கோ இளங்கோ முத்தரையர் எடுப்பித்த கீரனூர் சிவன் கோயில்
சோழர்_காலத்திற்கு_முன்பு...!
நம்முடைய வரலாற்றினை, தொன்மையினை, முன்னோர்களின் சிறப்பினை அறிந்து கொள்ள, நாம் கையிலெடுக்க வேண்டிய மிக இன்றியமையாத கருவி #கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்களின் வாயிலாகத்தான் நாம் சான்றுகளுடன் கூடிய நமது பண்டைய வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அந்த வகையில் நமது கீரனூர் சிவன் கோவில் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட #பன்னிரண்டு_கல்வெட்டுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் அனைத்தும் படியெடுக்கப்பட்டு கி.பி 1929 ம் ஆண்டிலேயே ( 91 வருடங்களுக்கு முன்னரே) புதுக்கோட்டை சமஸ்தான அரசின் ஒரு அங்கமான #பிரகதாம்பாள்_அரசு_அச்சகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது (Inscriptions (Texts) of The Pudukottai State).
ஆக நாம் புதிதாக ஒன்றும் கண்டுபித்து கூறவில்லை. 91 ஆண்டுகளுக்கு முன்பு படியெடுத்து ஆவணப்படுத்தப்பட்ட நமது சிவன் கோவில் கல்வெட்டுகளை கொண்டு நமது தொன்மையின் சிறப்புக்களை நினைவுகூர போகிறோம் அவ்வளவே..!
நமது சிவன் கோவிலின் கல்வெட்டுக்களிலே காலத்தால் மூத்தது, #முத்தரைய_மன்னனின் #பழைய_தமிழ் கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டு கோவிலில், ஈசன் சன்னதிக்கு வடக்குபுறம் உள் சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு எதிரே பொறிக்கப்பட்டுள்ளது (படம் 2).
ஏன் இந்த கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிந்துகொள்ள தமிழரின் எழுத்து உருமாற்ற வரலாற்றினை நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று நாம் எழுதும், படிக்கும் தமிழின் எழுத்து வடிவமானாது ஆதியில் குறியீடுகளாக, பாறை ஒவியங்களாக உருவானவை. அவ்வாறு குறீடுகளாக தொடங்கிய தமிழரின் எழுத்து முறையானது பொது யுகத்திற்கு முன்பே #தமிழ்_பிராமி அல்லது #தமிழியாக வளர்ச்சி அடைகிறது. ( கீழடி பானை எழுத்துக்கள்). பொது யுகத்திற்ன் தொடக்க நூற்றாண்டுகளில் இந்த எழுத்துமுறை தொடர்கிறது. சித்தன்னவாசல் சமணர் படுக்கை கல்வெட்டுக்கள் அதற்கு உதாரணம். தமிழி எழுத்தில் கீரனூரை " 𑀓𑀻𑀭𑀷𑀽𑀭𑁆 " இப்படி எழுதியிருப்போம்.
அதன் பிறகு இந்த தமிழி எழுத்தானது மெல்ல வளைந்து கி.பி 6ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்பகுதியில் #வட்டெழுத்தாகவும், வடக்கில் பழைய தமிழ் எழுத்தாகவும் மாறுகிறது. இது பிற்கால சோழர்களுக்கு முந்தைய பல்லவ, பாண்டிய கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. கீழே படம் 1 ல் காணும் கீரனூர் எழுத்து பொறிப்பு இதைவிட காலத்தில் பிந்தியது. (கி.பி 9ம் நூற்றாண்டு). இக்காலகட்டத்தில் வடமொழியினை படிக்க #பல்லவ_கிரந்தம் என்ற எழுத்து முறையும் இருந்தது.
இந்த இவ்வெழுத்துக்கள் கி.பி பதினொன்றாம் நூற்றாண்டுகளில், நாம் இப்போது எழுதும் தமிழ் எழுத்தின் முன்னோடியான சோழர் கால தமிழ் எழுத்துக்களாக மாற்றமடைகிறது. சோழர்களை தொடர்ந்து பாண்டியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர் என பல்வேறு காலக்கட்டங்களில் பல மாற்றங்களை அடைந்துள்ளது இன்று நாம் பயன்படுத்தும் எழுத்து முறையாக மாறி உள்ளது.
ஆகவே நமது சிவன் கோவில் கல்வெட்டுக்களில் மேலே கூறிய கல்வெட்டை காலத்தால் மூத்ததாக நாம் கருத இடமுண்டு. இந்த கல்வெட்டு கூறும் செய்தி இதுவே.
ஸ்வதிஸ்ரீ #கொனாலறு_முத்தரையரின் பதிமூன்றாம் ஆட்சி ஆண்டில், கீரனூர் #உத்தமதானி_ஈசுவரத்து_பெருமானடிகளுக்கு #திருவிழா செய்வதற்கு; #கீரனூர்_ஊர்சபை நிலதானங்களை அளிக்கிறது. மேலும் மந்நியதேவன், நாரணன், மூவன் கண்டன், பார்தாயன் கண்டன் ஆகிய நான்கு தனிநபர்களும் நிலத்தானம் அளிக்கின்றனர். (படம் 3 - கல்வெட்டு பிரதி)
இந்த கல்வெட்டு நம் சிவன் கோவில் வரலாற்றினை அறிவதில் மிக முக்கிய கல்வெட்டு. காரணம் நம் சிவாலயத்தினை #கட்டியவர் பற்றி நேரடி தகவல்களை தாராவிட்டாலும், நமக்கு பல அனுமானங்களை இந்த கல்வெட்டு தருகிறது.
1946 ல் வெளியிடப்பட்ட Inscriptions in the Pudukottai State - part II எனும் கல்வெட்டு தொகுப்பு நூலானது இந்த கல்வெட்டில் வரும் கொனாலறு முத்தரையன் என்பது #கோ_இளங்கோ_முத்தரையன் என்றுதான் வாசிக்கப்பட்ட வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. மேலும், புகழ்பெற்ற கலைபடைப்பான கிள்ளுக்கோட்டை #மலையடிப்பட்டி #கண்ணிறைந்த_பெருமாள் கோவில் குடைவரையை எடுப்பித்த #குவாவன்_சாத்தன் எனும் இரண்டாம் #விடேல்விடுகு முத்தரையனே இந்த கோஇளங்கோ முத்தரையன் என குறிப்பிடப்படுகிறது. (படம் - 4)
இவனது ஆட்சி காலம் கி.பி 791 முதல் கி.பி 826 வரை. கல்வெட்டு கூறும் இவனது பதிமூன்றாம் ஆட்சி ஆண்டு என்பது #கிபி_804. ( கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்) ஆக நமது சிவன் கோவிலின் முதல் கல்வெட்டானது சரியாக 1216 வருடங்களுக்கு முன்பே கி.பி 804 ல் பழைய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டின் மற்றொரு சிறப்பு, பண்டைய முத்தரைய மன்னர்களின் வரலாறு பற்றிய முக்கிய கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்று. காரணம் கி.பி எட்டாவது நூற்றாண்டுகளில் பல்லவ மன்னர்களுக்கு கீழ் சிற்றரசர்களாக நமது டெல்டா மாவட்டங்களில் ஆட்சி செய்துவந்த முத்தரையர்கள், விடேல்விடுகு முத்தரையன் காலத்தில் எவருக்கும் கட்டுப்படாத சுதந்திர ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே மலையடிபட்டியில் கி.பி 791ல் #தந்திவர்ம_பல்லவனின் கீழ் தன் பெயரை பதிவு செய்யும் இந்த முத்தரைய அரசன், கி.பி 804 ல் நமது கோவில் கல்வெட்டு, உட்பட ஐந்து கோவில்களில் தனது பெயரிலேயே தொடங்கும் கல்வெட்டுக்களினை பதிவு செய்கிறான்.
அவற்றில், தஞ்சாவூர், #திருச்சாத்துறை ஆலயத்தில் உள்ள இவனது கல்வெட்டில், இந்த முத்தரையன் தரும் விளக்கு தானத்தில் இவன் பெயர் #உத்தமதானி என குறிப்பிடப்படுகிறது. தற்போது நமது கோவிலின் முத்தரையன் கல்வெட்டிற்கு வருவோம். கல்வெட்டில் நமது சிவன் கோவில் பெயர் முதன்முதலாக #உத்தமதானி_ஈசுவரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆக பிற்கால பல்லவர் பாணியில் அமைந்துள்ள நமது சிவன் கோவிலை இந்த விடேல்விடுகு முத்தரையனது காலத்தில்தான் இவன் ஆட்சிக்கு உடபட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. (மறுப்பு இருப்பினும் நண்பர்கள் சான்றுகளுடன் தங்கள் வாதங்களை முன்வைத்து நம்மை நெறிப்படுத்தவும்).
இந்த கல்வெட்டு தெளிவுபடுத்தும் மேலும் சில ஊர் சிறப்புக்களையும், சிலருக்கு கசக்கும் உண்மைகளையும் காண்போம்.
1. கி.பி 804 ம் வருடத்திலேயே (கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) நமது ஊரானது ஒரு நல்ல ஊர்சபையை கொண்ட பெரிய ஊராக இருந்திருக்கிறது.
2. அந்த ஊர்சபைக்கு, ஊர் காக்கும் இறைவனுக்கு திருவிழா செய்யவேண்டும், ஊரில் சுபிட்சம் பெருக வேண்டும், சுற்றியுள்ள ஊர்களின் மத்தியில் கீரனூரில் புகழ் ஓங்கி வளரவேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்திருக்கிறது.
3. இறைவனுக்கு திருவிழா செய்ய நிலங்களை தானமாக அளிக்கும் அளவிற்கு, நல்ல வருவாய் மற்றும் சிறந்த நிர்வாகத்தையும் உடையதாக சோழர் காலத்திற்கு முன்பே நமது ஊர்சபை இருந்திருக்கிறது.
4. மேலும் தனிப்பட்ட முறையில் கோவில் திருவிழாவிற்கு நிலத்தானம் அளிக்கும் நல்ல குடிமக்களை 1200 வருடங்களுக்கு முன்பே நமது ஊர் பெற்றிருந்திருக்கிறது.
5. வைகாசி விசாக தினத்தில் கோவில் விசேஷங்கள் நடைபெற்றிருக்கிறது.
6. இன்று நாம் அருள்மிகு உத்தமநாதசாமி ஆலயம் என்று அழைக்கும் நமது சிவன் கோவில் முதன்முதலில் #உத்தமதானி_ஈசுவரம் என்று அழைக்கப்படிருக்கிறது. ஈசன் பழைய தமிழில், பெருமானடிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
7. இறுதியாக, 1200 வருடங்களுக்கு முன்பே, கோவிலின் முதல் கல்வெட்டிலேயே நமது ஊர் #கீரனூர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. (சுகபுரி, நக்கீரனூர், உத்தமநாதபுரம் போன்ற எந்த பெயர்களும் இந்த கல்வெட்டில் இல்லை).
சோழர் காலத்திற்கு முன்பே, இவ்வளவு சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டுள்ள நமது சிவன் கோயிலும், ஊரும் உலகம் போற்றும் சோழராட்சியில் எவ்வாறு இருந்திருக்கும்??
Comments
Post a Comment