எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்


எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்---



எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்.
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிராவட்டம் பாலத்தடியிலிருந்து வடக்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது. சிறிய கிராமம் என்றாலும், இங்கு முருகன் கோயில் பெரியதாக உள்ளது. 

இத்திருக்கோயில் அமைய வரலாறு ஒன்று உள்ளது. முத்தரையன் எனும் குறுநில மன்னன் ஒருவன் எட்டிக்குடியை ஆட்சி செய்தான். அவன் தன் ஆளுமைக்குட்பட்ட பகுதியில் அந்தணர்களையும், வேளாண் மக்களையும் குடியேற்றினான். இந்நகரிலேயே விசுவ பிராமண குலத்தைச் சேர்ந்த கலைத்திறன் கொண்ட சிறுவனும் வாழ்ந்து வந்தான். அவன் முருகப்பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். அவன் திருமுருகனின் உருவம் ஒன்றை அழகுற செய்து அதனை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டுமென்று விருப்பினான். அதன்படி சிக்கல் கோயிலில் ஐம்பொன்னாலான சிலையொன்றை வடித்தான். அவ்வாறு நிறுவிய அவன், முருகனது மூலத் திருமேனியொன்றை செய்ய விரும்பினான். அவன் அதற்குரிய கல்லைத் தேடியலைந்து இறுதியில் எல்லா அம்சங்களும் நிறைந்து காணப்பட்ட கல்லொன்றில் சிலை வடிக்கத் தொடங்கினான். அன்றாடம் சிலை வடிக்கத் தொடங்கும் போதெல்லாம் முருகனது திருநாமத்தை உச்சரித்த பின்பே சிலைவடிக்கும் வேலையில் ஈடுபடுவான். 

அப்போது முருகன் சிலையில் ரத்தம் போல் வியர்வையும் அக்கினி சுவாலையும் உருவானது. இந்த அற்புதத்தைக் கண்ட அச்சிற்பி ஓடோடிச் சென்று மன்னனிடம் விவரித்தார். மன்னனும் ஓடோடிச் சென்று அந்த அற்புதத்தைக் தன் கண்களால் கண்டான். மேலும் மயிலை செப்பனிடும் வேளையில் அம்மயில் மேலே பறந்து விடும் என்பதால், அம்மயிலின் கால்களை சங்கிலியால் பிணைத்தவாறு அம்மயிலின் சிறகுகளை உளியால் செதுக்கத் தொடங்கினான். இறுதியில் மயிலின் கண்களை தீட்டும் போது அம்மயில் மேலே பறக்கத் தொடங்கியது. உடனே அச்சிற்பி அந்த மயிலின் கால் நகங்களை சிற்றுளியால் சற்றே பின்னப்படுத்தினான். உடன் தானே அம்மயில் மீண்டும் பூமியில் வந்து நின்றது. 

அதைக் கண்ட மன்னன் முத்தரையர் வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டான். அதன்பின் அச்சிற்பி ஒரு நல்ல நாளில் முறைப்படி முருகன் திருஉருவை கோயிலில் பிரதிஷ்டை செய்தான். 

எட்டுக்குடி முருகன் வரலாறு இவ்வாறே அமைந்தது. இத்திருக்கோயில் பெரிய ராஜ கோபுரமும், கொடி மரமும் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக விளங்குகிறது. அத்துடன் மகாமண்டபம் அதன் அருகில் விமானத்துடன் கூடிய கர்ப்பகிருஹமும் காணப்படுகிறது. 

ஆறுமுகப் பெருமான் இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் நீலமயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். மயிலின் கால்களை ஆதாரமாகக் கொண்டு ஒரே சிலையாக வடிக்கப்பட்டது. 

இக்கோயிலின் தலவிருட்சம் எட்டி மரமாகும். இத்தலத்தில் சித்திரா பெளர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து வீதி உலா வரும் காட்சியைக் காண மிகவும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பு >>> ( தகவல் "திருத்தலம்" என்ற மின் பதிரிகையேல் என்று நகல் எடுத்தது.இதை பற்றி மேல் விவரங்கள் தெரிந்தவர்கள் எழுதவும் நன்றி )

குறிப்பு.தற்போது இதன் நிர்வாகம் அரசாங்கத்திடம் உள்ளது. இதன் முதல் மரியாதையை வேறு ஒரு சமூகத்திடம் உள்ளது. நாம் இழந்த பல வரலாறுகளில் இதுவும் ஒன்று.
சிந்திப்போம் ஒன்றுபடுவோம்.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER