முத்தரையர் கலைக்கோயில்கள்

முத்தரையர் கலைக்கோயில்கள்
______________________________

1.திருமெய்யம் குகைக்கோயில்;
--------------------------------------------

புதுக்கோட்டை காரைக்குடி பெருவழியில் திருமயம் என்ற திருமயம் ஊர் சுமார் 22வது கிலோ மீட்டரில் உள்ளது. இங்கு உள்ள மறையும், இதன்மீது பிற்காலத்தில் கோட்டையும் பிரபலமானது. மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள பீரங்கி மற்றும் சுணை பார்க்க வியப்பாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் இப்பகுதியில் முத்தரையர் பிரிவுகள் அம்பலகாரர்கள் மிகுந்து வாழ்கின்றனர்.

கிபி 6ம் நூற்றாண்டில் முத்தரையர்கள், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் அரசாண்டனர். அதில் குறிப்பாக திருமயம் கோவிலை மையமாக வைத்தும் ஆட்சி புரிந்துள்ளனர், முத்தரையர்கள் கற்றளி கோயில்களையும் குகைக் கோயில்களையும் அமைத்துள்ளனர். அழியாத கோயில்களைக் கட்டியும் கட்டிடக்கலையில் *முத்தரையர் பாணி* என்ற தனித்துவத்தையும் வளர்த்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எல்லாம் மலைகளும் குன்றுகளும் காணப்பட்டது அந்தந்த இடங்களில் குடைவரைகளை அமைத்து அழியாப் புகழுடன் விளங்கியுள்ளனர். சில இடங்களில் எழுத்துப் பூர்வமான சான்றுகள் காணப்படாவிடிலும் கட்டிடப்பாணி அதை நிரூபிப்பதாக உள்ளது.

இந்த வகையில் அழகிய மலைக் குன்றை கண்ட முத்தரையர் எட்டாம் நூற்றாண்டில் சாத்தன் மாறன் என்ற விடேல்விடுகு விழுப்போதியரைய மன்னர் கண்ணுற்றார். இம்மலையில் குடைவரை ஏற்படுத்தி சிவனுக்கும் பெருமாளுக்கும் ஆக கோயில் அமைத்தார். முத்தரையர் தனது பெயர் கொண்ட கல்வெட்டை ஏனோ நிறுவவில்லை, முத்தரையர் கலைப்பாணியே போதும் என்று நினைத்தாரோ என்னவோ, ஆனாலும் இம்மலையை ஆய்வு செய்த கட்டிட கலை அறிஞர் வரலாற்றறிஞர் திரு கே ஆர் சீனிவாச ஐயர் 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக் கோயில் என்றும். திரு ராஜசேகர தங்கமணி முத்தரையர் கட்டிடக்கலையே என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முத்தரையர்கள் கட்டிடக்கலை மட்டுமின்றி கண்ணி தமிழை வளர்ப்பதிலும் இசைக் கலையை போற்றியும் வளர்த்துள்ளனர் இம்மாவட்டத்தில் இசைக் கலையை வளர்த்து அதற்கு சான்றாக குகைக் கோயில்களைக் கட்டியும் மலைகளிலேயே *பரிவாதினி தா* என்ற இசைக்கருவியின் பெயரையும். மேலும் சில வரிகளையும் கல்லிலேயே வெட்டியுள்ளனர். இத்தகைய கல்வெட்டுகள் குடுமியான்மலையிலும் இவ்வூரின் அருகிலுள்ள மலையக்கோயிலிலும் *பரிவாதினி தா* என்ற கல்வெட்டுகளையும் முத்தரையர்கள் வெட்டியுள்ளனர்.

இம்மலையில் சத்தியகிரீஸ்வரர் என்ற கோயிலையும் கட்டியுள்ளனர். பு.சு.எ.5ல் உள்ளவாறு வடபுறம் மழையில் புகை கோயிலின் பாறையில் *பரிவாதினி தா* என்றும் கீழாக மூன்று வரியிலுமாக கல்வெட்டு உள்ளது. மேலும் தனது மூதாதையரால் அமைக்கப்பெற்ற திருக்கோயிலில் சத்தியமூர்த்தி சன்னதியில் மேல் பிரகாரத்தில் ஓர் சுருள் படியில் (க.எ.13)ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ளதாவது..👇

1.ஸ்ரீ விடேல் விடுகு
2.விழுப் பேரதி அ
3.ரைசனாயின சாத்
4.தன் மாறன் றாய்
5.பெரும்பிடுகு பெ
6.ருந்தேவி புதுக்கு
7.இதற்கு ண்ணாழி
8.கைப் புறமாக அண்
9.ட(க்) குடி குடுத்தது காரா
10.ண்மை மீயாட்சி உள்
11.ளடங்க

 என்கிறது. இக்கல்வெட்டில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த விடேல்விடுகு விழுப்பேரதி அரையர் என்ற சாத்தன் மாறனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி இக்கோயிலை புதுப்பித்துள்ளார் மேலும் இக்கோயிலை பராமரித்து வர வேண்டி தனது ஆட்சிக்குட்பட்ட தனது கிராமமாகிய அண்டக்குடி என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார் இன்னும் எவ்வளவு காரியங்கள் செய்திருப்பார்கள் காலத்தின் கோலம் நம்மால் அறிய முடியவில்லை.

சாத்தன் குறுநில மன்னன். ஆவான் இவனது தேவி பெரும்பிடுகு பெருந்தேவி ஆவாள். இவளுக்கு மாறன் என்ற புதல்வன் இருந்துள்ளான். இவன் திருமெய்யத்தை தலைமை இடமாக கொண்டு அரசு செலுத்தியவன். இவன் பல்லவரோடு நட்பு கொண்டிருந்தான், பாண்டியரோடு மண உறவும் கொண்டிருந்தான், பெரும் பிடுகு என்ற தெலுங்குச் சொல் தமிழில் பேரிடி எனப்படும். இந்த சாத்தன் பல்லவர் பக்கம் நின்று போரிட்டு பகைவர்களின் சிதறடித்ததால் பெரும் பிடுகு என்ற பட்டத்தை பெற்றவன். இவனே முதலாம் பெரும்பிடுகு முத்தரையன் ஆவான்.

இவனால் குடை விக்கப்பட்ட இக்கோயில் காலத்தால் முற்பட்டது தமிழகத்தில் உள்ள 72 சிறப்பான திருமால் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். திருமயம் திருமால், திருமெய்யர் என்றும் அழகிய மெய்யர் மெய்யநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சாத்தன் திருமெய்யக் குன்றில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு குடைவரைக் கோயிலை அமைத்தான். இக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது, குடைவரை முன் மண்டபத்துடன் உள்ளது. தூண்கள் இல்லை முன் மண்டபத்தின் இருபுறமும் சன்னல்களும் மூன்று வாயில்கள் உள்ளன.

