சான்டில்யனின் மோகனசிலை நாவலில் முத்தரையர் பகுதி


22. அவர் சொன்ன கதை
------------------------------------------
கண்கள் சில விநாடிகள் பஞ்சடைந்தபோதிலும், கடைசி கடமையை நிறைவேற்றவேண்டிய காரணத்தால் உணர்ச்சிகளை மீட்டுக்கொண்டு மெள்ள மெள்ள தன் மனத்தில் புதைந்து கிடந்த ரகசியத்தை அவிழ்க்கலானார் மாரவேள். அவர் கண்களை அடுத்து சொற்கள் நிதானமாகவும் ஓரளவு திட மாகவும்கூட வெளிவந்தன.
''குழந்தைகளே! கேளுங்கள் பாக்கியமிழந்த ஒரு பரதேசியின் கதையை வளம்பெற்ற தமிழகத்தின் வீழ்ச்சியைப் போன்றது என் கதை. தமிழகம் முழுவதும் வீழ்ந்தது களப்பிரர் கொடுமையால். அவர்கள் அடுத்த தலைமுறையான முத்தரையரால் அழிந்தது சோழநாட்டு வாழ்வு. இத்தனைக்கும் முத்தரையர் வலிகுன்றி சிற்றரசர்களாகிவிட்ட காலம். அந்தக் காலத்தில் சிறப்பெய்தியிருந்தது சந்திரலேகா அல்லது செந்தலை எனும் ஊர்.

தஞ்சையைப்போல் அது பேரூராகவில்லை. இருப்பினும், தஞ்சையை இன்னும் ஆண்டு வரும் முத்தரையர் செந்தலையையே தங்கள் தலையூராகக் கொண்டனர். அந்த சந்திரலேகாவில் இப்பொழுதும் இருக்கின்றான் * இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையன். அவனுக்கு ஒரு மகனும் உண்டு. பெயர் மாறன் பரமேசுவரன். தனது தந்தையின் பெயரை இவனுக்குச் சூட்டினான் பெரும்பிடுகு முத்தரையன். இவன் பரம அயோக்கியன், காமுகன், ஈவிரக்கம் சிறிதும் அற்றவன்..."-

இந்த இடத்தில் மாரவேள் சிறிது கதையை நிறுத்திப் பெருமூச்சு விட்டார். அரசகுமாரி விரைந்து தனது முந்தானையை நனைத்து வந்து சிறிது நீரை அவர் வாயில் பிழிந்தாள். அதை இன்பமுடன் உட்கொண்ட மாரவேளின் முகத்தில் பெரும் சாந்தி உலவியது. மூச்சம் சிறிது சீராக வரத் தொடங்கியது.

மேலும் தொடர்ந்தார் கதையை மாரவேள்.

"கொலைகாரர்களும், மூர்க்கர்களுமான களப்பிரர் தமிழகத்தை ஆட்கொண்ட பிறகு தமிழ்மண்ணும் மொழியும் அவர்களைப் பெரிதும் மாற்றின. பண்பாடு அவர்கள் ரத்தத்திலும் நுழைந்தது. சிலர் தமிழ் மொழியின் சுவையால் நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் மாறினார்கள். கூற்றுவ நாயனாரும் களப்பிரர், திருமங்கையாழ்வாரும் களப்பிரர். தமிழின் இனிமை அத்தன்மையது. அதன் எளிமை, இனிமை... அது அமுதம்... யாரைத்தான் மாற்றாது?''

"இப்படி சிலர் ஆகியும் பலர் பரம்பரைக்குணம் போகாமல் மூர்க்கராகவே இருந்தனர். வலி குன்றி, நாடு குன்றி முத்தரையரான பின்பும் சிலரின் மூர்க்கத்தனம் போகவில்லை. செந்தலை முத்தரையரில் சிலர் கொடுமையின் இலக்கணமாக விளங்கினர். பெரும் பிடுகு முத்தரையன் மகனான மாறன் பரமேசுவரனை நினைத்தாலும் என் ரத்தம் கொதிக்கிறது.
இவனால் மூன்று குடும்பங்கள் அழிந்தன. இதயகுமாரா! உன் குடும்பம் ஒன்று, அரசகுமாரியின் குடும்பம் ஒன்று, என் குடும்பம் ஒன்று..."

- இங்கு சிறிது நிதானித்தானர் மாரவேள்.

