மடிக்கேரி (முத்துராஜகேரி)

 


பாபமெல்லாம் போக்கும் பரமேஸ்வரன்:

----------------------------------------------------------------------------

மடிக்கேரி (முத்துராஜகேரி)
---------------------------------------------------

கர்நாடக மாநிலத்திலுள்ள  கொடகு மாவட்டத்தின் தலைநகர் மடிக்கேரி. இப்பகுதியை ஆண்ட முத்துராஜா மன்னர்களின்  நினைவாக இந்நகரம் முத்துராஜகேரி (முத்துராஜாவின் நகரம்) என்று அழைக்கப்பட்டு அந்தப் பெயரே நாளடைவில் மடிக்கேரி என்று ஆகியிருக்கிறது. மடிக்கேரியை ஆங்கிலேயர் மெர்க்காரா என்று அழைத்தனர்.

முத்துராஜா மன்னர்கள் வம்ச வழியைச் சேர்ந்த லிங்கராஜேந்திர மன்னர் ஒருமுறை அனாவசியமாகக் கோபம் கொண்டு பக்திமானும் ஒழுக்கத்தில் சிறந்தவருமான ஓர் அந்தணரைக் கொன்று விடுகிறார்.

அந்த அந்தணர் பிரம்மராட்சசனாக மாறி மன்னருக்குத் தொந்தரவு கொடுத்தாராம். நிம்மதியிழந்த மன்னர் ஜோதிடர்களின் அறிவுரைப்படி காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்து ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன் பின்னரே மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியானதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

இவ்வாறு 1820ம் ஆண்டு மன்னர் பிரதிஷ்டை செய்த இந்த சிவாலயம் இஸ்லாமிய கட்டிடப்பாணியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ஆலயத்திற்கு நடுவே அமைந்துள்ள கருவறையின் மீது விமானத்திற்குப் பதில் மசூதியில் காணப்படும் ஒரு கோளமும் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு ஸ்தூபிகளும் உள்ளன.

இதனை இந்திய சராஸன் கட்டிடப்பாணி என்று கூறுகின்றனர். 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தினுள் செல்ல எட்டு படிகள் ஏறிக் கடக்க வேண்டும். ஆலயத்திற்கு முன்பாக  நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளமும், மண்டபத்திற்கு பக்தர்கள் சென்றுவர சிறிய பாலமும் உள்ளன.

கருவறையில் சிவபெருமான் ஸ்ரீஓம்காரேஷ்வரர் என்ற பெயரில் சிறிய சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கிறார். கருவறையின் முன்பாக அழகிய நந்தி விக்கிரகம். ஆலய வளாகத்தில் ஸ்ரீமஹாகணபதி, குமார சுப்பிரமணியர், ஸ்ரீநந்தீஸ்வரர் சகிதம் உமாமகேஸ்வரர் உற்சவர் ஆகியோர் உள்ளனர்.இவ்வாலயத்தில் தினந்தோறும் ருத்ராபிஷேகத்தோடு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்கு மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதோடு கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளன்று ஆலயத்திற்கு முன்புள்ள கல்யாணி தீர்த்தத்தில் நௌகோற்சவா என்ற தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அனைத்துப் பாபங்களையும் இந்த மகேஸ்வர தரிசனம் போக்கும் என்கிறார்கள்.  பெங்களூரிலிருந்து 271 கி.மீ. மைசூரிலிருந்து 117 கி.மீ. தொலைவில் மடிக்கேரி அமைந்துள்ளது. ஆலயம் காலை 6.30 முதல் மதியம் 12 மணி, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

நன்றி, குங்குமம் 28/02/2015...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்