முத்தன் பள்ளம் (நாவல்)


முத்தன் பள்ளம்:

முத்தனின் முன்னோர்கள் திருக்காட்டுப்பள்ளி, செந்தலையை  தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் , ஆட்சி மாறுதலுக்குப் பிறகு நாயக்கர், மராட்டியர் காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் காவல்பணி செய்வதாக ஒப்புக்கொண்டு  வெவ்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள் .


அப்படித்தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்த முத்தனையும்  ' தோப்புவிடுதி' பெருந்தலை தனக்கும், ஊருக்கும் காவகாக்க வேண்டுமென்று சொல்லி அழைத்துவந்து  ஊருக்குக் கிழக்காக இடம் ஒதுக்கி தங்க வைத்தார்...

தோப்புவிடுதிக்கு இடம்பெயர்ந்து வரும்போது , முத்தன்  தன் குலதெய்வமான காவக்  கருப்பையும் சேர்த்தே பிடிமண்ணில் சுமந்து வந்தான்.ஊரின் கிழக்காலே முத்தனும்,  ஊருக்கு மேற்காலே  அடர்த்த பத்தைக்குள் அவன் குலசாமியான கருப்பசாமியும்  குடியேறிக் கொண்டனர்.
முத்தனுடைய கருப்பசாமி தோப்புவிடுதிக்கு வந்து சேருவதற்கு முன்னாள் அந்த ஊருக்குள் பெண் தெய்வங்கள் மட்டும்தான் இருந்தது. கருப்பசாமி வந்த பின்னால் பெண் தெய்வங்களோடு காவக்கருப்பும் சேர்ந்து கொண்டதாகவும், கருப்பு சேர்ந்த பின்னாடி தாய்த் தெய்வங்களுக்கும் சக்தி கூடிப்போச்சு என்று ஊருக்குள் பேச்சாகக் கிடக்கிறது.
இந்நிலையில் முத்தனுக்கு திருமணமாகி அவனுக்கு 'பாட்டன் ' என்ற மகன் பிறக்கிறான் .

முத்தன் மகன் பாட்டனும் தன் குடிப்பெருமை  மீது  கொண்டிருந்த பெருமிதத்தை போலவே குலசாமியின் மீதும் அதீதப் பற்று வைத்திருந்தான். அந்த ஊர்க்காரர்கள் பாட்டனின்  சாதிக்கு எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் வீட்டு உணவை தான் அருந்தினால் தன் மீது தன்னுடைய குலசாமி கருப்பு அணையாது  என்று கருதி பாட்டன் பயம்கொண்டான்.

" ஏலே பாட்டா, நீ எங்க குடியில சாப்பிடாமப் போன வெளியூரு  சாதிசனம் எங்கள மதிக்குமாலே.."
என்று ஊர்க் காரர்கள் கூப்பாடுபோட்டு ஊர்ப் பெருந்தனத்திடம் வழக்கை கொண்டு செல்கின்றனர்.

உண்மையிலேயே பாட்டன் தங்கள் வீட்டில் உணவருந்தாதது ஊரின் பிரச்சினையல்ல... காவக்காரப் பாட்டன்  காவலோடு சேர்த்து வேறுசில பணிகளையும் தங்களுக்கு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஊரை பெருந்தனத்திடம் அழைத்துச் சென்றது.

பெருந்தனக்காரருக்கு பாட்டன் மீது அளவு கடந்த பாசம் உண்டு, முன்பு ஒருமுறை  பட்டுக்கோட்டைச் சந்தைக்கு போய்த்திரும்பியபோது நடுக்காட்டில் நரிக் கூட்டம் பெருந்தனத்தை விரட்டவும்... பட்டன்தான் நரியோடு மல்லுக்கட்டிவிட்டு அவரை தோளில் தூக்கிகொண்டுவந்து ஊர் சேர்த்தான்.
பாட்டனின் அந்த துணிகரச் செயல் ஊர்ப்பெருந்தலைக்கு கண்ணீரை வரவழைக்க... ஊர்த்தலையின் கண்ணீர் கண்டு பாட்டன்

' ஐயா என்னயிது , யாரும் பார்த்தால் உங்க குடிப்பெரும என்னாவது '  என்று பதறவும்...