"பல்லவர் பலம் ஓங்கி முத்தரையர் வலி குன்றிய காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் தலைதூக்கலாயின. விஜயாலயன் தந்தையான
'நந்திவர்ம சோழன் காலத்திலேயே உறையூர் தலையெடுத்தது. விஜயாலயன் காலத்தில் அதிகவலுவடைந்தது. அவன் வீரத்தைக் கண்டு வியந்த பல்லவர் விஜயாலயனை சிற்றரசனாகவும் தங்கள் தெற்குத் திக்கின் படைத்தலைவனாகவும் ஏற்றுக் கொண்டனர். இப்படிப் பகைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஜயாலயனைக் கண்ட பெரும்பிடுகு முத்தரையன் அவனை அழிக்கத் தன் மகனை ஏவினான். மகன் படையெடுத்து வரவில்லை. பழைய களப்பிரர் என்ற கள்வர் குணம் அவனிடம் தலையெடுத்திருந்தது.

விஜயாலயன் இல்லாத சமயத்தில் ஒரு இரவில் அவன் அரண்மனைக்குள் தனது வீரர்களுடன் திடீரென நுழைந்தான நுழைந்தான் மாறன் பரமேஸ்வரன். இராசமாதேவியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். அவன் வீரர்கள் பெண்களை அலங்கோலப்படுத் தினர். அழகே உருவமான அரசியைத் தூக்கிச் செல்ல முயன்றான். அவள் அவனை எச்சரித்தாள், அருகே வராதே என்று. பிறகு கத்தியைத் தனது இடையிலிருந்து எடுத்து மார்பில் புதைத்துக் கொண்டாள். அந்தக் கோரத்தைக் கண்டு வெளியே ஓடினான் முத்தரையன். அப்பொழுது நீ இளங்குழந்தை, வீறிட்டுத் தாயின் மார்புமீது ஏறிப் படுத்துக்கொண்டாய். இந்த நிலையில் உங்களைக் கண்டான் விஜயாலயன்'' என்ற
மாரவேள் அரசகுமாரியயைப் பார்த்தார் பரிதாபத்துடன்.

''பரமேசுவர முத்தரையன் வெளியே வீரர்களுடன் சென்றபோது சோழர் படைத்தலைவர் தமது இல்லத்திலிருந்து அவனை எதிர்க்க வந்தார் வாளுடன். அவர் வெட்டப்பட்டார். அவர் வீரர்கள் முத்தரையர் வாள்களுக்கு இரையாயினர். அவர்
விடுதியுள் புகுந்து பெண்களையும் கொன்றான் மாறன். அப்படி மடிந்தவர்களில் உன் தாயும் ஒருத்தி. அனாதையான உன்னை விஜயாலயன் எடுத்து வளர்த்தான், வீரனாக்கினான்" என்று கூறிய மாரவேள் இதயகுமாரனைப் பார்த்தார்.

பிறகு அவர் கண்களில் நீர் திரண்டது. ''படைத்தலைவன் இறந்ததைக் கேட்ட உபதலைவன் முத்தரையனை எதிர்க்க
வாளும் கையுமாக இல்லத்தின் வாயிலில் நின்றான். முத்தரையனை எதிர்த்தான். அவன் வாள் கரத்தில் கத்தியையும் பாய்ச்சினான். ஆனால் முத்தரையன் வீரர்கள் அவனை வளைத்துக் கொண்டனர். உள்ளிருந்த அவமகள் ஓடி வந்தாள். அவள் அழகு, மாறனைக் கவர்ந்தது.அவளைப் பார்த்துப் பெருநகை நகைத்த முத்தரையன், அவளைத் தூக்கினான். அவள் அலறினான், திமிறினாள். திமிறிய சமயத்தில் அவள் கழுத்திலிருந்த இரட்டைப் பதக்க ஆபரணம் அறுந்து வீழ்ந்தது. அதை அந்த உப தளபதி எடுத்துக் கொண்டான். மாறனோ உபதளபதியின் பெண்ணைத் தூக்கிக்கொண்டு புரவியில் ஓடிவிட்டான். ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பெண் திரும்பினாள் உறையூருக்கு. மானமிழந்து திரும்பினாள். அவள் வயிற்றில் மாறன் மகன் உருவெடுத்திருந்தான் கருவாக. மகனை ஈன்றதும் தற்கொலை செய்துகொண்டாள் உபதளபதியின் மகள். மகளை இழந்து மானமும் இழந்த உபதளபதி, சேர நாடு சென்றான். அங்கு ஓவியம் பயின்றான். பித்தனானான். பேரப் பிள்ளையை சேரனிடம் சமர்ப்பித்தான். அந்தப் பிள்ளையை சேரன் வீரனாக வளர்த்தான். கருவூர் படைத்தலைமையையும் கொடுத்தான் அவன்தான்....'' என்ற அவர் சொற்கள் தடுமாறின.

