குன்னாண்டார் கோவில் தல வரலாறு
குன்னாண்டார் கோவில் தல வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே
அமைந்துள்ளது குன்னாண்டார் கோவில்.
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த குன்னாண்டார்கோவில் (குன்று ஆண்டார் கோவில்) பகுதியில் உள்ள
கல்வெட்டுக்களில் திருக்குன்றக்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஊரில் தாழ்வான ஒரு குன்றின் கிழக்கு பகுதியில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தை சேர்ந்த (கி.பி. 710-715) குகைக்கோவில் உள்ளது. இது பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக ஆண்டு வந்த முத்தரையர்களின்
படைப்பாகும். இது புதுக்கோட்டையில்
உள்ள திருக்கோகர்ணம் குகைக்கோவிலை ஒத்து அமைந்துள்ளது.
குகைக்கோவில் ஒரு கருவறையும், அதற்கு முன்பாக ஒரு சிறிய மண்டபத்தையும் கொண்டது.
குன்றின் உச்சியில் சுப்பிரமணியருக்கு ஒரு கோவில் அமைந்துள்ளது.
இது காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.
குன்று தோறும் குமரன் கோவில் அமைந்த காரணத்தால் பிற்காலத்தில்
இக்கோவில் குன்றாண்டார் கோவில் என
அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில்
குன்னாண்டார் கோவில் என்று மருவியதாக கூறப்படுகிறது.
குகைகோவில் கருவறையின் வெளிப்பக்கம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்கு சுவற்றில் வலம்புரி
கணேசரும், வடக்கு பக்கத்தில்
சோமாஸ்கந்தரும் பாறையிலேயே
வடிக்கப்பட்டுள்ளது.
முற்கால பல்லவர்களின்
குகை கோவில்களில் சோமாஸ்கந்தர் கருவறையின் பின்சுவற்றில் கல்வெட்டாக அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இங்கு கருவறை வெளியே உள்ளது. ஆகம விதிகளின்படி சோமாஸ்கந்தர் உருவ அமைப்பில் சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க இருவருக்கும் இடையில் ஸ்கந்தர்
(முருகன்) குழந்தை வடிவில் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்கு சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க
பார்வதியின் இடப்பக்கத்தில் ஒரு பெண் உருவம் மட்டுமே உள்ளது.
குகை கோவிலுக்கு முன்னால் உள்ள மண்டபங்கள் முத்தரையர்களால் கட்டப்பட்டுள்ள விபரம் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய
வருகிறது. போத்தையன் மண்டபம், நாட்டிய மண்டபம் என்று இந்த மண்டபங்களில் கோவிலுக்கு கொடையளித்த சிற்றரசர்கள் பலரின்
சிற்பங்கள் உள்ளன. குகை கோவிலுக்கு அருகில் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று உள்ளது. இது விஜயநகர பேரரசர்கள் காலத்தின் கலைப்பணியாகும்.
மண்டபத்தின் முகப்பு நான்கு சக்கரங்களுடன் கூடிய தேர் வடிவில் இரண்டு பரிகள் (குதிரைகள்)
இழுப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள காலத்தால் முற்பட்ட கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மன் மற்றும் தந்தி வர்மன் காலத்தை சேர்ந்தவையாகும்.
சாளுக்கிய சோழர்,
பிற்கால பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன.
கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.
இப்பகுதியை ஆண்டுவந்த
பல்லவராயர்கள் இந்த கோவிலுக்கு கொடைகள் பல அளித்துள்ளனர்.
காலத்தால் பிற்பட்ட கல்வெட்டு ஒன்று
திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும்
இவ்வழியாக சென்ற வாணிப பொருட்கள் மீது பதினாறில் ஒரு பங்கு பணம் சுங்கமாக வசூலிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும்
இந்த குன்னாண்டார்கோவிலின் அம்மன் சன்னதி காலத்தால் பிற்பட்டதாகும்.
அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற காணிக்கையாக மஞ்சளை அளிக்கிறார்கள். இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் பக்தர்கள் மஞ்சளை வைத்து வழிபடுகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருநாளில் சிற்பங்களாக அமைந்துள்ள பகுதியில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இங்கு மலை
(குன்றின்) உச்சியில் உள்ள முருகன் கோவிலுக்கு முன்பாக உள்ள கல்தூணில் தான் இந்த விளக்கு ஏற்றப்படுகிறது.
இந்த வெளிச்சம் அந்த ஊர் முழுவதும் ஜோதியாக காட்சி அளிக்கிறது. இந்த நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமே நடத்தப்படுகிறது.
இந்த குன்னாண்டார் கோவிலுக்கு
புதுக்கோட்டையில் இருந்து புத்தாம்புதூர்
வழியாக ஒரு பாதையும், கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை
வழியாக மற்றொரு பாதையும் உள்ளது.
@குன்றாண்டார்_கோவில்_,
புதுக்கோட்டை.
Comments
Post a Comment