குடைவரைக் கோலம்;
----------------------------------------

திருமெய்யர் குட திசையில் (மேற்கில்) முடியையும், குண திசையில் (கிழக்கு) அடிகளையும் நீட்டி சயனத்தில் உள்ளார். கிடந்த கோலத்தில் உள்ள திருமேனி 30 அடி நீளத்திலும் திருவரங்கனை விட மிகப் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கிடந்த கோலத்தில் மிகப்பெரிய திருமால், மெய்யர் மலையானே ஆவார். வாயில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறைக்காட்சி;
----------------------------------

அரவணை மேல் பள்ளி கொண்டுள்ள அழகிய மெய்யர், காலடியில் நிலமகளும், இதயத்தாமரை யான மார்பில் திருமகளும் ஆக உள்ளனர், இடமிருந்து வலமாக காட்சிகளைக் கண்ணுற்றாள். திருமாலின் வாகனமான பருந்தாழ்வார், (காலன்) எமன், சித்ரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, ஆகியோர் வடிக்கப்பட்டுள்ளனர். நாபியில் தோன்றிய தாமரையில் தொப்புளான் (பிரம்மன்) உள்ளான். அடுத்து தேவர்கள் முனிவர்கள் கின்னரர்கள் காணப்படுகின்றனர். மது கைடபர் என்ற இரு அசுரர்கள் வலதுபக்கம் உள்ளனர்.

கலைக்கூடம்;
--------------------------

குகை பாறை சுவற்றில் சூழ்ந்து விட்டெறியும், அனல், யாழி, இசைக்கருவிகளை ஏந்தி நிற்கும் முனிவர்கள் இடையில் காணும் பல்வேறு இசைக் கருவிகள் அனைத்தும், புடைப்புச் சிற்பங்களாக சிறப்புடன் செய்துள்ளனர். இடப்புறத்தில் சத்தியமா முனிவரும் புரூர மன்னரும் நிற்கின்றார்கள், புறத்தில் பருந்தாழ்வாரும், முனிவர் மனைவியும் நிற்கின்றனர். கோலம் மிகுந்து காணப்படும் இக்கவின்மிகு காட்சிகள் சிற்பக்கோட்டமாக இசைக் கூடமாக அமைத்து ஒரு கலை கூட்டமாக காட்சியளிக்கின்றன.

குடைவரையில் புராணம்;
---------------------------------------

அழகு மிகுந்த இவ்வரிய குடைவரை காட்சிகள் திருமால் புராணத்தை மையமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளன. திருமாலாகிய பெருமாள் உறங்குவதாக கருதிய மது கைடபர் ஆகிய இரு முரட்டு அரக்கர்கள் திருமகளையும் நிலைமைகளையும் தூக்கி செல்ல முற்படுகின்றனர். திருமால் உறங்குவது போல பாவனை செய்கிறார். இந்நிலையில் ஐந்து தலை நாகம் தன்னிடமுள்ள நச்சுத் தீம்பிழம்பை உமிழ்ந்து ஊதுகிறது. இதைக்கண்ட மதுவும் கைடபனும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு மற்ற அசுரர்களுடன் தலைதெறிக்க ஓடுகிறார்கள். பல்வேறு இசைக்கருவிகள் முழங்க படுகின்றன இவ்வரிய செய்தமைக்காக பாராட்டும் முகத்தான் திருமால் ஆதிசேடனன் ஐந்தலை நாகத்தைக் தட்டிக் கொடுப்பது போல தனது வலக்கையில் வருடுகிறார்.

திருமெய்யத்தில் ஆழ்வார்கள்;
------------------------------------

திருமால் புகழ் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் நீலன் என்னும் பெயருடையவன் திருமங்கையாழ்வார். இவர் மட்டுமே திருமெய்யத்தை போற்றி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பாசுரங்களில் திருமெய்யரை பாடியதால் திருவாய் மொழியில் இடம்பெற்றுள்ளது. 108 வைணவ கோயில்களில் திருமெய்யமும் ஒன்றாக விளங்கச் செய்தவர் திருமங்கை ஆழ்வார் ஆவார்.

பெரும்பிடுகு பெருந்தேவி;
--------------------------------

குறுநில மன்னனான சாத்தன் ஆட்சி செய்த தலைநகர் பாண்டியநாட்டு பகுதியான திருமையம் ஆகும். பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியரின் குலக்கொடியான பெருந் தேவியை மணந்து கொண்டிருக்க வேண்டும். இவள் பெயருக்கு முன் பல்லவர் மூலம் தன் கணவர் பெற்றிருந்த பெரும்பிடுகு எனும் விருதை அடைமொழியாக கொண்டு பெரும்பிடுகு பெருந்தேவி என்று அழைக்கப்பட்டார். இவள் தன் புதல்வனுக்கு மாறன் என்னும் பாண்டியர் மரபு பெயரிட்டு மகிழ்ந்தார். மாறன் இளவரசனாக இருந்ததால் சாத்தனுக்கு பிறகு பெரும்பிடுகு பெருந்தேவி அரசுப் பொறுப்பை ஏற்றிருந்தார். சாத்தன் என்ற பெயரை முத்தரையர்கள் இன்றும் ஏராளமானவர்கள் வைத்துக் கொண்டுள்ளனர். சாத்தன் கோயில் என்ற கோயில் திருமெய்யத்திற்கு கிழக்கே கண்ணங்காரைக்குடியில் உள்ளது. இக்கோயிலை உரிமையுடன் வணங்குபவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் முத்தரையர்களே ஆவார்கள்.

கொடைகள்;
--------------------------

தனது கணவனால் குடைவிக்கப்பட்ட திருமெய்யம் திருமால் கோயில் பழுதடைந்த நிமித்தமாகவோ, குடைவரையில் புதுப்பொலிவு காணும் நோக்குடனோ குடைவரையை புதுப்பித்துள்ளார். மேலும் கோயில் வழிபாடு தடைபடாது தொடர்ந்து நடைபெற உண்ணாழிகையில் (கருவறையில்) வழிபாட்டு முறையை செய்யும் வைணவ குருக்களுக்கு அண்டக்குடி ஆகிய தனது உரையை தானமாக கொடுத்துள்ளார்.

ஒரு ஊரையே குடையாக பெரும்பிடுகு பெருந்தேவி கொடுத்திருப்பதால் இவர்களுக்கு முன்னிருந்த இவள் கணவரும் இப்பகுதியை ஆண்டனர் என்பது உறுதியாகிறது இவள் மேலும் பல ஊர்களை பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த ஊர்கள் பெருந்தேவி மங்கலம் என்றும் தேவி மங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தன. புதுக்கோட்டை திருமயம் வழியில் உள்ள நமண சமுத்திரத்திற்கு அருகில் உள்ள இளங்குடிப்பட்டி என்னும் ஊரும் நிலங்களும் தேவிமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு மலுங்கன்பட்டி பெருந்தேவி மங்களம் தேவி மங்களம் என்றும் ஊர்களை பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்துள்ளார்.

இம் முத்தரையர் மன்னர் தனது நாட்டின் வேளாண்மைக்கு தனி கவனம் செலுத்தியுள்ளார் நீர் வளமும், நில வளமும் பெருக செய்துள்ளார். புதுக்கோட்டை அன்னவாசல் சாலையில் மதியநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன் சாத்தன் மாறன் குளத்தை சீர் செய்து குமிழி கட்டியுள்ளான். இந்த குமிழித் தூணில் *ஸ்வஸ்தி சீ சாத்தன் மாறன் செய்வித்த குமிழி* என்று கல்வெட்டி உள்ளான்.

திரு மையத்தைச் சுற்றி உள்ள கீழ்கண்ட ஊர்களில் முத்தரையர்கள் இடம் ஓலைச்சுவடிகளும் செப்பேடுகளும் உள்ளன. அவ்வூர்களாவன நல்லூர், கொன்னைப்பட்டி, செவலூர், பனையப்பட்டி, அரிமளம், குருந்தம்பாறை, இளஞ்சாவூர், கண்டீஸ்வரர், புலிவலம், பேரையூர், மேலத்தானியம், நெருஞ்சிகுடி, அரசமலை, சாத்தனூர், செம்பூதி, மலையடிப்பட்டி, காரையூர் தூத்தூர், மணப்பட்டி, வார்ப்பட்டு, கருப்புக்குறிச்சி, கண்டியாநத்தம், வெள்ளக்குடி, மேலும் பல ஊர்களிலும் ஆவணங்கள் கிடைக்கின்றன.

புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் 1813 ஆம் ஆண்டு புள்ளி விவர ஏடு எண் 1497 பக்கம் ஒன்றில் பகுதி ஐந்தில் மேற்கு மருங்கூருக்கு தெற்கு குளத்துப்பட்டிக்கு வடக்கு இங்கிலீஸ் 1813ம் வருஷத்துக்கு முன்னாலே, 135 வருஷத்துக்கு முன்னமே, ராஜா ஸ்ரீ விஜய நகுநாத சேதுபதி ராஜா அவர்கள் நாளையில் கட்டின பூர்வம் திருமயம் சக்கரவளையக் கல்கோட்டை 1சூ கொத்தளம் உயக (21) மேற்படி கோட்டைக்குள்ளே மலை மேலே உள்ள சுத்து சக்கரவளையக்கல், கோட்டை 1க்கு கொத்தளம் ய2 (12) கோட்டைக்கு ஊடு வழியில் கீழ்புறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு: இம்மலை மீது உள்ள கோட்டைச்சுவர் கட்டப்பட்டதாகும்....

2.நார்த்தாமலை;
----------------------------------

வரலாற்று சிறப்பு மிகுந்த நார்த்தாமலை என்ற ஊர் புதுக்கோட்டை திருச்சி சாலையில் பதினாறாவது கிலோ மீட்டரில், மேற்கில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏழு குன்று மலைகளை உள்ளடக்கிய ஊராகும். இவற்றில் மேலமலை முத்தரையர் புகழ் மண்டிக்கிடக்கும் மலையாகும்.

முத்தரையர் குடைவரைக் கோயில்களையும், கற்றளிகளையும் எழுப்பி புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டிடக்கலையை தொடங்கி வளர்த்த பெருமை உடையவராயினர். இவர்கள் ஆற்றிய கலைத் தொண்டு இம்மாவட்டத்தில் கட்டிட கலை மரபுகள் கருவுற்று வளர்ந்து பெருகுவதற்கு பெரும் தொண்டாற்றிய முன்னோடிகள் முத்தரையர்களும், கொடும்பாளூர் வேளிர்களும் ஆவார். இந்த இரு மரபினரின் ஊக்கத்தால் ஒருமுகப்பட்டு இக்கலைகள் வளர்ந்தன.

திடுமென தோன்றிய இத்தகைய ஆக்கப்பணிகள் இம்மாவட்டத்தில் கோயில்களாக உருப்பெற்று எழுந்தன சிலவற்றைக் குறிப்பிட்டு கூற வேண்டுமாயின் குடுமியான்மலை, மலையடிப்பட்டி, குன்றாண்டார் கோவில், திருமயம், திருக்கோகர்ணம், நார்த்தாமலை, கொடும்பாளூர், திருக்கட்டளை, ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களைக் குறிப்பிடலாம்.

இவை தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு இவர்களது கால கோயில்கள் விளங்குகின்றன.

முத்தரையர் கட்டிடக்கலையில் தனி பாணியை கொண்டிருந்தனர் என அறியலாம் மேலும் இம் முத்தரையர்கள் இசைக் கலையையும் ஓவியக் கலையையும் வளர்த்துள்ளனர். சமணர் கோயில்களையும், சைவக் கோயில்களையும், வைணவக் கோயில்களையும் தோற்றுவித்து அறப்பணிகள் செய்ததில் இம்முத்தரையர்கள் பொறையுடையவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

சாத்தன்;
-------------------

முத்தரையர் குறுநில மன்னர்களில் இரண்டு சாத்தன் மன்னர்கள் காணப்படுகின்றனர் நாம் காணும் சாத்தன் கிபி எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நார்த்தாமலை குன்றுகளுக்கு இடையில் கோட்டை கட்டிக்  கொண்டு ஆட்சி செய்துள்ளான். இவன் விடேல்விடுகு எனும் விருதுப்பெயரை பெற்றவன் எனவே பல்லவர்களின் அன்பைப் பெற்றவர் எனலாம் இவனுக்கு பூதி, பழியிலி என்ற இரு மைந்தர்கள் இருந்தனர் இவர்களைப் பற்றிய பல செய்திகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.

சாத்தன் பூதி;
---------------------------

சாத்தன் தனது மூத்த மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். அதன் பிறகு இவன் பூதி இளங்கோவதியரையன் என புகழப்பட்டார். சாத்தனுக்குப் பிறகு பூதியான இளங்கோவதியரையன் அரசு கட்டில் ஏறினான் தன் தந்தையின் பெயரை முன்னதாக கொண்டு சாத்தன் பூதியான இளங்கோவதியரையன் என்று தன்னை அழைத்துக் கொண்டான்u இவன் கிபி 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்லவர் மேலாண்மையில் இருந்து விடுவித்துக் கொண்டு தன்னாட்சி நடத்தினான். சாத்தான் பூதி கட்டிடக் கலைக்கு புத்துயிர் அளித்து புதுமையை படைத்தான். இவனது ஆட்சியில் சிற்பக் கலை சிறந்து விளங்கியது. நார்த்தாமலையில் உள்ள மேலமலையில் பதினெண் பூமி விண்ணகரக் குடைவரைக்கு எதிராக இவனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பூதீச்சுரம் ஆகும்.

இக்கோயில் மேலமலைக் குன்றின் சரியில், சமதள பாறையில் கட்டப்பட்டுள்ளது. கொடும்பாளூரில் பூதி என்னும் அரசன் கட்டிய கோயில் பூதிச்சுரம் என்று வழங்குவதால் இக்கோயிலை சாத்தன் பூதிச்சுரம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசயாலய சோழீச்சுரம்;
------------------------------------------------

இந்த மேலமலையில் பிற்காலத்தே விசயாலயச் சோழன் ஒரு கோயிலை எழுப்பி இருக்க வேண்டும். ஏனெனில் இக் கோயில் பற்றி கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகிறது. தற்பொழுது விஜயாலய சோழீச்சுரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனதால் சாத்தன் பூதிச்சுரத்தை விஜயாலய சோழீச்சுரம் என்றே அழைக்கின்றனர்.

சாத்தன் பூதிச்சுரம்;
---------------------------------------

சாத்தான் பூதிச்சுரம் கோயில் மேற்கு நோக்கி குகைக் கோயிலுக்கு எதிரில் உள்ளது. 1240 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. முகப்பு வாயிலின் இரு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள வாயிற்காவலர்கள் ஈரிரு கைகளைப் பெற்றுள்ளனர். இவர்களின் ஒரு கை கதை ஆயுதத்தின் மேல் உள்ளது. மற்றொரு கை தொங்கிய நிலையில் உள்ளது. இவ்விருவரும் கால் மேல் கால் வைத்த நிலையில் நிற்கின்றனர்.

முன்மண்டபம் 6 தூண்களை கொண்டுள்ளது. நடுப்பகுதி எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. மூலைகள் கூம்பியுள்ளன. மேல் முகட்டின் வினானப்பகுதி வளைவாக உள்ளது. இப்பகுதி விலங்குகளின் உருவங்களாலும் மாந்தர் தலைகளாலும் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. கூரையின் மேற் கட்டுச் சுவரில் நாக கன்னியரின் நடன வடிவங்கள் அழகூட்டி நிற்கின்றன.

இக்கோயில் வட்டமான கருவறையை கொண்டுள்ளது வெளிப்புற சுவர் சரமாக அமைந்துள்ளது கருவறைக்கும் வெளிப்புற சுவருக்கும் உள்ள பாதை குறுகலாக உள்ளது. வெறும் கூடாக அமைந்துள்ள மேற்கட்டு நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இதன் மீது முகட்டு விமானம் தனியாக அமைந்துள்ளது மேற்கு முதல் மற்றும் மூன்றாம் அடுக்கு களில் சுவர்கள் வட்டமாக உள்ளன. இரண்டாம் அடுக்கின் மாடப்புரைகளிலுள்ள சிற்பங்களில் உமையுடன், சிவனையும், வீணையுடன் தென்னாட்டுப் பெருமானையும் அழகுற அமைத்துள்ளனர்.

மேற்காணும் சிவன் கையிலுள்ள வீணைச் சிற்பத்தில் ஒரு செவ்வக வடிவமைந்த பெட்டி உள்ளது. கோவிலைச் சுற்றி, பிரகாரத்தில், ஆறு சிறு கோயில்கள் உள்ளன. ஏழாவது கோயில் இருந்ததற்கான தடயமும் உள்ளது.

சாத்தன் பழியிலி;
------------------------------------

சாத்தனுக்கு இரண்டாம் புதல்வன் பழியிலி ஆவான். இவன் சாத்தன் பழியிலி என்று அழைக்கப்படுகிறான். சாத்தன் பூதிக்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இம்மன்னன் பல்லவர்க்கு உரிய விருதுப் பெயர்களைப் பெறாதவன். இவன் தன் படை வலிமையைப் பெருக்கினான்.

தன்னாட்சியுடன் வாழ்ந்தான். சைவ நெறியைத் தழுவிய இவன் சிவனுக்காக மேல மலையில் குடைவரைக்கோயிலை அமைத்தான். இக்கோயில் பழியிலீச்சுரம் என்றே அழைக்கப்படுகிறது. குடவரை கிழக்கு நோக்கியுள்ளது. 8அடி நீளமும் 7 1/2அடி அகலமும், 6அடி 8அங்குளம் உயரமும் கொண்டுள்ளது.  மேலேயுள்ள மணிக் கோவையின்மேல் பூதகனங்கள் நடனமாடும் வரிசை செதுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் உருளை வடிவான சிவலிங்கமும், இரு வாயிற் காவலரும் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது.

மேல மலையில் குடைவரைக் கோயிலுக்கும் சாத்தான் பூதிச்சுரம் கற்றளி கோயிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் இடிந்து கிடக்கும் மண்டபத்தின் வடபுறம் உள்ள கல்வெட்டை காண்போம்..

பு.க.எண்.19
1.வரத ஸ்ரீ கோவிசைய நிருபதொங்க (விக்கிரமற்கு) யாண்டு ஏழாவது விடேல் விடுகுமுத்த
2.ரையன் மகன் சாத்தன் பழியிலி குடைவித்த ஸ்ரீ கோயில் இச்சிரி கோயிலு
3.க்கு முக மண்டகமும் இஷவக் கொட்டிலும் பலிபீடமும்
4.செய்வித்தான் சாத்தம் (பழியிக் ம) கன் மீனவன் தமிழதியரையனான வா
5.லன் அனந்தனுக்குப் புக்க பழியிலி சிறிய நங்கை
6.இச்சிரீ கோ இலுக்கு (அர்ச்சனா போகத்து)க்கு அண்ணல் (வா)
7.யிற் கூற்றத்துப் பெருவிளத்தூர்ச் சவைக்கு சாத்தன் காணியான மூவேலியி
8.ல் வில கொவா (இ) கிசற செய்யும் எவ்வகைப்பட்ட இறை இதனால் வந்ததெ
9.ல்லாம் கோவினுக் கவிப்பது ளாது சவைஞ் சாத்தனு மிவன் வழியிலாரு(ம) பெ(ற)க்
10.(கட) வதாகவும் இது சடையனும்
11.இடையூறெதும் படன் முறை கோவி
12.லுக்கு வரும் இருபத்தைங் கழஞ்சு பொ
13.ன் தண்டங் கடவராகவும் பட்டுடடை வ
14.ன் உழுதா திரன் தேயடக்கிக் குச் செ
15.ய் வித்தேன் பழியி
16.லி சிறிய நங்கை ஏன்
17.பழற் பிவி ஈஷ்வரத்துப் ப
18.ட்டுடையா னுருத் திரன் தே
19.ய் புகுச் செய்வித்த............

என்று கூறுகிறது. விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி இக்குடைவரையைக் குடைவித்தான். இந்த கோயிலுக்கு முக மண்டமும், இஷவக் (காளை) கொட்டிலும், பலி பீடமும் செய்துள்ளாள், சிறிய நங்கை.. சாத்தன் பழியிலி மகன் மீனவன் தமிழதியரையன் என்ற வாலன் அனந்தனுக்குப் புக்க பழியிலி சிறிய நங்கை இக்கோயிலுக்கு, அர்ச்சனா போகத்திற்கு அண்ணவாசல் கூற்றத்து, பெருவிளத்தூரின் சாத்தனின் காணியான நிலம் விட்டுள்ளால்.

நார்த்தாமலையில் அருமைக்குளம் வடபுறம் பாறையில் ஒரு கல்வெட்டும் உள்ளது.

பு.க.எண்.11
1.ஸ்ரீ அணி மத யேரி
2.வென்றி மதத் தமிழ
3.தியரையனாயின மல்
4.(ல)ன் விடமன் செய்வி
5.த்த குமிலி
6.இது செ (ய்) த தச்சன் சொ
7.ன னாரையனுக்கு குடு
8.(த்) த குமிழித் துட (வல்)
9................ குழச் செய் வட
10.வியது.

என்று கூறுகிறது. இக்கல்வெட்டு தமிழதியரையனாயின மல்லன் விதுமன் குமிழி அமைத்து நிலவளம் பெறுக்கியுள்ளான் என்பது புலனாகிறது...

விசயாலயச் சோழீச்சுரம் என்ற கட்டுமான கோயில் குகைக்கோயிலை விட காலத்தால் முந்தியதாகும். ஏனெனில் இக்கோயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பத்தின் பீடத்தில் சாத்தம் பூதியின் கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டாவது.

