந்தனர். மாவிலர் என்போர் பெரும் வலிமை படைத்தவர். அதாவது போர்த்தொழிலில் ஈடுபட்டவர் எனலாம். இவைகள் தொழில் அடிப்படையில் ஏற்பட்டப் பிரிவுகள் ஆகும்.

வேட்டுவ கவுண்டர்கள் குலம் அடிப்படையிலும் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்தினர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்தனரோ அந்த ஊரின் பெயரைத் தமது குலப்பெயராகக் வைத்துக் கொண்டனர். சிலர் பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி, வீரம் மற்றும் பண்பு ஆகியவற்றையும் தமது குலப்பெயர்களாகக் கொண்டனர்.

வீரப்பெருங்குடியினரான வேட்டுவரிடையே பல குலங்கள் ஏற்பட்டன. இவை எத்தனை என்பதனை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூறவியலாது. எனவே தான் “வேர் வகையை எண்ணினாலும், வேட்டுவர் வகையை எண்ணமுடியாது” எனும் முதுமொழியும் ஏற்பட்டுள்ளது. பழமங்கலம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள “கரைய குலச் சொக்கனேந்தல்” என்னும் பெயர் மூலம், “குலம்” என்னும் சொல் வேட்டுவர் இனத்தில் பண்டைய காலத்திலேய வழக்கில் இருந்துள்ளது என்பதனை உறுதிபடுத்துகிறது.

தொடர்வோம்....

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER