சமயம் வளர்த்த முத்தரையர் சான்றோர்கள்


சமயம் வளர்த்த சான்றோர்கள்
____________________________________

1.திருமங்கை ஆழ்வார்;
-----------------------------------------------

திருமங்கை ஆழ்வாரின் தந்தை பெயர் ஆலிநாடன். தாயார் வல்லித்திரு என்பதாகும். இவரின் இயற்பெயர் நீலன் என்று பெற்றோர் பெயரிட்டனர். இவர் காவிரி வளநாட்டில் திருவாலி நாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்கி பல கலைகளையும் வைக்கப்பட்டார்.

இவர் இளமையிலேயே போர் கலையையும் கற்றுத் தேர்ந்தார். இவர் போர்த்திறத்தையும் உடல் வலிமையையும் வனப்பையும் வளர்த்துக் கொண்டிருந்தார், அப்போது நீலன் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையர் மன்னரிடம் படைத்தளபதியானர். சோழர்களை எதிர்த்த அரசர்களை எல்லாம் நீலன் வெற்றி கொண்டார் வெற்றிக்களிப்பில் தனது சேனாதிபதியை ஆலிநாட்டிற்கு அரசனாக்கினார். இந்த நாட்டிற்கு திருமங்கை என்னும் ஊர் தலைநகராக இருந்தது. நீலன் பகைவர்களுக்கு காலன் போல் விளங்கியதன் காரணமாக பரகாலன் என்ற சிறப்பு பட்டத்தையும் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையன் மன்னர் அளித்தார். இதனால் நீலன் என்பவரை திருமங்கை மன்னர் என்றே அனைவரும் அழைத்தனர்.

நீலன் திருமணப் பருவம் அடைந்தார், குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்க வேண்டினார்.

அரசியின் வாக்கிற்கிணங்க அரசன் நீலன் திருத் தொண்டர் களுக்கு அமுது படைத்துப் படைத்து தனது அனைத்து செல்வங்களையும் இழந்தார், தொண்டர்களுக்கு உணவளிக்க வேறு பொண்ணும் பொருளும் இல்லாமையால் திருமங்கை ஆழ்வார் வருந்தினார். ஆனாலும் எப்போதும் போல உணவு வழங்க முடிவு செய்தார் பொருள் வேணுமே கொள்ளையடித்தாவது உணவு அளிக்க முடிவு செய்தார் . கொள்ளையடித்த பொருட்களை கொண்டு உணவளித்து வந்தார். ஒரு நாள் பரகாலர் என்ற திருமங்கை மன்னன் திருமணங்கொல்லையில் திருடும் கூட்டத்தோடு பதுங்கி இருந்தார். இந்த வழியாக வருபவர்களிடம் கொள்ளையடித்து வந்த பொருட்களை கொண்டு திருமால் தொண்டர்களுக்கு உணவு வழங்கி வந்தார், இவ்வாறு வழிப்பறி செய்யும் போது திருமாலின் குறியை, நெற்றியில் திருமண், வைத்திருப்போரிடம் கொள்ளையடிப்பதை தவிர்த்தார்.

அரசனாகிய பரகாலர் எனும் திருமங்கை மன்னன் தவறான வழியில் சேர்த்த பொருளால் தொண்டர்களுக்கு உணவு வழங்குவதை திருமால் விரும்பவில்லை, திருடுவதை தடுக்க நினைத்தார், திருமால் தானே தன் தேவியருடன் நிறைய நகைகளை அணிந்துகொண்டு திருமண கோலத்தில் சுற்றம் சூழ சேனைத்தலைவர் உடன் கூட்டமாக வந்தார், திருமங்கை மன்னன் மறைந்து இருக்கும் இடத்தின் வழியே வந்தனர், திருமங்கை ஆழ்வார் கூட்டத்தை கண்டதும் பாய்ந்து அவர்களை சூழ்ந்து கொண்டார், உங்களிடம் உள்ள எல்லா நகைகளையும் கழற்றி தரச் சொன்னார் மறுத்தால் எங்கள் வாளுக்கு உங்கள் உயிர் பலியாகிவிடும் என்று கூற, அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர். கழற்றிக் கொடுத்த நகைகளை சரி பார்த்தார். திருமால் ஆகிய மாப்பிள்ளையின் வலது கையில் ஒரு விரலில் மட்டும் ஒரு மோதிரம் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார்.

மாப்பிள்ளை வேடமிட்ட திருமால் இந்த மோதிரத்தை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கையாழ்வார் முனைந்து தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்த மோதிரத்தை கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, மாப்பிள்ளையான பெருமாளும் நம் கலியனோ? என்றார். பிறகு நகைகளையும் அணிகலன்களையும் தம் பணியாளர்களை கொண்டு மூட்டை கட்ட சொன்னார் பரகாலன், அந்த மூட்டையை தூக்க முயன்ற அவர்களால் நகர்த்த கூட முடியவில்லை, பரகாலன் என்றதிருமங்கையார் கோபங் கொண்டு மாப்பிள்ளை நோக்கி, மூட்டையை தூக்க முடியாமல் ஏதோ மந்திரத்தை போட்டுவிட்டாய். அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று அதட்டினார்.