"ஸ்வஸ்தி ஸ்ரீ சாத்தம் பூதியான
இளங்கோவதி யரையர் எடுப்பித்த கற்றளி
மழை இடித்தழிய மல்லன் விதுமன்
ஆயின தென்னவன் தமிழதிரையர் புதுக்கு"

என்கிறது. இதனால் இக்கோயில் சாத்தான் போது என்ற முத்தரைய மன்னனால் எடுப்பிக்கப் பட்டதென்பதும் பின்னர் மழையின் கொடுமையினால் இக்கோயில் அழிந்துபோக, மல்லன் விதுமனாகிய தென்னவன் தமிழதியரையன் இதை புதுப்பித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

இந்த நார்த்தாமலையில் பிற இடக் கோயில்களிலும் ஆக முத்தரையர்கள் மல்லன் விதுன், சாத்தன் பழியிலி, சோழன் ஸ்ரி ராஜராஜ தேவர், ஸ்ரீ ராஜேந்திர தேவர், ஸ்ரீ குலோத்துங்க தேவர்,  பாண்டியரான சுந்தரபாண்டியன், ஸ்ரீ குலசேகர தேவர், பராக்கிரம பாண்டியன், விஜயநகரப் பேரரசர்கள், புதுகோட்டை தொண்டைமான்கள், ஆகிய மன்னர்களும் வியாபாரிகளும் ஏராளமான தான தருமங்கள் இங்குள்ள காலத்தால் முந்திய முத்தரையர் கட்டி வழிபட்ட கோயிலுக்கு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு தாங்கள் வழங்கிய தருமங்களை 32 கல்வெட்டுகளில் கோயிலின் சிறப்பு கருதி வெட்டியுள்ளனர். தான தர்மங்களில் முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் நில வளம் பெருக்க கட்டிய மடைகள், சந்தி விளக்கு வைக்க போன் வழங்கியும், கோயிலில் உவச்சக் கொட்ட நிலக்கொடையளித்தும், கோயிலுக்கு நெல் அளக்கும் படியும் திருவமுது அரிசி வழங்கியும் இந்த முத்தரையர்களின் / அரையர் வயலில் நிலக்கொடை அளித்ததும் இக்கல்வெட்டுகள் மூலம் குறிப்பிடப்படுகின்றன.

3.மன்னன் குவாவன் சாத்தனின் மலையடிப்பட்டி குகைக்கோயில்;
----------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையை கண்ட இடங்களிலெல்லாம் அழியாத புகழுடன் குகைக் கோயில்களை முத்தரையர் மன்னர்கள் அமைத்தனர். அவ்வாறு அமைத்த கோயில்களில் ஒன்று தான் மலையடிப்பட்டி இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் கீரனூர் - கிள்ளுக்கோட்டை சாலையில் உள்ளது.

இக்கோயிலை, கல்வெட்டு, திருவாலத்தூர் மலை என்று குறிப்பிடுகிறது. திருமலையிலும் சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே மலையில் இரண்டு குகை கோவில்கள் அமைத்துள்ளனர். அனந்தசயன மூர்த்தியாக காட்சி தரும் விஷ்ணு குகைக் கோயில், திருப்பதிக்கு நிகரான சக்தி கொண்டதாகும் என்று இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்தில் (கிபி-775-826) கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் இக்கோயில் 16 வது ஆட்சி ஆண்டில் அதாவது கிபி 730ல் குவாவன் சாத்தன் என்பவனால் இந்த மலையை குடைந்து சிவனுக்கு கோயில் எடுப்பித்ததாக கூறுகிறது. லிங்கத்தை வைத்து அதற்கு வாகீஸ்வரர் என்று பெயரிட்டு அழைத்துள்ளனர். இச்செய்தி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது.

பு.க.எண்.18ல்,

1.வரத ஸ்ரீ கோவிசய தந்தி பர்மற்க்கு யாண்டு ப
2.தினாறாவது விடேல்விடுகு முத்தரைய னாகிய
3.குவாவன் சாத்தனேன் திருவாலத்தூர் மலை
4.தளியாக குடைந்து (பட்டாரரை பிரதிஸ்டை)செ
5.ய்து இத் தளியை..............
6.............. கீழ செங்கிளி நாட்டு நாட்டா
7.,................. நாட்டார்க்கு செய்த...........

என்று கல்வெட்டு கூறுகிறது. இக்குடைவரை விடேல்விடுகு முத்தரையன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபச் சுவரில், ஏழு சப்த மாதர்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு, ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. காளிகாம்பாள் மகிசாசுரமர்த்தினியாக செதுக்கப்பட்டுள்ள சிற்பம் மிகவும் அற்புதமானதாகும். எருமை முகமும் மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன், அன்னை ஆதிபராசக்தி சிங்கத்தின் மீதமர்ந்து அரக்கனை அடித்து வீழ்த்திய கோர காட்சி மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

பல்லவர் கலை அம்சத்தில் அவர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை அமைப்பு பாணியை தவிர்த்து. முத்தரையர் தாங்கள் அமைக்கும் குகைக்கோயிலில் குகைக்குள்ளேயே சுவற்றில் உள்ள மலையையே சிற்பங்களாக வடிப்பதாகும். சிலைகளை வெளியில் செய்து உள்ளே வைப்பதல்ல முத்தரையர் கலை, இந்த முறையிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

பல்லவர் பாணியை ஒட்டியே, துவாரபாலகர் எனும் வாயிற்காப்போர்க்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன, இத்தகைய அதிசயம், காவல் காப்போர்  இருவரும், இக்கோயில் அமைய மிகுந்த  ஈடுபாடு கொண்டிருந்தவர்களாவார்கள்.

கருவறையின் பின்புலத்தில் சுவற்றில் அரக்கர்களும் தேவர்களும் காணப்படுகின்றனர். இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன கண்நோய் கண்டிப்பாக தீரும். இச்செய்தி கல்வெட்டு அடிப்படையில் நிகழ்ந்த செயலாகும்.

க.எண்.35ல் மண்டபத்திலுள்ள ஒரு தூணில்...

1.கோவி ராஜ கேசரி ப
2.ந்வற்கு யாண்டு சய (40) இவ் வாண்டு
3.திருவாலத்தூர் மலை அன ம ............
4.கண்டன் .................

அழிந்துபட்ட நிலையில் இந்த கல்வெட்டு உள்ளது..

பு.க.எண்.116ல் வீரராஜேந்திர சோழனின் உயச (24)வது ஆட்சியாண்டில் இக் கோவிலுக்கு நிலக் கொடையளிக்கப்பட்டுள்ளது.

பு.க.எண்.757ல் விஜய நகரப் பேரரசு, சதாசிவ தேவரின் கி.பி.1558ம் ஆண்டு கல்வெட்டும்

பு.க.எண்.771ல் குடபோகத் தூணில் உள்ள கல்வெட்டு, திருவிளக்கு வைக்கப்பட்டதையும்

பு.க.எண்.904ல் குடபோகக் கோவிலின் வடபுறம் சுவற்றில் உள்ள கல்வெட்டு விசித்திரமானது.

இப்பகுதியில் பிரபலமாக வாழ்ந்தவர் இங்குள்ள தேவடியாளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

ஒருநாள் தேவடியாள் இங்குள்ள பிராமணருடன் கூடியிருந்தால் அன்று இந்த பிரபலமானவரும் தேவடியாள் வீட்டிற்கு சென்றுள்ளார். சென்றவர் தேவடியாளும் பிராமணனும் கூடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார், இருவரையும் வீட்டிலேயே வெட்டிக் கொன்று விட்டார், ஒன்றுமே நடக்காதது போல தன் வீட்டிற்கு சென்றுவிட்டார் தேவடியாளின் சாபத்தால் வாகீஸ்வரர்  இவனது கண் பார்வையை இழக்கச் செய்தார் பார்வையற்றவன் பலவாறு தீர்க்க பாடுபட்டார் நோய் தீர்ந்தபாடில்லை.

பின்னர் தான் செய்த கொலை பாதகமே கண் தெரியாமல் போனது என்றும், வாகீஸ்வரரை வேண்டி நிலக்கொடையளித்து தனக்கு கண் தெரிய வேண்டும் என்று மனமுருகி வேண்டினார். அதன்படியே பக்தியை மெச்சி கண் பார்வையை திரும்ப கொடுத்தார் வாகீஸ்வரர். தான் செய்த பிரமாதின்படி நிலக்கொடை அளித்து  கல்வெட்டியுள்ளார்.

பு.க.எண்.904. மலையடிப்பட்டி கோயில் குடபோகக் கோயிலில் வடபுறம் சுவரில்,

1.வெகு தாநிய
2.ஸ்ரீ தய் மி யக (11)உ
3.வாகீஸ்வர சாமியா
4.ருக்கு வடிவுள்ள மங்
5.கைக்கு பூச்சி குடியில் யி
6.ருக்கும் ஆவுடையா தேவ
7.ர் திருநெடுங் கொள
8.ம் தேவடியாள் வீ
9.ட்டுக்கு போயிருக்கச்செ ம
10.று படி ஒரு பிராமண
11.னை அழைச்சு விட்டு லெ
12.இருந்த படியினாலே னா
13.ன் அவர்கள் ரெண்டு
14.பேரையும் வெட்டிப் போட்டு
15.மலையடிக்கி வந்த விட
16.த்திலே ரெண்டு கண்ணு
17.ம் தெரியாதே போன
18.படியினாலே இத் தோ
19.ஷம் போக
20.(வாகீஸ்வர)
21.ஸ்வாமிக்கு என்னு
22.ட வயல் கல்லு
23.ப் போட்டு குடுக்கு
24.றோம் என்று
25.வேண்டு கொண்
26.டு எனக்கு கண்
27.தெரிஞ்ச படியினா
28.லெ என்னுடை
29.ய காணியான
30.ஆவுடையான் குடிக்கா
31.டு னாங்கெல்லை உள்
32.பட்ட நிலமும் கல்ப்
33.பொட்டு குடுத்தேன் இந்
34.நிலம் (ஸ்வாமி) யெழுதி
35.இ (சாதனமும்)
36.எழுதிக் கொடுத்தேன் இ
37.ந்த நிலத்தில் யா
38.தா மொருவன் பொ
39.கு பண்ணினால் வா
40.(வாகீஸ்வர சுவாமி) ச
41.ன்னதி தொ
42.றொகியாக போ
43.வ(...)ன் கெங்கைக்
44.கரையில் காரா
45.ம் பசுவை கொண்
46.ண தோஷத்திலே
47.போவான் உ

என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன் காரணமாக கண் கோளாறு உள்ளவர்கள் இங்கு சனிக்கிழமைகளில் வந்து பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றியும் துளசி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர் இதன் மூலம் கண் நோய்களை போக்குகிறார் இவருக்கு கண் ஒளி வழங்கும் பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு இக்கோயிலில் சிவன் விஷ்ணு இருவரையும் ஒரே குடைவரையில் தரிசிப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

பு.க.எண்.912ல் விஷ்ணு சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில், அச்சுதப்ப நாயக்கர் மன்னரின், விய வருடம் 18ம் நாள், ஐப்பசி மாதம் வெட்டப்பட்ட கண் நிறைந்த பெருமாளுக்கு பூமிதானமாக கொடுத்த கல்வெட்டாகும். பாரவெனி, காலியாவயல், விதாறி வயல், வண்ணான் வயல், சிறுவடை வயல், நல்லி நத்தம், சாமத்தி வயல், வெட்டி வயல் ஆக............. 9 கிராமத்திலுமாக நிலக்கொடை அளித்துள்ளனர். அச்சுதப்ப நாயக்கர், பு.க.எண்.943ல் பெருமாள் கோயில் அம்மன் வாசற்படி பக்கச் சுவற்றில் உள்ள கல்வெட்டில், சுப கிருது வருஷம் அற்பசி மாதம் 10ம் தேதி வெட்டப்பட்ட கல்வெட்டில், அரையர்களில் செல்லப் பொக்கான் புத்திரன் மங்கான் தென்கொண்டான், நாச்சியாரையும், கோவிலையும், உண்டாக்கினார் என்று கல்வெட்டு கூறுகிறது.

பு.க.எண்.1109ல் பெருமாள் கோயில் படிக்கட்டில் திருப்பதி என்ற குறிப்பு கொண்ட கல்வெட்டு உள்ளது.

இவ்வாறு காலத்தால் மூத்த அரையனான விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனால் ஆதிகாலத்தே அமைக்கப்பட்ட இக்கோயில் இக் கோயிலின் சிறப்புகளை அறிந்து கொண்ட மன்னர்களும் மக்களும் ஆக ஒன்பது கல்வெட்டுகளில் தெரிவித்துள்ளனர்.

இனி கோயில்களின் பொது விவரங்களைக் காண்போம் இம்மலையில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே மலையில் தனித்தனியே குடைவரைகளை குடைத்துள்ளான் விடேல்விடுகு. இம் முத்தரையனுக்கு குவாவன் சாத்தன் என்று பெயரும் உண்டு. இவனுக்கு குவாவன் மாறன் என்று ஒரு சகோதரர் இருந்தார். இவர்களின் தந்தையே குவாவன் முத்தரையன் என்பவர் ஆவார்.

குவாவன் மாறன் தஞ்சை மாவட்டம் செந்தலை பகுதியிலும், குவாவன் சாத்தன் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி, (குன்று ஆண்டார்கோயில்) பகுதியிலும் ஆண்டுள்ளனர். குவாவன் சாத்தன் தனி மன்னனாகவும் பல்லவர்களின் அபிமானம் பெற்றவனாகவும் இருந்திருக்கவேண்டும் இவன் தான் குடைவரைக் குடைந்து தன்னைத்தானே துவாரபாலகராக சிலை வடித்திருக்க வேண்டும். குடைவரையின் காலம் கிபி 791-846 ஆகும். இந்த குடைவரைக் கோயில் சிறப்பு மாமல்லபுரத்து அமைப்பை ஒத்திருப்பதாக வரலாற்று அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்றனர். குட்டிக்கு பேன் பார்க்கும் தாய் குரங்கின் சிற்பவேலை மிகச் சிறப்புடையதாகும் பிற்கால மன்னர்கள் இக்கோயிலில் புதிய அமைப்புகளையும் கல்வெட்டுகளையும் சேர்த்துள்ளனர்.

ஒரே இடத்தில் சப்த மாத்ருகா சிலை என்ற, வீரபத்திரர், பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி, கணேசர், ஆகிய சிலை அமைப்பை காண கண் கோடி வேண்டும். இந்தக் குகைக் கோயில் திருமெய்யம் குகைக்கோயிலை ஒத்ததாகவே உள்ளது  சிந்திக்கதக்கதாகும். மகிஷாசுரமர்த்தினி அசுரனை ஈட்டியால் குத்தம் சிறப்பு அமைப்பு அபூர்வமாகும்.