என்னலே பெரிய வெங்காயப் குடிப்பெரும என்று சொல்லி ...  முத்தரையர்களின் வீரத்த நான் கேள்விப்பட்டிருக்கேன், இப்பதான்ய நேர்ல பார்க்கிறேன்...
என்றெல்லாம்  பலவாறு பாட்டனுக்கு புகழாரமெல்லாம் சூட்டியிருக்கிறார்.

இருந்தாலும்...பெருந்தனம் செத்த பிறகு , சேவகம் பாத்தாதான் ஊருக்குள்ள இருக்கலாம் என்று ஊர்ச்சனம் சொல்லவும்... வேறு வழியின்றி காவக்காரப் பாட்டன் காவகாத்த மண்ணையே விட்டுப் பிரியும் வலியோடு  காட்டுவழியே  கால்நடையா  நடந்து ஊரணிக்காட்டிலிருந்த தன் அண்ணனைப் பாக்கப் போறான்.
பாட்டனின் அண்ணன் ஊரணிக்காட்டில் ஒரு பெருங்குடியான வீட்டிற்கு காவப்பணி செய்துவருகிறார். தம்பியின் கதை கேட்டு திகைத்த அண்ணன்
      'என்ன இருந்தாலும் ஆத்தாலும், அப்பனும் நம்ம  பெத்த மண்ணுடா அது, அத விட்டு நீ வரக்கூடாதுணு சொல்லி பாட்டனயும், அவன் ஆசையோடு அண்ணன்காரனுக்காக இடுப்பு வேட்டியில் மடித்துக்  கொண்டுவந்த உடும்பையும்  சேர்த்து விரட்டி விட்டான்...

நம்பி வந்த அண்ணன்காரணும் விரட்டிவிட்ட சோகத்தில் காட்டுவழி நடந்து வந்த பாட்டன் தீத்தான்விடுதி வந்து சேர்கிறான், தாகமும், பசியும் அவனுக்குள் சேர்ந்துகொள்ள  அங்கிருந்த ஒத்த வீட்டுப்  பருவப் பெண்ணிடம் தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு பசிக்கு ஆகாரமும் கேட்டு வாங்கிப் புசிக்கிறான். அசதியில் கொட்டகை வாசலிலே படுத்தவனுக்கு நள்ளிரவில் அந்தப் பெண் முத்தாயி  தன் வீட்டுக்குள்ளாறயே அவனுக்கு  படுக்க இடம் கொடுக்கிறாள், படுத்தவனுக்கு  குளிரைத் தணிக்க தன் உடலையும்  ஒப்படைக்கிறாள் !

இரவில்எல்லாவற்றையும் அவள் மூலம் தணித்துக் கொண்டவன் விடிந்தவுடன் அவளிடம் சொல்லாமலேயே  விடைபெற்றுச் சென்றுவிட்டான். அவன் கூட்டியாந்த ரெண்டு நாய்களில் ஒன்று மட்டும் கொட்டகை வாசலிலேயே படுத்துக் கிடந்து, அவளிடம்  பாட்டன் வந்துசேரும் நாள்வரை அவளை காவல்காப்பதாக கட்டியங்கூறிக் கொண்டிருந்தது.

நகர்ந்து சென்ற பாட்டன் அடுத்து அண்டனூருக்கு காவக்காரனாகிறான், அண்டனூரின் காடு, வயல், குளங் குட்டை என்று எல்லாமே பாட்டனின் காவலுக்குள் இரண்டு ஆண்டுகள் பத்திரமாக இருந்தது. ஆனால் அண்டனூரின் சாதி ,
நாங்கதான் ஒசந்த சாதி எங்களுக்குதான்  பாட்டனோட காவல் பாத்தியப்பட்டது ,
நாங்கதான் சனக்கட்டு கூட உள்ளவுக எங்களத்தான் பாட்டெங் காவ காக்கணும்  ...
    என்று வெவ்வேறு தொனியில் விவாதிக்கக் தொடங்கியவுடன் வெறுத்துப்போன பாட்டன் முத்தாயியின் நினைவும் சேர்ந்து வருத்த அண்டனூரிலிருந்து வெளியேறி முத்தாயியை தேடிச் செல்கிறான்...பின்பு  அவளை மணம் செய்து கொண்டு தனக்கு மட்டுமே பழக்கப்பட்ட ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அவளோடு  சேர்ந்து குடியேறுகிறான் .  அந்த ஊரின் பிந்தைய பெயர்தான்
"முத்தன் பள்ளம்" .

-------------------------------
--------------------------------

           பாட்டன் ஒருமுறை புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டப் பைரவ தொண்டைமானுக்கு ஒரு மான்குட்டியை பரிசளித்தான், மான் குட்டியின் அழகில் சொக்கிப்போன தொண்டைமான் அது பிடிக்கப்பட்ட இடத்தை விசாரித்தார். முத்தன் பள்ளம் என்ற பகுதியில் மான்குட்டி பிடிபட்ட கதையை  பாட்டன் மன்னரிடம் சொல்கின்றான்...

நரியாறு, அக்னி ஆறு, மானியக் குளம் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று கலக்கும்  பகுதிதான் 'முத்தன் பள்ளம்' . முத்தன்பள்ளம் தீவாக மாறுவதும், பாலைவனமாகச் சுடுவதும் பருவநிலையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டு முழுவதுமே இதில் ஏதோவொரு நிலையில்தான் முத்தன்பள்ளம் மூழ்கிக் கிடக்குமாம்..! காட்டுவழியாக முன்பு பாட்டன் நடந்துவந்தபோது இந்த இடத்தில்தான் ஒரு நரியைப் பிடித்து உணவுக்காக உரித்தானாம், மக்கள் வாழ்வதற்கான  எந்த முகாந்திரமும் அற்றுக் கிடந்த அந்த மணல்வெளியில் பாட்டனுக்கு ஏனோ அப்படி ஒரு ஈர்ப்பு. அதனால்தானோ என்னவோ தொண்டைமானே அவனுக்கு பட்டயம் கொடுத்து நூறு குடியும் , அவர்களுக்கான புழங்கும்  இடமுமாக  அந்தக் காட்டாம்புதர்ப் பகுதியை அவனுக்கு பட்டயத்தில்  எழுதிக் கொடுத்தார்கள்!

பாட்டன் முத்தாயியோடு சேர்ந்து அங்கு வாழத் தொடங்குகிறான், அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள்தான் இன்றும் 'முத்தன் பள்ளம் ' என்ற வாழக்கூடாத மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..?!

அண்டனூர் சுராவினுடைய ' முத்தன் பள்ளம் ' எனும் புதினத்தின் கரு இதுதான்.. இந்தக் கருவிலிருந்துதான் ஒரு கிராமத்தின், அந்தக் கிராமத்தில் (?) வாழ்கின்ற முத்தரையர் என்கிற சாதியின் வழிவந்த மக்களின் அவலங்களை கண்ணீரில் வடித்திருக்கிறார் அண்டனூரார்.
முத்தன் பள்ளம் என்றோ வாழ்ந்து மடிந்தவர்களின் வரலாற்றுக் கதையல்ல... இந்த நொடியிலும் நம் கண்முன்னே  உயிர்த் துடிப்புடன்  வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு  உருக்குலைந்த கூட்டத்தின் அவலக்குரல் இது!

சாலைகளற்ற ஊரைக்கூட நாம் கேள்விப்பட்டிருப்போம்,  ஆனால் கூரைகள் கூட சரிவர இல்லாமல் பிஞ்சுபோன ப்ளக்ஸ் பேனர்களை குடிசையாக்கி காலைக்கடனுக்கு ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல், மின்சாரமற்று, பள்ளிக்கூடமற்று, எந்தப் போக்குவரத்துமற்று, பட்டா நிலமோ , வாக்காளர் அடையாள அட்டையோ , ரேசன் கடையோ எதுவுமே இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகில் ஒரு கிராமம்! பாம்பு கொத்தினால் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லவேண்டுமென்ற புரிதல்கூட இல்லாமல் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து மந்திரிக்கத் தூக்கிச் செல்கிற மக்கள் இன்னுமே அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
இத்தனை அவலங்களோடு டிஜிட்டல் இந்தியாவின் ஏதோவொரு மூலையில் உள்ள கிராமம்தான்
முத்தன் பள்ளம்.

ஒரு அரசகுடியில் பிறந்து , ஊர்க் காவலுக்கு வந்தவர்கள்.... தாங்கள் அரசிடம்  பெற்ற பட்டயத்தை காவல் காக்க முடியாமல் ஒரு சமீனிடம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒப்படைத்து ஏமாந்தவர்கள், இன்றுவரை தங்கள் பல்லாண்டு சேமிப்புகளை   பட்டாகேட்டு லஞ்சமாக கொடுத்து ஏமாத்தப்பட்டடுக் கொண்டிருப்பவர்கள்... குறைந்தபட்சம் பட்டயத்தை மட்டுமேனும் அவர்கள் பாதுகாத்திருந்தால் முத்தன் பள்ளம் தூரத்து கிராமங்களின் விளைநிலங்களாக வளைக்கப்பட்டிருக்காது, அந்த நூறு குடிகளும் ஓடியாட இடமும், உக்கார்ந்து கண்ணயர கொஞ்சம் நிலமுமாகவேனும் முத்தன் பள்ளம் எஞ்சியிருக்கக் கூடும்...

இந்தப் பாவப்பட்ட மக்கள் படுகுழிக்குள் தள்ளப்பட்ட கதையைப் பேசும் படைப்பாளி புத்தகத்தின் நுழைவிடத்திலேயே இவ்வாறு குறிப்பிடுகின்றார்...

" புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் முத்தரையர்கள். முத்தரையர் ஆட்சி முதல் தொண்டைமான் ஆட்சி வரைக்கும் அவர்களின் பங்களிப்பும், உயிர்த் தியாகமும் அளப்பெரியது. அத்தகையவர்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்னைப் பொறுத்தவரை ஒருவகை தாக்குதல்தான்...

முத்தன் பள்ளம் நாவலின் வழியே முத்தரையர்களின் ஆட்சியை, அவர்களை, அவர்களின் பெருமைகளை புகழ்பாடவோ அவர்களின் வழியே பிறரைத்   தாழ்த்தவோ செய்யவில்லை, அதற்கான அவசியமும் இல்லை.." என்கின்றார்.

நாவல் எங்கும் நாயக்கர், மராட்டியர் காலமுதலே  முத்தரையர்கள் தஞ்சையிலிருந்து விரட்டப்பட்டதும், முத்தரையர்களை கண்காணித்து ஒடுக்குவதன் மூலமே  தங்கள் ஆட்சியை தற்காத்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்து வடுகப் படைகள்  செயலாற்றியதையும் ( ப 132) , அம்பாள் தோப்பிற்கும் கல்லாக்கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்த காட்டினுள் ஒளிந்திருந்த நாயக்கர்களை இனங்கண்டு , தொண்டைமான் சீமையிலிருந்து  விரட்டியடிக்க முத்தரையர்களின் வனாந்திர அறிவும், வலிவுமிகு தோளுமே சரியானதென்று தொண்டைமான்கள் கண்டுணர்ந்து முத்தரையரை பயன்படுத்திக் கொண்டமையும்...

