மாலவல்லியின் தியாகம் | சரித்திர நாவல் | முத்தரையர் பகுதி |
||மாலவல்லியின் தியாகம்|| இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 16 - விஷ விருட்சம் அன்று தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் அரண்மனையில், மந்திராலோசனை மண்டபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும், போர் முறை நன்கு அறிந்த நிபுணர்களும், கூட்டங் கூட்டமாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து அவரவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர். புலிப்பள்ளியார் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினார். “அரசே, சபையோர்களே! கொடும்பாளூரில் தான் நாம் முதலில் வேரோடு களைந்தெறிய வேண்டிய விஷ விருட்சம் கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் தான் பழையாறை நகர் சின்னப் பயல் விஜயன் ஒண்டிக் கொண்டிருக்கிறான். அந்த விஷ விருட்சம் வெட்டப்பட்டு விட்டால், சோழ அரசைப் பற்றிய நினைப்புக்கூட யாருக்கும் வராது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்ளுவதற்குத்தான், நான் முக்கியமாகக் கொடும்பாளூர் போனது. போன காரியம் முற்றிலும் வெற்றி. கொடும்பாளூர் அரசன் பூதி விக்கிரம கேசரி கட்டிய மர்மங்கள் நிறைந்த கோட்டையினால் தான் அவர்களுக்கு, பல்லவ மன்னனையே அலட்சியம் செய்யும் அளவுக்குத் துணிச்சல் உண்டாகியிருக்கிறது. நான் அவர்களோடு நட்புப் பூண விரும்புவது போல் நடித்து, கோட்டை ரகசியங்களை யெல்லாம் சாங்கோபாங்கமாக அவர்களின் உதவியைக் கொண்டே அறிந்து கொண்டேன். “அந்தப் பயல்கள் ஆதித்தன், பராந்தகன் இருவரும் சூழ்வினையும், அகம்பாவமுமே உருவெடுத்தவர்கள். நான் ஒரு நாட்டின் அமைச்சன் என்ற மதிப்புக்கூடச் சிறிதும் வைக்காமல் இருவரும் என்னை அவமதித்தார்கள்; ஏளனமாக வாய்க்கு வந்தபடி பேசி, எள்ளி நகையாடினார்கள். நான் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு கோட்டையின் மர்மங்களை யெல்லாம் அறிந்து கொள்ளுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தேன். “கொடும்பாளூர்க் கோட்டை மர்மங்கள் எனக்கு விளங்கி விட்டன. இந்தச் சமயம் நாம் துணிந்து படையெடுத்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான்!” என்று புலிப்பள்ளி கொண்டார் வீறு கொண்டு பேசித் தம் மார்பில் தட்டிக் கொண்டார். “அமைச்சரே! உமது வீரமும் சாமர்த்தியமும் இருக்கட்டும். மதுரை அமைச்சன் அருண்மொழி வேறு அங்கே வந்திருந்தானாம். இதனால் பாண்டியர் சகாயமும் இந்தப் பயல்களுக்குக் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன். அவ்விதம் நேர்ந்தால், போர்த் திட்டங்களை நாம் மிகவும் பலமாகச் செய்ய வேண்டி வரும் அல்லவா?” என்றார் தஞ்சை மன்னர் முத்தரையர். “அது பற்றி மன்னர் கவலைப்பட வேண்டாம். நம் படை பலம் எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக் கூடியதுதான். மேலும், நாம் சோழ ராஜ்யம் உருவாவதற்கு எதிராகப் போரில் ஈடுபடுகிறோம் என்று தெரிந்தால், காஞ்சீபுரத்திலிருந்து பல்லவ மன்னர் நந்திவர்மனின் உதவி எப்படியும் கிடைக்கும். அப்புறம் சோழ ராஜ்யம் உருவாவதென்பது கனவிலும் நிகழக் கூடாத காரியமாகி விடும்!” என்று புலிப்பள்ளி கொண்டார் குதூகலத்துடன் கூறினார். கொடும்பாளூர் மீது படையெடுத்து அந்த மர்மக் கோட்டையைத் தாக்கிச் சின்னாபின்னப் படுத்திப் பெயர் பெற வேண்டும் என்னும் ஆசை புலிப்பள்ளி கொண்டாரின் உள்ளத்தில் நெடு நாட்களாக இருந்து வந்தது. அதுவும் தம் மகன் கோளாந்தகன் தஞ்சைக்குச் சேனாபதியா யிருக்கும்போதே இந்த வெற்றி கிட்டினால் அது அவனுக்குப் பெரிய புகழைத் தந்து விடும் என்ற ஆசையும் அவர் உள்ளத்தில் நீண்ட நாட்களாக இடம் பெற்றிருந்தது. அவனும், கொடும்பாளூர் மீது படையெடுக்கும் விஷயமாகத் தீவிரமாக யோசிப்பதில் ஈடுபட்டுப் பலவிதமான எண்ணங்களோடு உள்ளத்தில் போராடிக் கொண்டிருந்தான். தஞ்சையிலிருந்து கொடும்பாளூர் மீது படையெடுப்பு துவங்கிவிட்டால், அந்தப் படைவீரர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு போலியாகப் போரிட்டுத் தன் வீரத்தைக் காண்பித்தால், கொடும்பாளூர் இளவரசி அனுபமாவின் இதயத்தில் இடம் பெறலாம் என்னும் நப்பாசையும் அவன் உள்ளத்தில் வெகு நாட்களாக இருந்து வந்தது. ‘ஆகா! என் வீரம் மட்டும் அங்கே போர்க்களத்தில் நிலை நாட்டப்பட்டு விட்டால் அது அழகி அனுபமாவின் கவனத்துக்குப் போகாமல் இராது. நம் குடும்பங்களுக்குள் பகைமை உணர்ச்சி எவ்வளவுதான் இருந்தாலும் அவளைப் போல வீர வனிதை ஒரு வீர வாலிபனுக்குத் தான் மாலையிட விரும்புவாள்...’ என்று எண்ணித் தனக்குள் குதூகலப்பட்டுக் கொண்டான். அதே சமயம் இன்னொரு எண்ணமும் அவன் உள்ளத்தில் தலைகாட்டியது. ’கொடும்பாளூர்க் கோட்டை தகர்க்கப்பட்டு, ஆதித்தனும் பராந்தகனும் சிறை பிடிக்கப்பட்டு விட்டால், அவள் பண்டைக்காலத்து அரசிளங் குமரிகளைப் போல் தன் உயிரை அரண்மனை அந்தப்புரத்திலேயே மாய்த்துக் கொண்டு விட்டால்... என்ன செய்வது...?’ இளந்திரையன் இந்த எண்ணத்துக்கு அதிக நேரம் தன் உள்ளத்தில் இடங் கொடுக்கவில்லை. இதை நினைத்தாலே அவன் மூச்சு முட்டியது. அப்படியெல்லாம் ஒரு காலும் நேர்ந்து விடாது என்று நினைத்துத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்; அடிக்கடி ஆசனத்திலிருந்து எழுந்து உலாவுவதும் மீண்டும் அமருவதுமாக இருந்தான். “இப்படியே எதிர்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டு போனால் கடைசியில் விபரீதத்தில் தான் முடியும். நேற்றுத்தான் நான் நந்திபுர நகரத்துக்குப் போய் வந்திருக்கிறேன். அந்த நகரம் வரையில் எதிரிகளின் சூழ்ச்சி தலைகாட்டியிருக்கிறது. நேற்று இரவுக்குள், நந்திபுரத்துக் காவலர் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியை விரோதிகள் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள் என்று