இங்குள்ள விஷ்ணு குகைக் கோயிலில் பெருமாள் பள்ளி கொண்ட பெருமானாக காட்சி தருகிறார் அவருக்கு வலப்பக்கம் பூவராகரும் இடப்பக்கம் யோக நரசிம்மரும் உள்ளனர், வலப்பக்க சுவற்றில் மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி நின்ற நிலையிலும், இடப்பக்கம் சுவரில் அதே கடவுளர்கள் அமர்ந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளனர். முன் மண்டபத்தை இரண்டு சிம்மத் தூண்கள் தாங்கி குடையப்பட்டுள்ளது இதற்கு இரு பக்கத்திலும் இரண்டு துவாரபாலகர்கள் காவல் காக்கின்றனர் இவை அனைத்தும் மலையை குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்களாகும்.

இங்குள்ள லிங்கத்திற்கு இருபக்கத்திலும் துவாரபாலகர்கள் எதிர் சுவற்றில் சுப்பிரமணியன், ஹரிஹரன், துர்கை, துர்க்கை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி, அதிலும் போருக்குப் புறப்படுவது போன்றும், அடுத்து துர்க்கை மகிஷாசுரனை வென்று வெற்றிக் களிப்பில் நிற்பது போன்று உள்ளது. இவ்வாறு தொல்பொருள் இயக்குனர் திரு நடன காசிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் மன்னர்கள் என்ற நூலில் புலவர் பூசி தமிழரசன் அவர்கள் கூறியிருப்பதாவது.

நந்திவர்ம பல்லவ வேந்தன் (கி.பி.796-846)ல் 16 ஆம் ஆட்சியாண்டில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தன் ஆலத்தூர் மலையில் கிபி 812ல் குடைவித்து சிவன் கோயிலை உருவாக்கினார். அதில் படாரரை எழுப்பி விழா எடுத்தார். இக்குடைவரை முதல் மகேந்திரவர்ம பல்லவன் குடைவித்த குடைவரையின் பாணியில் குடைவிக்கப்பட்டுள்ளது. குடைவரைக்கோயில் உருவாக்கப்பட்ட பின் ஆலத்தூர் திருஆலத்தூர் என்று பெருமை பெற்றுள்ளது.

இங்குள்ள மலையடிப்பட்டி சிவன் கோயில் குடைவரை சிறியதாக உள்ளது ஆனால் காலத்தாலும் அமைப்பாலும் பழமைச் சிறப்பைப் பெற்றுள்ளது. இயற்கை சீற்றங்களால் காற்று மழை வெப்பம் தாக்காமல் இருக்க குடைவரையில் உட்கூடம் குடைவிக்கப்பட்டுள்ளது. இது அரைபகுதியைக் கொண்டது. லிங்கம் வைத்து குடைவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரைப்பகுதி முன்மண்டப கூடமாக உள்ளது. முன் மண்டபத்தில் காளை பீடத்துடன் உள்ளது.

குடைவரையில் இடப்பக்கம் உள்ள வீரபத்திரர் சிற்பம் சிதைந்துள்ளது இங்குள்ள ஏழு தாயார் சிற்ப வரிசை ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பல கோயில்கள் ஆலயங்களிலும் சப்தமாதர்கள் வழிபாட்டுக்கு காரணமாக முத்தரையர்கள் ஆட்சி இருந்துள்ளது.

மண்டப பாறைச் சுவற்றில் மற்ற சிற்பங்களான பிள்ளையார், சிவன், திருமால், மகிசாசுரமர்த்தினி, ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. துர்க்கை அல்லது மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி குறிப்பிடத்தக்க சிறப்பை பெற்றுள்ளது. இச்சிற்பத்தில் எட்டு கைகள் உள்ளன. சிங்கத்தின் மீது தன் இரு கால்களையும் வைத்து அமர்ந்த நிலையில் உள்ளது. ஈட்டியை கையில் வைத்துள்ளார். இக்காட்சி எருமைத்தலை கொண்ட அசுரனை அழிக்க புறப்படதுபோல இருக்கிறது.

இக்குடைவரை யில் உள்ள துவாரபாலகர் பல்லவர் பாணியைப் போல் இரண்டு கைகளையே பெற்றுள்ளனர். ஒருவர் மாட்டுக் கொம்புடன் உள்ளதோடு முடியும் (கிரீடம்) சூட்டியுள்ளார். இங்குள்ள வாயில் காப்போர் எளிமையாக காணப்படினும் புதுமையாகவும் தோற்றமளிக்கப்படுகிறார். இங்கு உள்ள திருமால் குடைவரை படைப்பும் முத்தரையர் அமைப்பே ஆகும் என்று கூறுகின்றனர்.

4.குன்று ஆண்டார் குகைக்கோயில்;
----------------------------------------------------------------------

குன்று ஆண்டார் கோயில் இன்று குன்றாண்டார்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து செம்பாட்டூர், அண்டக்குளம் வழிச்சாலையில் 27 கிலோமீட்டர் வடக்கில் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமை இடமாக திகழ்கிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டு இவ்வூரை திருக்குன்றக்குடி என்று பெயரிடுகிறது. குன்றாண்டார் குகைக் கோயிலில் குடைவரை கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் பர்வதகிரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பகுதியாக காணப்படும் இக்குடைவரை திருக்கோகர்ணத்தின் அமைப்பை ஒத்ததாக அமைந்துள்ளது. இதனை முனைவர் ஜே.ராஜாமுகமது தனது நூலில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கிபி 710-715 காலத்தது என்றும் எம்.எஸ்.ராமசாமி மூன்றாம் நந்திவர்ம பல்லவன் 846-869 எனவும் கருதுகின்றனர். (ஆம் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு பக்.213 ஜெ.ராஜாமுகமது)

இக்குடைவரைக் கோயிலின் மூல ஸ்தானத்தை பிற்காலத்தில் விஸ்தரித்து பல்வேறு மன்னர்கள் அமைத்துள்ளனர். இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் குவாவன் என்ற முத்தரைய மன்னன் இப்பகுதியை ஆண்டுள்ளான். கிபி எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டு சான்றாக உள்ளது. இவனின் மகன் குவாவன் சாத்தனின் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இவனே இக்கோயிலை குடைவித்தவன் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம். இவனது மனைவி அரசியாக சமணப்பள்ளிக்கு கொடையளித்த விவரம் இங்கே உள்ளது. இதன் மூலம் இவர்களின் முன்னோர் சமண மதத்தை ஆதரித்து வளர்த்தனர் என்பதை அறியலாம்.

இக்காலத்தில் காவிரி ஆற்றுக்கு தெற்கே, அதிலும் புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர்களின் நேரடி ஆட்சி நடைபெறவில்லை. பல்லவர்களுக்கு உற்ற நண்பர்களாக இருந்தும், கட்டுப்படும், சுயேட்சையாகவும் முத்தரையர்களே இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். முத்தரையர் அமைத்த குடைவரையின் முகப்பில் துவாரபாலகர்களாக முத்தரையர் ஒருவரும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனும் இடம்பெற்றுள்ளனர். இக்கருத்தினை திரு.என்.எஸ்.ராமசாமி தனது ஆங்கில நூலில் தெளிவாக்கியுள்ளார். (ஆர்க்கியாலஜி கல் புதுக்கோட்டை மாவட்டம்.)