மாப்பிளை (பெருமாள்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கையார் திருமால் அருகே சென்றார். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னர் அகக்கண் திறந்து பெற்ற தாயினும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்" என்று வாயார நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் பேரருள் பொங்கும் கண்களால் திருமங்கை ஆழ்வாரை பார்த்தார். பிறகு தோன்றிய அனைவரும் மறைந்து விட்டனர் இந்நிகழ்ச்சியை இன்றும் பல்வேறு இடங்களில் "வேடு பறி நிகழ்ச்சி"_யாக அரசு அறநிலையத் துறை மூலமாக நடத்தி வருகின்றனர்.

திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.

"வாடினேன் வாடினேன் மனத்தாற்
பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
கூடினேன், கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன், உயவதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்"

என்று தொடங்கி பத்துப் பாசுரங்களைப் பாடினார், திருவரங்கம் சென்றார், திருமங்கை மன்னன் பதவியை துறந்து, திருமாலை வணங்கி பாடி திருமங்கை ஆழ்வார் ஆனார், வைணவ நெறிகளையும், செந்தமிழையும் கவியாகப் பாடி வளர்த்தார், பிற ஆழ்வார்கள் பாடாத சித்திரக் கவியை ஏழு ஒற்றைப்படை தத்துவ அடிப்படையில், செந்தமிழால் கவி பாடி (திருவெழு கூற்றிருக்கை) சிறப்பித்தார். இக்கவிகள் கும்பகோணம் சக்கரபாணி கோயில் தெற்கு சுவற்றில் உள்ளது. ஆழ்வார் களிலேயே அதிகமாக 87 தலங்களுக்குச் சென்றார், தமிழ் பாடல்கள் பாடி மங்களாசாசனம் செய்தார், திருவரங்கத்தில் பல கட்டிடப் பணிகளை செய்தார், இவற்றையெல்லாம் "கோயில் ஒழுகு" ஆங்கில நூலில் டாக்டர் ஹரிராம் சிறப்பித்து எழுதியுள்ளார். இவரால் கட்டப்பட்ட கோயில்கள், கட்டிடங்கள், மதில்கள், நெற்களஞ்சியம், சமையல் கூடம், படித்துறை, ஆகியவற்றை நூலில் தெரிவித்துள்ளார் திருவரங்கத்தில் நான்காம் திருவீதியின் திருச்சுற்று மற்றும் கோபுரங்களையும் கட்டியுள்ளார். இக்கோயிலின் நான்காம் திருச்சுற்று வடக்கு பகுதியில் "காந்தார புட்கரணி" என்ற வட்டவடிவ குளம் அதைத்தொடர்ந்து ஆலி நாடன் வீதியின் வடக்குப் பகுதியிலும் திருநடை மாளிகை அமைத்தார். வடக்கு கோபுரத்தில் உள்ள அழகிய சிவபெருமான் கோயிலும், விமானமும், திருப்பண்டாரம், திருக்கொட்டாரம் கட்டி முடித்தார். இந்த மதிலுக்கு உட்பட்ட பிரகாரத்திற்கு ஆலிநாடன் திருவீதி என்ற பெயர் இன்றும் உள்ளது. இங்கே திருமடைபள்ளியையும் கட்டினார்.

நாகப்பட்டினத்திலிருந்து தங்க புத்தர் சிலையை எடுத்து வந்து இங்கே கோயில் கருவறை விமானத்துக்கு பொன் கூரை அமைத்தார், ஐந்தாவது திருச்சுற்றில் "முத்தரசன் குருடு" என்ற ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார், இரண்டாவது சுற்றில் தபோலோகம் என்ற அழகிய கிளி மண்டபத்தை கட்டினார், திருமாமணி மண்டபம், 100 கால் மண்டபத்தை கட்டினார். நான்காவது சுற்றில் தெற்கு வடக்கு கோபுரங்களை கட்டினார், கொள்ளிடம் தென்கரையில் தசாவதாரக் கோயில் கட்டி கர்ப்பகிரகத்தில் 10 சிலைகளை அமைத்தார், தனக்கென ஒரு கோயிலையும் கட்டினார், கொள்ளிடக் கரையில் இறந்தோர் பரமபதம் அடைய நிலத்தை வாங்கி மண்டபம் கட்டினார், இந்த படித்துறை "திருமங்கை மன்னன் படித்துறை" என்றே அழைக்கப்படுகிறது.

திருவரங்கத்தில் மேட்டு அழகிய சிங்கர் சன்னதியை ஏற்படுத்தினார். உத்தமர் கோயிலில் மதில் கட்டினார், கலியுக ராமன் என்பவர் திருமங்கையாழ்வார் பெயரில் மடம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். கும்பகோணம் ஆரா வமுத பெருமாள் கோயிலுக்கு சித்திரை தேர் செய்து கொடுத்தார் இதை அவரே மங்களாசாசனம் செய்தார். அரங்கநாதர் கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு வேய்ந்தார், திருவரங்கம் அரங்கநாதர் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்தார் தீர்த்தம் மாலை பரிவட்டம் கொடுத்து மறைந்தார்.

திருமங்கை ஆழ்வார் உறையூர் சென்றார் ஒரே ஒரு பாடல் பாடி மங்களாசாசனம் செய்தார். உத்தமர் கோயில் சென்று தங்கியிருந்தார். திருவெள்ளறை சென்றார் 10 பாக்களில் பாடி மங்களா சாசனம் செய்தார்.

கோவிலடி சென்றார் 10 தமிழ் பாடல்களைப் பாடி மங்களாசாசனம் செய்தார். திருக்கண்டியூர் சென்றார் ஒரு பாடல் பாடி மங்களாசாசனம் செய்தார். இதுபோல 87 க்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சென்றார். பைந்தமிழ் கவிபாடி அத்தனை கோயில்களிலும் மங்களாசாசனம் செய்தார். மொத்தமாக 1253 பாடல்களை தெய்வத்தின் மீது பாடியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்திய கிரிநாதர் பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளார், அங்கே பாடல்கள் பாடியுள்ளார் இக்கோவிலை குடைவித்தவர்  முத்தரையர் மன்னராவார்.

திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில், இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில், சீர்காழி ஒன்றியத்தில் வேதராஜபுரத்தில், தீர்த்தவாரி மஞ்சள் நீர் குளியலுக்காகவும் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது, கருடசேவை நிகழ்ச்சியின்போது திருநகரில் இருந்து அவர் பிறந்த திருநாங்கூர் கொண்டு வந்து தங்க வைத்து தீர்த்தவாரி நடைபெறுகிறது. திருவாழி பகுதியில் ஏராளமான முத்தரையர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். நான்கு நாட்களில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை திருமங்கை ஆழ்வாரை தூக்கி சென்று சேர்ப்பதை முத்தரையர் மட்டுமே முழு உரிமையுடன் செய்கின்றனர்.

பழங்காலம் தொட்டு இன்று வரை திருமணங்கொல்லை என்ற கிராமத்தில், பங்குனி மாதம் "வேடுபறி விழா" நடத்தி வருகின்றனர். இந்த வேடுபறி நிகழ்ச்சியில் "முத்தரையர்க்கு பரிவட்டம் கட்டி" கோயிலில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது. இந்தச் சமயம், திருமங்கை ஆழ்வாரரைம், பெருமாளையும் சுமந்து செல்லும் வழக்கம் முத்தரையர் மட்டுமே ஆகும்.

இதேபோல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழா தொன்றுதொட்டு இன்றுவரை வைகாசி மாதம் நடைபெறுகிறது. இங்கேயும் முத்தரையர் மக்களுக்கு பரிவட்டம் கட்டி கோயில் மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இங்கே முத்தரையர் மக்கள் மண்டபம் கட்டி சாமியை இங்கே கொண்டுவந்து வேடுபரி நிகழ்ச்சி நடத்துகின்றனர். "ஸ்ரீ திருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம்" என தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்கு கல்வெட்டில் பெயர் பொறித்துள்ளனர்.

திருவரங்கத்தில் வேடுபரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருமங்கை ஆழ்வார் பிறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த திரு பெரியண்ணன் முத்தரையர். அறங்காவலர் துறையினரால் மரியாதைகள் செய்விக்கப்பட்டு கவுரவிக்கப் படுகிறார், இவரது குடும்பத்தில் ஒருவர் திருமங்கை மன்னன் வேடமிட்டு கையில் வாள் ஏந்தி வர, மேளதாளத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் நோக்கி வருகின்றனர், கோவிலின் முழு மரியாதையுடன் வேடுபறி விழா முடிவு பெற்று, மீண்டும் பெரியண்ணன் மற்றும் அவர் சார்ந்தோரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் பழக்கம் இன்றும் நடைபெறுகிறது. இந்த நடைமுறை திருமங்கை ஆழ்வார் முத்தரையர் என்பதற்குச் சான்றாக உள்ளது.


2.அருள்திரு கண்ணப்ப நாயனார்;
-------------------------------------------------------------------

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அருட்திரு கண்ணப்ப நாயனார். இவர் ஆந்திர மாநிலம் கடப்பை மாவட்டத்தில் உள்ள புல்லம்பேட்டை வட்டத்தில் பொத்தப்பி என்ற ஊரைச் சேர்ந்தவர் இவ்வூர் அரக்கோணம் வழியில் இராசாம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் வடக்கில் உள்ளது. இந்த பொத்தப்பி நாடு. சோழர் ஆட்சிக்குட்பட்ட அதிராஜேந்திர மண்டலத்தின் உட்பிரிவாகிய மேற்பாக்கை (கடப்பை மாவட்டம்) துணை பிரிவிலுள்ள நாடாகும்.