செய்தி கிடைத்திருக்கிறது. என் மகன் கோளாந்தகனுக்குத் திருபுவனியைத் திருமணம் செய்து கொள்ளுவதன் மூலம் பலம் தேடிக் கொள்ள விரும்பினேன். இதை அறிந்து கொண்ட பழையாறைச் சோழன் விஜயனின் ஆட்களோ, அல்லது கொடும்பாளூர் உளவாளிகளோ அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். இத்தகைய செயல்களை நாம் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்?” என்று அரசனுக்குத் தூபம் போடும் வகையில் புலிப்பள்ளி கொண்டார் பேசினார். “ஆம்! துளிக் கூடச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. உடனே கொடும்பாளூர் மீது படையெடுத்துத்தான் ஆக வேண்டும்!” என்று சேனாபதி கோளாந்தகன் பதைபதைப்போடு கூறினான். இதைக் கேட்டதும், அப்பொழுதுதான் ஆசனத்தில் அமர்ந்த இளந்திரையன் துள்ளி எழுந்தான். “நந்திபுர நகரத்தில் ஒரு பெண் காணாமல் போனதற்காகக் கொடும்பாளூர் மீது எதற்காகப் படையெடுக்க வேண்டும்?” என்று உரத்த குரலில் கேட்டுக் கோளாந்தகனை எரித்து விடுவது போல் பார்த்தான். குடந்தை நகரிலிருந்து வந்திருந்த சிறை அதிகாரி, “இளவரசர் சொல்வதும் சரிதான்” என்றான். குழப்பமடைந்தவர் போல் உட்கார்ந்திருந்த முத்தரையர், “எல்லாம் சரி தான். கொடும்பாளூர் மீது படையெடுக்காமல் வேறு எதன் மீது படையெடுப்பது?” என்று கேட்டார். “மன்னர் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது...” என்று இழுத்தாற் போல் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார் ஒரு பிரமுகர். “...ஏன் பழையாறை மீது படையெடுத்தால்...?” என்று கேட்டார் இன்னொரு பிரமுகர். “படையெடுப்புக்கு ஏதாவது காரணம் சொல்லித் தான் ஆகவேண்டுமா, என்ன? முதலில் பழையாறை மீது தான் படையெடுத்துச் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்!” என்றான் இளவரசன் இளந்திரையன். “இளவரசரின் அபிப்பிராயம் அவர் வம்ச பரம்பரைக்கு ஏற்ற வீரத்தைக் காட்டுவதாக இருக்கிறது!” என்று கூறினார்கள் சில பிரமுகர்கள். சில சாமர்த்தியசாலிகள் மன்னர் முத்தரையரின் முகத்தையே பார்த்துக் கொண்டே அவர் என்ன சொல்லுகிறார் என்பதையறிந்து கொண்டு அதற்கேற்பத் தலையை ஆட்ட ஆயத்தமாயிருந்தார்கள். இன்னும் சில பிரமுகர்கள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல், தலையைக் குனிந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு யாரையும் பகைத்துக் கொள்ள விருப்பமில்லை. இளந்திரையனின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு கோளாந்தகனால் சும்மாயிருக்க முடியவில்லை. கோபத்தினால் அவன் மீசை துடித்தது. “...பழையாறையைப் போன்ற ஒரு சிறு நகரத்தின் மீது நம்மைப் போன்ற வீரர்கள் படை திரட்டிக் கொண்டு செல்லுவது ஒரு பெரிய காரியமல்ல. அதற்குப் பெரிய படை திரட்ட வேண்டாம்; பத்து வீரர்களை அழைத்துச் சென்று பஞ்சு போல் ஊதி விடலாம். வானளாவக் கோட்டை கட்டிக் கொண்டு அகம்பாவம் பிடித்து அலையும் கொடும்பாளூர் ஆதித்தனையும் பராந்தகனையும் தொலைத்து, கோட்டையையும் தகர்த்து எறிந்து விட்டால், பழையாறை நகர்க் கோழை விஜயனின் கொட்டம் அடியோடு அடங்கி விடும். அதுதான் நம்முடைய கௌரவத்துக்கு உகந்தது!” என்று கூறினான் கோளாந்தகன். “ஆமாம்! ஆமாம்! சேனாபதி கோளாந்தகன் சொல்லுவது போல் செய்வதுதான் நம் பெருமைக்கு ஏற்றது!” என்றார் முத்தரையர். உடனே அங்கே கூடியிருந்த பல பிரமுகர்களின் தலைகள் சொல்லி வைத்தாற் போல் ஏக காலத்தில் மன்னரை ஆமோதிப்பது போல் ஆடின. “...அவர்களுக்குப் பாண்டிய மன்னரின் உதவிப் படை ஏராளமாக வரும்...” என்றார் குடந்தைச் சிறைக்கோட்டக் காவலர். “...அதனாலென்ன? நமக்குப் பல்லவ சைன்யம் துணைக்கு வரும்!” என்றார் புலிப்பள்ளி கொண்டார். “சரி! இனிமேல் யோசனை வேண்டாம். நான் முடிவு செய்து விட்டேன், கொடும்பாளூர் மீது படையெடுப்பதென்று. அமைச்சரே! பல்லவ சக்கரவர்த்தியின் ஆதரவைக் கோரிப் பெற்று மற்ற ஏற்பாடுகளையும் துரிதமாக முடிக்க வேண்டும்!” என்றார் முத்தரையர். எல்லோரும் அவர் சொன்னதை ஒரு முகமாக ஆமோதித்தார்கள். “பூதுகன் காஞ்சீபுரத்துச் சிறைக் கோட்டத்தில் கோரமாகத் தாக்கப்பட்டு இறந்து விட்டதாக ஒரு வதந்தி கிளம்பி, குடந்தை நகரம் முழுதும் அல்லோல கல்லோலப்பட்டுப் போயிற்று. பல்லவ ஆட்சிக்கு எதிராகக் கோஷங்களைக் கிளப்பிக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாகப் பழையாறை வந்து சேர்ந்தனர். கொடும்பையிலிருந்து விஜயனும் அவன் சகோதரி அருந்திகையும் அந்தச் சமயம் பழையாறைக்கு வந்து சேர்ந்தனர். உடனே மக்கள் பெருங் கூட்டமாக அவர்களைச் சூழ்ந்து கொண்டு பூதுகனைப் பற்றி விசாரித்தனர். அவர்களுக்குச் சாதகமாக எதையோ கூறிச் சமாதானப்படுத்தி அனுப்பினான் விஜயன். அதிலிருந்து பூதுகனுக்கு நாட்டில் இருக்கும் ஆதரவு அசாதாரணமானது என்பது தெரிந்தது” என்று குடந்தைச் சிறைக் கோட்டக் காவலர் சொன்னார். அதைக் கேட்ட புலிப்பள்ளியார், “ஆமாம், அது என்னவோ உண்மை. அந்தப் பயல் பூதுகன் ஒரு நாஸ்திகன். எப்படியோ மக்களை ஏமாற்றி யிருக்கிறான். கொடும்பாளூரில் கூட அவனுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. ஆதித்தனும் பராந்தகனும் அவனிடம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். சோழ அரசு உருவாவதற்கு அவன் உதவியைப் பெரும் அளவுக்கு எதிர்பார்க்கின்றனர். நமது கலங்கமாலரையர் சூழ்ச்சி கூட அவன் விஷயத்தில் பலிக்கவில்லை. நமது தஞ்சை ராஜ்யத்தின் சேனாபதிப் பதவியைக் கூடத் துறந்து விட்டு, காஞ்சியில் இருந்து கொண்டு கலங்கமாலரையர் புத்த பிக்ஷுவாக மாறி, சோழ அரசு ஏற்படாமல் இருப்பதற்கு வேண்டிய செயல்களில் முழுமூச்சோடு ஈடுபட்டிருக்கிறார். ஆனால் என்ன பயன்?” என்று சிறிது கலக்கத்தோடு கூறினார். “அமைச்சரே! இனிக் கவலை வேண்டாம். சோழ அரசு வருவது இனி கனவிலும் இல்லை. நீங்கள் காஞ்சிக்கு ஓலை