இவ்வழி வந்த முத்தரையர்கள் தொடர்ந்து 14 ஆம் நூற்றாண்டு வரை மிகச் செல்வாக்குடன் இப்பகுதியில் வாழ்ந்ததை இங்குள்ள கல்வெட்டு செய்திகளும் உறுதிப் படுத்துகின்றன. இக்கோயிலில் நூற்றுக்கால் மண்டபத் தூண்கள் பல முத்தரையர்களின் கொடையாக அளிக்கப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும். இங்குள்ள குடைவரையின் தென்கோடியில் உள்ள கல்வெட்டு, கோ நந்திப் போத்தரையரின் ஆட்சியாண்டு 3ல் (கி.பி.849) மூன்றாம் நந்திவர்மன் காலத்தில், புழை நாட்டு, வடுவூர்க் கணபதி மாள்ளுவனாயின பகைச் சந்திர விசையரையன, திருவாதிரையன்று 200 நாழி (உழக்கு)  அரிசி 100 பேருக்கு உணவளிக்க வழங்கியதே குறிப்பிடுகின்றது.

இங்குள்ள வடகோடிக் கல்வெட்டு, கோவிசைய நந்திப் போத்தரையர்க்கு யாண்டு 5வது (கி.பி.851) காலத்தில் மார்பிடுகுவராயின பேரதியரையரின் அடியான் வாலி வடுகன் என்ற கலிமூர்க்க இளவரையன், இங்கே ஒரு ஏரியை வெட்டி வாலி ஏரி என பெயரிட்டுள்ளார். இந்த இடத்திலேயே மற்றொரு முத்தரையன் திருவழுந்தூர் நாட்டு விழிந்தரையன் எனப்படுவதையும் காணமுடிகிறது.

இக் குடைவரைக் கோயிலின் இரண்டாம் கோபுர வாசலுக்கு வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் கிபி 977 காலத்தில் இரண்டாவது பெருங்குடியான, விருதராஜப் பயங்கர புரத்து, நகரத்து, மக்கள் ஆட்டைக்கு வாடாக் கடமையாக (ஆண்டிற்கு எப்போதும், எதனாலும் குறைவுபடாத வரியாக) 1000 காசு கொடுக்கவும், வடபனங்காட்டு நாட்டு அரையர்கள் காக்கவும் என குறிப்பிடுகின்றது. இதிலிருந்து முத்தரையர்கள் நாடு, நகரங்களையும், கோவில்களையும், செல்வாக்குடன் காவல் காத்ததையும் அறியலாம்.

இக்கோயிலின் கீழ் பிரகாரம் பத்திரிப்புச் சுவர் கல்வெட்டு, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1229) காலத்தில் ஜயசிங்க குல காலநாட்டு, பணங்காட்டுப், கோயில் தானத்து முதலிகளுக்கு இரண்டு மலைநாட்டு அரையர்களும், பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசு, நாங்கள் பகை கொண்டு எய்யும் இடத்து, எங்கள் காவலான ஊர்களில் வழிநடை குடிமக்கள், இவர்களை அழிவு செய்ய மாட்டோம், மீறி ஒருவனுக்கு அழிவு செய்தால் 100 பணமும், தெண்டமும், ஊராக அழிவு செய்தால் 500 பணமும் தெண்டம் வைக்கக் கடவோம் எனத் தெரிவிக்கிறது. இதிலிருந்து முத்தரையர்கள், மக்களையும், நாட்டையும் காவல் காத்ததையும், காவலுக்கு மீறி குற்றம் செய்வோரில் தனி ஒருவனுக்கும், ஊரோடும் கூட்டாகவும் தண்டனை முறைகள் கடைபிடிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது.

மேற்படி பர்வதகிரீஸ்வரர் கோயில் இரண்டாம் கோபுர வாசலுக்கு இடது புறம் சுவரில் உள்ள ஸ்ரீ பொக்கன உடையாரின (கி.பி.1376) கல்வெட்டில், கோனாட்டு, கீழைப்புதுவயல் அரையர்களில் ஆதன மிளகியார், விக்கிரமச் சோழ முத்தரையர் மகன் நல்ல பெருமாளான இரண்டு மலைநாட்டு விக்கிரமச் சோழ முத்தரையன் கல்லு வெட்டிக் கொடுத்து, என் காணியாட்சியும், அரசும் இரண்டு மலை நாட்டாரும் நிலையிட்டுத் தருகையில் என் காணியாட்சிக்கு அரசு சுவந்திரம், நாயனார்க்கு நான் கொடுத்த ஐந்தில் ஒன்றும், நாயனார் அனுபவித்துக் கொள்ளவாராகவும், எனக்குப் பிள்ளைகள் இல்லாத அளவுக்கு எனக்குப் பின்பு இந்த ஐந்து கூறும் சந்திராதித்த வரை நாயனார் ஆளக் கடவார்களாகவும், இப்படி சம்மதித்து கல்வெட்டிக் கொடுத்தேன் இரண்டு மலை நாட்டு விக்கிரமச் சோழ முத்தரையன் எனக் கூறுகிறது.

மேற்படி கோயில் மண்டபத்து வடபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு திருக்குன்றக்குடி உடைய நாயனார் கோயில் போவதரையன் திருமண்டபமும், நித்த மண்டபமும், பதையாமாலன் அழகிய சோழ நாடாழ்வான் தர்மம் என்கிறது.

மண்டபத் தூண் கல்வெட்டில் துவரங்கோட்டை அரையர்களில் பொன்ன துண்டராயன் தர்மம் என்கிறது. மற்றொரு தூணில் பெரும்புலியூர் அரையர்களில் காத்தானான ராரா முத்தரையன் தர்மம் என்றும் உள்ளது. மற்றொரு தூணில் துவரங்கோட்டை அரையர்களில் இளங்கவதரையன் மகன் பிள்ளாண்டான் தர்மம் என்றும் உள்ளது.

இக்கல்வெட்டுக்கள் தவிர, வேறு பல மன்னர்களும், நாடாள்வோரும், ஊரும், நாடும், இம்முத்தரைய மன்னனால் அமைக்கப்பட்ட கோவிலின் பெருமைகளையும், சக்தியையும், உணர்ந்தோர் பல்வேறு காரணங்களுக்காக இங்கே வந்துள்ளனர். கல்வெட்டை பதிவு செய்துள்ளனர்.

இதே போல திருக்குன்றக்குடி என்றழைக்கப்பட்ட குன்று ஆண்டார் கோயிலும், மலையடிப்பட்டியிலும் குகைக் கோயிலை அமைத்தவன் குவாவன் சாத்தன் என்ற விடேல்விடுகு முத்தரையர் மன்னன் ஆவான். இவனால் குடைவிக்கப்பட்ட இக்கோயில்களின் மகிமையை அறிந்த பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும், விஜயநகராரும், நாடாழ்வோருமாக இங்கே கல்வெட்டுக்களையும் வெட்டி சிறப்பித்துள்ளனர்.

இவ்வாறு முத்தரைய மன்னர்கள் தங்கள் ஆட்சியின் சிறப்பினை விளக்கக் கூடியதும், கலைக்கு ஆற்றியுள்ள தொண்டும், ஆட்சித் திறனும், விவசாயத்திற்குச் செய்துள்ள சேவைகளையும் எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இடங்களாக, மலையடிப்பட்டியையும், குன்று ஆண்டார் கோவிலையும் சான்றாகக் கொள்ளலாம்.

தொடரும்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்றச் சங்கம்..🔥🔥


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்