இந்தப் பொத்தப்பி நாடு காடும், மேடும், மலைகளும், நிறைந்த வளமான நாடாகும். வளம் நிறைந்த பள்ளத்தாக்கில் இந்த நாடு உள்ளது. இப்பகுதியில் அடர்த்தியான காடுகள் நிறைந்து உள்ளதாகவும் இந்த அமைப்பிற்கு ஏற்ப இங்குள்ள மக்கள் வில் அம்பு கொண்டு வேட்டையாடும் பழக்கம் உடையவர்கள். திருத்தொண்டர் புராணத்தில் கண்ணப்ப நாயனார் வெஞ்சொல் வேட்டுவர் என்ற வேடர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது. கல்லாட தேவனார் கூட கண்ணப்ப நாயனாரை திரு வேட்டுவர் என்றே அழைக்கின்றார்.

உடுப்பூர் என்னும் ஊரிலே வேட்டுவர் குல வேந்தனாக இருந்தவர் நாகன் ஆவார். கண்ணப்பரின் தாயார் பெயர் தத்தை என்பதாகும். திருக்காளத்தி கோவில் இரண்டு குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ளது. ஒரு குன்றின்மீது கண்ணப்பேசுவார் ஆலயமும் கண்ணப்பர் உருவமும் இங்கே உள்ளது. இங்கேயுள்ள மணிகண் பேசுவார் ஆலயத்தில் கண்ணப்பர் சரிதமும் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் இரண்டாம் வீரராஜேந்திரன் ஆவார்.

கண்ணப்பர் குல மரபின் படி வேட்டை ஆடினாலும் வீரமும் தீரமும் கொண்டவராக விளங்கினார். வேட்டையாடச் சென்று வேட்டையாடிய விலங்குகளின் தசயை சுட்டு இறைவனுக்கு படைக்கும் குணம் கொண்டிருந்தார். இவ்வாறு குடுமித் தேவர் என்னும் தெய்வத்திற்கு படைத்து வந்தார். இந்த தெய்வத்தை வணங்கி பூஜை செய்யும் பிராமணர் கோயிலில் எலும்புகளும் இறைச்சிகளை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றையெல்லாம் அகற்றி நாள்தோறும் வணங்கி வந்தார். யார்.? இந்த இறைச்சியை படைப்பது என்ற குழப்பத்தில் இருந்த பிராமணர் கனவில் தெய்வம் தோன்றி வேட்டுவர் ஆகிய கண்ணப்பன் செய்வதாக கூறினார்.

கண்ணப்பர் குல வேட்டுவர் சிவபெருமானுடைய குழந்தைகள் என்றும் சிவபெருமானே தங்களை படைத்தவர் என்றும் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர் தெய்வத்தை போற்றுவதில் முதன்மையானவர்களாக இருந்தனர் இன்றும் தெய்வத்தை போற்றியும் வருகின்றனர்.

செய்யாறு வட்டம் திருப்பனங்காடு, சிவன் கோயிலில், வேட்டை விச்சாதரர் என்பவர், கண்ணப்பர் வம்சத்தைச் சேர்ந்த பக்தர் இக்கோயிலுக்கு நிலக்கொடை அளித்து உள்ளார். இந்த கொடைக்கு அழிவு செய்பவர் கண்ணப்பர் வம்சம் இல்லாதவர் ஆவர் என எச்சரித்து கல் வெட்டியுள்ளார். (க.தொகுதி 22,பகுதி1. க.எண் 247)

இவ்வளவு சிறப்பு பெற்ற கண்ணப்பர் தனது குடும்ப அந்தஸ்துகளை கூட கவனிக்காமல், வேட்டைக்குச் செல்வது வேட்டைப் பொருளை சுட்டு சிவபெருமானுக்கு படையல் செய்து மகிழ்ந்திருக்கிறார். இந்த கறியை சுட்டு படைக்கும் பழக்கம் முத்தரையர்களின் குலதெய்வ வழிபாட்டில் இன்றும் நடைமுறையில் இருப்பது அதன் வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. தங்களின் காவல் தெய்வமான முனீஸ்வரருக்கு பூசையின் போது வெட்டும் கிடாயில் உள்ள ஈரல் மற்றும் நல்ல கறிகளை தனியாக எடுத்து காய ஆனா, குச்சிகளில் கோர்த்து தீயில் சுட்டு அப்படியே குச்சிகளோடு படைப்பதும் பின்னர் பந்தியில் பங்காளிகளுக்கு ஒவ்வொரு துண்டாக கொடுப்பதும் இன்னும் வழக்கில் உள்ளது.

இப்படி வேட்டையாடுவதும் சூட்டாங்கறி படைப்பதும் தினசரி நடைபெற்றதை மெச்சி கண்ணனுடைய தெய்வ பக்தியை சோதிக்க சிவபெருமான் விரும்பினார். சோதனையையும் செய்தார் சோதனையில் கண்ணப்பர் வேட்டையாடி கோயிலுக்குத் திரும்பும் சமயம் சுவாமியும் ஒரு கண்ணில் ரத்தம் வழிய கண்டார் கண்ணப்ப நாயனார் செய்வதறியாது திகைத்தார் ரத்தம் வடிந்த சிவபெருமானின் கண்ணை எடுத்து தனது நல்ல கண்ணை தோண்டி பொருத்தினார்.

கண் பொறுத்தியதை கண்டு மனம் மகிழ்ந்தார் தனக்கு ஏற்பட்ட வழி தான் செய்த காரியங்களை எல்லாம் மறந்துவிட்டு ஒன்றுமே தனக்கு நிகழாதவர் போல சிலையில் உள்ள கண்ணை நோக்கினார். சிலையின் பிரிதொரு கண்ணில் ரத்தம் வர கண்டார் மனம் துடித்தார் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தார். தனது மற்றொரு கண்ணையும் எடுத்து பொருத்த நினைத்தார் இரண்டு கண்களையும் எடுத்துவிட்டால் சிவபெருமானின் மற்றொரு கண் இருக்கும் இடம் தெரியாமல் போகும் என எண்ணினார். இருக்கும் இடத்தை அறிய தனது ஒரு காலை தூக்கி பாதத்தால் சிவபெருமானின் ஊனமுற்ற கண்ணில் வைத்து மூடிக் கொண்டு தனது அம்பை எடுத்து தனது பிறிதொரு கண்ணையும் தோண்டி எடுத்தார் ஆண்டவனுக்கு கண்ணை பொருத்தினார் மனம் மகிழ்ந்தார்.

தெய்வத்தை போற்றி வழிபடுகின்ற எண்ணத்தில் திளைத்த கண்ணப்பர் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து தெய்வத்தின் மீதான பற்று உடும்புப்பிடி போல கொண்டு தனது இரு கண்களில் இருந்து வழியும் ரத்தத்தையும் வலியையும் பொருட்படுத்தாது தெய்வத்தை நிறுத்தி விட்டோம் என்ற மன மகிழ்ச்சியில் திளைத்தார் இவ்வாறு தான் செய்த பக்தி காரணமாக காரணத்தை மெச்சிய சிவபெருமான் ஆட்கொண்டு கண்ணப்பனை போற்றி கண்ணப்ப நாயனார் ஆக்கினார். கண்ணப்ப நாயனார் அன்று முதல் பல கோவில்களுக்குச் சென்று பக்தி மார்க்கத்தில் திளைத்தார் இவ்வாறு பக்தி மிக்க காரியம் நடைபெற்றது காளஹஸ்தி கோயில் என்றே வழக்கில் உள்ளது.

ஆனால் வரலாற்று வல்லுநர் இ.டெசிங்கு செட்டி என்பவர் வளையர் தென்னகத்தின் பூர்வீக குடிகள் என்றும் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையை தாயகமாக கொண்டவர்கள் என்றும் கூறுகின்றார். இவர் வட இந்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி மதுரை மாவட்டம் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் டாக்டருக்கான ஆய்வு நூலை எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். The valayar society and religion page 57ல் கீழ்க்கண்ட வரலாற்றை தெரிவிக்கிறார்.

கண்ணப்பர் தனது கண்களை தோண்டி எடுத்தது பிரான்மலையில் வடபுறத்தில் உள்ள கோயிலில் தான் நடைபெற்றது. இங்கே சருகு வளையர் நிறைந்துள்ளனர். இக்கோயில் மலையின் அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலின் சுவற்றில் சிவந்த நிறத்தில் குருதி பட்ட இடம் காணப்படுகிறது இந்த குருதி கண்ணப்பர் தன் கண்ணை பிடிங்கி போது கொப்பளித்த ரத்தம் என்கிறார் இதனை இப்பகுதி மக்கள் பயபக்தியுடன் நம்புகின்றனர் இத்தகைய ரத்தக்கறை இருப்பதை இவ்வாசிரியர் நேரில் பார்த்து நம்பிக்கை கொண்டுள்ளார் இவரும் இந்த உண்மையை உணர்ந்து கண்ணப்பர் தனது கண்ணைத் தோண்டி எடுத்த இடம் பிரான்மலை கோயிலே என்கிறார்.

மற்றொரு வரலாற்று செய்தியாக மதுரை மாவட்டத்தில் அழகர் கோயில் பகுதியில் வேட்டையாடச் சென்ற வளையர் வனத்திலே கிழங்கு தோன்றியுள்ளார். தோண்டும்போது அழகிய சிலை ஒன்று கிடைத்துள்ளது இச்சிலையை வெளியில் எடுத்து பச்சை கூடாரம் கட்டி பூசாரியாக இருந்து பூசை புனஸ்காரங்களை செய்து வந்துள்ளார். வெட்டுப்பட்ட சிலையிலிருந்து கண்களில் ரத்தம் பீறிட்டு வந்தது உடன் வேடன் வளையன் தனது கண்களைத் தோண்டி எடுத்து சிலைக்கு வைத்து பொருத்தினார் என்ற வரலாறும் உள்ளது. The valayar society and religion page 57.