முத்தரையர்கள் வலிவு குன்றியவுடன்  கள்ள நாட்டு வாரப்பூரும், கந்தர்வக்கோட்டையும் அந்தண நாடாக மாறி அசல் நாட்டோடு சட்டையிடத் தொடங்கியதும் வரலாற்றின் வழியில் நினைவூட்டலாக நாவலில் அமைந்துள்ளது. குலதெய்வ வழிபாட்டிலும், குறிபார்த்து கல்லடி கொடுப்பதிலும் முத்தரையர்களின்  ஊடே பாய்ந்து மரபின் வழி ஊற்றெடுக்கும் வேட்டுவக் குணாதிசயங்களையும் படம்பிடித்துள்ள நாவல்,
அறுத்துக் கட்ட மறுக்கும் அசல் நாட்டுக் கள்ளர் கதையையும், அம்பாள்தோப்பு கள்ளர் பஞ்சாயத்தின் கொடூரத் தனங்களையும்  வாசிப்பாளனுக்கு அதன் உண்மைத் தன்மையுடன் அறியத் தருகின்றது. முத்தரையர்களையும், கள்ளர்களையும் எதிர்நிலைப்படுத்தியே எழுதப்படும் நூற்றுக்கணக்காண வரலாற்று நூல் வரிசைகளிலிருந்து மாறுபட்டு முத்தன் பள்ளம் இருசாதி மக்களின் இணைவிற்கும் முடிச்சிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை...

புதுக்கோட்டை வரலாறு எழுதிய பல ஆய்வாளர்கள் முத்தரையரைப் பேசுமிடத்து ஆட்சியிழந்து அவர்கள் அடிமைப்பட்ட காலநிலையின்  கதைகளை மட்டுமே கோடிட்டுக் காட்டுவர் . முத்தரையர்கள் சமூகத்தின்  விளிம்பு நிலைக்கு  தள்ளப்பட்ட கதைகளின் ஊடாக முத்தரையர்களின் வறுமைப்பட்ட நிலைகளை தமக்கு வாய்ப்பாக்கி  புதுகையின் வரலாற்றுக்கு அவர்கள் ஆற்றி வந்த தியாகங்களை மறைத்தும்,  அவர்களின் கலைப்படைப்புகளை திரித்துமே கதை புனைந்து எழுதுவர். ஆனால் முத்தன் பள்ளம் குறிப்பிட்ட காலநிலையில்  முத்தரையர்களின் மீது  வலிந்து திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை வரலாற்றுக் கண் கொண்டு அணுகி , முத்தரையர்களை திட்டமிட்டு சிலர் வீழ்த்த நேர்ந்ததன் காரணங்களை கண்டுணருகிறது! அந்நியர்கள் இங்கே தமக்கான   குடியேற்றங்களை  ஏற்படுத்திக் கொள்ள  முனைந்தபோதெல்லாம் , தமது பழங்குடித்தனத்தின் மூர்க்க நிலையில் நின்று முத்தரையர்கள் அவர்களோடு மல்லுக்கட்டிய கதைகள்  இதுவரை பட்டயங்களில் மட்டுமே இருந்தது, தற்போது அண்டனூராரின் மைக் கசிவில் பக்கங்களில் அச்சேறி அவை தலைமுறைகளைத் தழுவத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவத் தொண்டமானின் காதல் திருமணம், புதுக்கோட்டை சமஸ்தான குடிகளிடம்  அது ஏற்படுத்திய தாக்கங்கள் , புதுகையின்  சிற்பி சேசையா சாஸ்திரி  என்று நூல் முழுக்க நூற்றாண்டுகளின் வரலாறு கோர்வையாக்கப்பட்டு , முகவரியற்ற  முத்தன் பள்ளத்து முத்தரையர் குடிசைக்குள் இறுதியில் வந்து நின்று மௌனிக்கிறது முத்தன் பள்ளம்!

நூலைப் படித்து முடிக்கும் எவருக்கும் முத்தன் பள்ளத்துக்கு ஓரெட்டு போய் பார்க்கணும் என்ற உந்துதல் மனதின்  உள்ளாறே எழுந்தாலும், என்னளவில்  இன்னும் எத்தனை முத்தன் பள்ளங்களுக்குள் முத்தரையர்கள் இந்த புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  உறைந்து கிடக்கிறார்களோ என்ற பயமும் சேர்ந்தே எழுகிறது. ஆயிரம் அண்டனூர் சுராக்கள் உருவானால்தான் அவர்களின் படைப்புகளின் வழியே முத்தன் பள்ளம் போன்ற முறுக்குக் கயிறுகளுக்குள்  மாட்டிக் கிடக்கும் மக்களை வெளிக்கொணர முடியும்.

தகவல் உதவி: துரை.இராஜகுமரன்

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்