அனுப்பிப் போர் முயற்சிகளைத் துவங்குங்கள்!” என்றார் முத்தரையர். “அப்படியே செய்கிறேன். தாங்கள் உத்தரவு கொடுக்கும் முன்பே நான் படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் துவங்கி விட்டேன்!” என்றார் புலிப்பள்ளி கொண்டார். அந்தச் சமயம் ஒரு ஆள் ஓடி வந்து புலிப்பள்ளி கொண்டாருக்கு அருகே வந்து தயங்கித் தயங்கி நின்றான். சபையில் இருந்த பிரமுகர்கள் எல்லோரும் மௌனமாக அவனையே கவனித்துக் கொண்டிருந்தனர். அவன் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வந்திருக்க வேண்டும். அவசரச் செய்தி கொண்டு வரும் ஒற்றர்களை மட்டும் தான் மந்திராலோசனைக் கூட்டங்கள் நடக்கும் போது அனுமதிப்பார்கள். கை விரலால் சமிக்ஞை காட்டி, புலிப்பள்ளி கொண்டார் அந்த ஒற்றனைத் தம் அருகே அழைத்தார். அவன் அவர் காதோடு ஏதோ ரகசியமாகக் கூறினான். புலிப்பள்ளி கொண்டார் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. சபையில் அமர்ந்திருந்த எல்லாரும் புலிப்பள்ளி கொண்டாரின் முகத்தையே வியப்புடன் பார்த்தனர். “அமைச்சரே! என்ன விசேஷம்? செய்தி எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று மன்னர் முத்தரையர் கேட்டார். “நந்திபுர நகரத்திலிருந்து வந்திருக்கிறது. அந்நகர் காவலர் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் அனுப்பியிருக்கிறார். மிகவும் குதூகலத்துடன் நாம் வரவேற்க வேண்டிய செய்தி. காணாமற் போன திருபுவனியைத் தேடிக் கொண்டு நந்திபுரத்தைச் சேர்ந்த வீரர்கள் இருவர் போயிருக்கின்றனர். அதே சமயத்தில் பழையாறையிலிருந்து விஜயனின் ஆட்கள் இருவரும் அதே காரியத்துக்காக அனுப்பப் பட்டிருக்கின்றனர். இரண்டு பக்கத்து வீரர்களும் காஞ்சீபுரத்துக்கு அருகே சந்தித்திருக்கின்றனர். அங்கே ஒரு மலைக் குகையில் ஜைன முனிவர் ஒருவர் இருக்கிறாராம். அவரிடம் நந்திபுரத்து இடங்காக்கப் பிறந்தார் மகள் திருபுவனியிருக்கிறாள். அவளை அடையாளம் கண்டுபிடித்து நந்திபுரத்து ஆட்கள் தங்கள் ஊருக்குக் கொண்டு போக முயன்ற போது அவளை விடுவித்து, பழையாறை வீரர்கள் நந்திபுரத்து வீரர்களுடன் சண்டையிட்டுத் துரத்தியிருக்கின்றனர். பழையாறை வீரர்களுக்குத் திருபுவனியைத் தேடிக் கண்டு பிடிப்பதில் என்ன சிரத்தை? இதில் ஏதோ சூது இருக்கிறது. இடங்காக்கப் பிறந்தார் இது வரையில் நடுநிலைமை வகித்து வந்தார். இப்பொழுது அவருக்குப் பழையாறை விஜயனுடன் மனக் கசப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, இனி அவருடைய ஒத்துழைப்பு நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். இது மிகவும் ஆர்வத்துடன் வரவேற்க வேண்டிய செய்தியல்லவா?” என்று தாங்க முடியாத குதூகலத்துடன் கேட்டார். சபையில் ஒரு முகமாகச் சந்தோஷ ஆரவாரம் எழுந்தது. “இனி, போருக்கு வேண்டிய ஆயத்தங்களைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்” என்றார் புலிப்பள்ளியார் |
Comments
Post a Comment