மேலும் இந்த ஆசிரியர் தனது ஆய்வு நூலில் நிரூபித்து உள்ளவாறு, பிரான்மலை பகுதி வலையர்கள், வேடர், வளையர், மூப்பன், நாயக்கர், நாயுடு, தலையாரி நாயுடு, என்ற பெயரில் தமிழ்நாடு தவிர ஆந்திரா மாநிலத்திலும் நாயக்கர், காவல்காரன், தலையாரி நாயக்கர் என்ற பாளையக்காரர், தெலுங்கு நாட்டில் முதிராஜ் தலாரிலாலு, என்ற பெயர்களிலும் முத்திரியன் (பாளையக்காரர்) தெலுங்கில் முத்திராசன் என்றும் தோரா நாயுடு என்றும் அம்பலக்காரர், சேர்வைக்காரர், வன்னிய குல முத்துராஜா, ஊராளிகள், வேட்டுவர்கள், வல்லம்பர், ஆகிய பெயர்களில் தமிழகத்திலும் நெல்லூர், சித்தூர், அனந்தபூர், கடப்பா, கர்னூல், கிருஷ்ணா, திருவாங்கூர் வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பரந்து விரிந்து வாழுகின்றனர். இவர்களில் ஊராளி (கவுண்டர்) வேட்டுவ (கவுண்டர்) மற்றும் வல்லம்பர் என்ற மூன்று பிரிவினரும் தனித்து முத்தரையர் பிரிவினின்றும் தொடர்பை அறுத்துக் கொண்டு உள்ளனர்.

முத்தரையர் பல பிரிவு சாதிகளில் வாழ்ந்தாலும் நாங்கள் யாவரும் ஒரே இனத்தவர் முத்தரையர் என்று உறுதி கொண்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் முத்தரையர் சங்கம் என்றே வைத்துள்ளனர். இவர்கள் ஆந்திர மாநிலத்தில் முதிராஜ் சபா என்ற பெயரிலும் முத்துராஜ் என்ற பெயரிலும் குறிப்பாக மும்பை, பூனா, சோலாப்பூர், பண்டரிபுரம், மத்திய பிரதேசத்தில் நாகபுரி, சாந்தா, வார்தா, பிளாஷ்பூர் ஆகிய இடங்களில் தெலுங்கு முதிராஜ் என்ற பெயரிலும் மேற்குவங்கத்தில் அகூரி, உக்கிர ஷத்திரியர் என்ற பெயர்களில் கேஸ், பாயி, சமண்டா என்ற பெயரிலும் ராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவில் கோலிகள் என்ற பெயரிலும் பரந்து விரிந்து வாழுகின்றனர்.

மேலும் 1) ஆந்திர மாநிலத்தில், முட்டுராஜ்லு, முத்துராச்சா, முத்துராஜா, முடிராஜ், என்றும் இதற்கு பட்டப் பெயராக, தொரலு, பாளையக்காரலு நாயுடு, ராவ், முடிராஜ் என்ற பெயரிலும்.

2) தெலுங்கானாவில் முட்ராஸ்ரி, முட்ராஜ்லு, முட்ராஜ், முடிராஜ், கோலி, கப்ளக்காரு, கப்பேறு, தென்னுக்குல்லு, தெலாக என்ற பெயரிலும் அதற்கு பட்டப் பெயராக பாளையக்காரர் தொரலு, நாய்க், ஈபாண்டு, காவல்காரர், மான்க்பாடு, மானேஸ்வர், ஸ்ரீ மானேஸ்வர், முடிராஜ் என்ற பெயரிலும்,

3)கர்நாடகத்தில் காப்பேறு, பாளேக்காரர், முடிராஜ், கோலி, கங்கா, மின் கங்க மாதா, இதற்கு பட்டப் பெயராக நாய்க், நாயுடு, ராவ் என்ற பெயரிலும்,

4) மகாராஷ்டிராவில் கோலி, மகாதேவ் கோலி, முடிராஜ் என்றும்,

5) மத்திய பிரதேசத்தில் முட்ராசி, முட்ராசா, முடிராஜ் என்றும்,

6) உத்தரபிரதேசத்தில் கோலிகள் என்றும்,

7) மேற்கு வங்கத்தில் அகூரி, உக்கிர ஷத்ரியர், பட்டப் பெயராக காஸ்பால் சமண்டா என்ற பெயர்களிலும் முத்தரையர்கள் பரந்து விரிந்து வாழுகின்றனர்.

(சான்று: நாட்குறிப்பு 1993 ஆந்திரப்பிரதேச முடிராஜ் அலுவலர்கள் நலம் மற்றும் கலாச்சார அமைப்பு) பக்:20,23.

இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றினர் சமீன்களையும் பாளையப்பட்டுக்களையும் கலைத்தனர் கலைக்கப்பட்ட ஜமீன்தார்களின் பூர்வீக வரலாற்றினை அவர்கள் மூலமாகவே எழுதி வாங்கி பதிவு செய்துள்ளனர். ஆர்.க.குழந்தை வேலன் எம்.ஏ.,

1)அந்தியூர் வட்டம் : சரம்பள்ளிப் பாளையப்பட்டு;
--------------------------------------------------------------

பூர்வீகத்தில் சாலிவாகன சகாப்தம் 1200 க்கு மேல் வேடர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். சேர சோழ பாண்டியர்க்கு பிறகு வேடர் பாளையப்பட்டாக இருந்தது. தலைமையிடம் அமராவதிப் பட்டணம் இன்று ஓமலூர் தாலுகா வில் அமரகுந்தி எனப்படுகிறது. திருமலை நாயக்கர் காலத்தில் இவர்கள் கோமாறன் செட்டி முதலியார் என்று பெயர் மாறி ஆட்சி புரிந்தனர் இவர்கள் அனைவரும் வேடனாக இருந்து அரசாண்ட கண்ணப்பர் வழி வந்தவர்களே அவர்.

2) புரவிப்பாளையம் கோபண மன்றாடியார் வம்ஷாவழி:
--------------------------------------------------------------

பூர்வீகத்தில் தொண்டை மண்டலத்தில் வேட ஜாதியில் 160000 பேரில் நாகன் மற்றும் தத்தை தம்பதியினர் ஸ்ரீகாளஹஸ்தி ஈஸ்வரரை வேண்டி, திண்ணன் என்ற மகனைப் பெற்றனர் தெய்வ பக்தியால் திண்ணன் கண்ணப்ப நாயனார் ஆனார்.

சேரமான் பெருமாள் வேடர்களை கொங்கு தேசத்திற்கு அழைத்து வந்து பூந்தோட்டம் காக்க "பூவலர்" என்றும் மெய்க்காவலுக்கு "வலவர்" என்றும் கள்ளர்களை ஒடுக்க "வேடன்" என்றும் பெயரிட்டு பணிகள் கொடுத்தார். கோப்பணன் சேரமானின் அபிமானம் பெற்று வேடர் தலைவனானன். சேரனை பாண்டியன் வென்றான். கலியுகம் 5116 கோப்பணன் பட்டம் கட்டப்பட்டான். "மன்றாடி" என பெயர் பெற்றான்.

3) நிமிந்தப்பட்டி நீலியப்ப கவுண்டன் வம்சாவளி;
--------------------------------------------------------------------

தாராபுரம்' தூத்துக்குடி' அரவக்குறிச்சி' தாலுகாவை சேர்ந்த நிமிந்தப்பட்டி கிராமத்தில் இருக்கும் பட்டக்காரர் நீலியப்ப கவுண்டன் என்று பூர்வீக பாளையப்பட்டுக்காரன், பூர்வீகத்தில் காளை அஸ்திப் பிரதேசத்திலே முத்துராசா சாதி என்று பெயர் பட்டவர்களாகி, அந்த ராஜ்யத்தில் பாளையக்காரர்களாகி இருந்தனர். கூன்பாண்டிய ராஜாவின் நிரூபம் மூலம் முத்துராஜாக்களில், நீலியப்பன் என்பவனை படையுடன் அணுகி திருப்பதி திருவண்ணாமலை வந்து காவிரிக்கு தெற்கே வந்து வெற்றி கொண்டனர். சாலிய வாகன சகாப்தம் 1301 முதல் ஆண்டனர்.

4) வள்ளல் கவுண்டன் வம்சாவளி;
------------------------------------------------------------------

தாராபுரம் தூத்துக்குடி அரவக்குறிச்சி தாலுகாவில், கசுப்பாவிற்குச் சேர்ந்த மஞ்சரா பூமி, ஸ்தலத்திலே இருக்கும் வள்ளற் கவுண்டன் என்ற பட்டக்காரன். பூர்வத்தில், குறுநில வம்ஷமான செத்திரிய சாதியில் ஸ்ரீ காள ஹஸ்தி புரத்தில் உடுப்பூரில் நாகராச என்றவர் குமாரன் திண்ணன் என்ற வேட குலனென்றும் கண்ணப்பனென்றும் பேராச்சுது. அந்த வம்ஷத்திலே உள்ள பரம்பரைக்கு வேட்டுவ ஜாதி எனப் பேர் உண்டாச்சுது.

வேடர் குல ஜாதியில், கால ஹஸ்தி பிரதேசங்களுக்கு ராசாவாக இருக்கப்பட்ட வம்ச பரம்பரையிலே முத்துராஜாக்கள் கூட்டமென்று பேர் பிரசித்தப்பட்டுள்ளது. சேர சோழ பாண்டிய நாட்டிலே வல்லுவக்காணும், அச்சுத களப்பாளனும், ஒட்டியன் ஆகியோரை அடக்கி, முத்துராஜா என்ற பட்டம் கொடுத்து பட்டாபிஷேகம் செய்து விச்சார்.

தலையூரில் பாளையம் ஏற்பட்டது. மணலூரு சீமையில் பட்டதாரியான சவுந்தரபாண்டியன் வேட்டுவன் நாளையில், பாண்டியர் சோழர் போர் ஏற்பட, மணலூர் பாளையம்பட்டாரை கல் கொண்டுவர பாண்டியன் உத்தரவிட்டான். கல்லு எடுத்து கொண்டு வருகிற வேலை வெட்டி வேலை என்றும், அப்படி வெட்டி வேலை நாங்கள் செய்கிறதில்லை என்றும் சொல்ல, பாண்டியர், வேடர் தலைவர் சமைக்க கல் வேணும் என்று கூற தலையை வெட்டி அடுப்பு வைத்து சமையல் பண்ணுவேன் என்று கூறினான். உடன் அப்படியே செய் என்று பாண்டியன் கூற, சமையல் ஆகி தலையும் வெடிக்காமல் இருக்க கண்ட பாண்டியன், மிகச் சந்தோஷப்பட்டு "இவாளிடத்தில் சாத்திரமும் தர்மமும் இருக்கிறது" எனக்கூறி இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் எனக் கூறி மணலூர் நாட்டாரென பாளையக்காரருக்கு "தலையநாடு" "தலையூர் நாடு" என்றும் இவர்களுக்கு பட்டக்காரர் என்றும் சவுந்திர பாண்டிய பாளையக்காரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

இவ்வாறு கண்ணப்பர் வழிவந்த முத்தரையர்கள் தென் மாவட்டங்களில் கண்ணப்பர் குல வலையர் என்ற பெயரிலும் கண்ணப்பர் நாயக்கர் என்ற பெயரிலும் வாழுகின்றனர். மதுரை மாவட்டத்தில் கண்ணப்பர் குல வலையர் சங்கம் இயங்கி வந்தது.

தமிழ்நாட்டில் வாழும் முத்தரையர்கள் 29 சாதிகளின் பெயரில் வாழுகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பிற்பட்டோர் நலத்துறையில் அரசு ஆணை எண் 15ல் நாள் 22.02.1996ல் முத்தரையர் என்றே பெற்றுள்ளனர். இந்த ஆணையில் வரிசை எண் 7 இல் கண்ணப்பர் குல வலையர் என்ற பிரிவையும் சேர்த்தே வாங்கியுள்ளனர்.

இவ்வாறு வேடர் குல வலையர் இனத்தைச் சேர்ந்த கண்ணப்ப நாயனார் வம்சமான முத்தரையர்கள் நாடு முழுக்க பரவி வாழ்கின்றனர்.


3.இடங்கழி நாயனார்;

-------------------------------------------


புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார்.


இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது.


மன்னர் இடங்கழி நாயனாரின் தலைநகரான கொடுமை இன்னும் கொடும்பாளூரை சிலப்பதிகாரம் மிகச்சிறப்பாக வர்ணிக்கிறது. இவ்வூர் குறிஞ்சி நிலமாகிய எயினர் வாழும் இவ்வூரில், பொன்னம்பலத்து முகட்டை கொங்குநாட்டு பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழர் மரபில் இருக்கு வேளிர் என்ற குறுநில மன்னர் குலத்திலே இப்பெரியார் பெரும் புகழுடன் ஆட்சி செய்தார். இவர் சிவபெருமானுக்கு திருவடி தொண்டு புரிவதே கடமையாக கொண்டிருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சைவ நெறியும் வைதீக நெறியும் வளர்ந்தது. சிவன் கோவில்களில் சிவாகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற்றன.


இவ்வாறு சிறப்புற்ற ஆட்சியில் தவசீலர் ஒருவர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தார். இவரிடம் திருவமுது படிக்க பொருள் ஏதும் ஒரு நாள் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்த அந்த தவசீலர் எப்படியாவது நெல் பெற எண்ணி இடங்கழியாரின் அரண்மனைக்குள் நள்ளிரவில் திருடனைப்போல் புகுந்தார். நெல் களஞ்சியத்தை திறந்து நெல்லை எடுத்தார்.


இரவுக் காவலர்கள் இதை கண்டு அந்த தவ சிலரை பிடித்து மன்னரிடம் கொண்டு சென்றனர், மன்னர் இடங்கழியார் கோபம் கொள்ளாது, "ஏனய்யா நெல்லை திருடினீர்" என்று கேட்டார், இதற்கு இந்த தவசீலர் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வது எனது வழக்கம், என்று பொருள் இல்லாமையால் செய்ய முடியாமல் தடைப்பட்டது என்றும், அதனால்தான் இவ்வாறு செய்தேன் என்று சொன்னார்.


இதனைக்கேட்ட இடங்கழியார் மனமிரங்கி "இவரன்றோ எனக்கு பண்டாரமாவார்" என்று கூறி அவரை விடுதலை செய்தார். பிறகு அவரது நிலை அறிந்த உள்ளதோடு சிவனடியார்கள் எல்லோரும் நற் பண்டாரம் மட்டுமேயன்றி, குறைவில்லாத மற்றைய நிதிகளின் பண்டாரங்களாகிய எல்லாவற்றையும் கொள்கையாக முகர்ந்து கவர்ந்து கொள்க! என்று பறைசாற்றினார். அத்தனை பொருட்களையும் சிவனடியார்களுக்கு வழங்கினார். நாட்டு மக்களின் நலன் கருதி நல்லாட்சி புரிந்தார் இவரது காலத்தில் காவிரி நீரை திருப்ப கொங்கண் வாய்க்கால் என்ற வாய்க்கால் சிறிது தூரம் வெட்டப்பட்டுள்ளது.


இவ்வாறு சிறப்புடன் ஆட்சி செய்து இடங்கழி நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.


தொடரும்... 


தமிழ்நாடு முத்தரையர் 

முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்