"இளைய வேள்'' என்று முடித்தான் இதயகுமாரன்.

"ஆம். அவன் வீரனாகவும் வளர்ந்தான்,களப்பிரர் ரத்தம், முத்தரையர் ரத்தம் அவன் உடலில் ஒடுகிறது'' என்ற மாரவேள். “இதயகுமாரா! என் பெண்ணின் கழுத்திலிருந்து விழுந்த மாலையிலிருந்த இரு பதக்கங்களில் ஒன்றை நான் வைத்துக் கொண்டேன். இன்னொன்றை சேர மன்னனிடம் கொடுத்தேன். எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் உனக்குத் தெரியும்" என்று கூறினார்.

இப்படிப் பேசியதால் அவர் தலை துவண்டது சில விநாடிகளில். மீண்டும் முந்தானை நீரைப் பிழிந்தாள் அரசகுமாரி, மாரவேளின் வாயில். மெள்ளக் கண்விழித்த மாரவேள் புன்முறுவல் கொண்டார். ''இதயகுமாரா! அரசகுமாரி! நான் சீக்கிரம் என் மனைவியும் மகளும் இருக்குமிடம் போகப் போகிறேன்'' என்றார் மெதுவாக. அவர் கண்களில் மீண்டும் அந்த பழைய புத்தொளி பிறந்தது.

இதயகுமாரன் இதயத்தில் கோபாக்கினி கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை அவன் அடக்கிக்கொண்டு கேட்டான். ''மாரவேள்! சோழர் தலைநகரில் ஒருவன் வீரர்களுடன் தோன்றி இத்தனை அக்கிரமங்களைச் செய்ய எப்படி முடிந்தது? சோழர் படை என்ன செய்துகொண்டிருந்தது..?? என்று வினவினான்...

''படையா!'' என்ற மாரவேள் புன்னகை கொண்டார் மரணத் தறுவாயிலும். "பதினைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட கதையைச் சொன்னேன் உனக்கு. அப்பொழுதுதான் விஜயாலயன் சொந்தப் படையை உருவாக்கிக் கொண்டிருந்தான். அது தவிர களப்பிரர் போர் முறையில் வருவதில்லை. திடீரெனத் தோன்றுவார்கள், தாக்குவார்கள், பறந்து விடுவார்கள். ஊருக்குள் எப்பொழுது வருவார்கள், எப்பொழுது தாக்குவார்கள்
என்று சொல்ல முடியாது. தவிர, அவர்களைச் சமாளிக்கும் படை பலமிருந்தால் முத்தரையரை என்றோ அழித்திருப்பான் விஜயாலயன்.

ஆனால் அப்பொழுதுதான் படை திரட்டிக்
கொண்டிருந்தான். மாறன் வந்த சமயம் உறையூர் மிகப் பலவீனமாயிருந்த காலம். களப்பிரர்,முத்தரையர் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் மக்களும் காவலரும் நடுங்கிய காலம். அந்தக் காலத்தை அழிக்க, வீரத்தை ஊட்ட, மக்களை வீரர்களாக்கத்தான் விஜயாலயன் தோன்றியிருக்கிறான். இன்று நிலை வேறு. சேரனும் விஜயாலயனைத் தொட அஞ்சுகிறான். வெகுசீக்கிரம் முத்தரையர் ஆட்சி செந்தலையில் மறைந்துவிடும்" என்றார் மாரவேள்.

அதிகமாகப் பேசியதால் அவர் மூச்சு சிறிது பலமாக வரத்துவங்கியது. அந்த மூச்சைச் சமாளித்துக்கொண்டு சொன்னார், 'செந்தலை முத்தரையர் தலைத்தலம், உன் தந்தைக்கு உரியது. சோழமன்னர்களால் முன்பு உங்கள் வம்சம் செய்த சேவைக்காக மான்யமாக விடப்பட்டது. அங்கு இன்று உறைவது உன் பெற்றோரை அழித்தவன்'' என்று.

சமாளித்துக்கொண்டு, ''இதயகுமாரா! விஜயாலயனைப் பார்க்க நேரமில்லை. அவனிடம் சொல், கடைசிவரை மாரவேள் அவனுக்கு சேவை செய்தே மாண்டான் என்று" எனக் கூறினார். அப்படிச் சொல்லி கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார்.

அவர் கண்களில் ஆகாயம் தெரியவில்லை. விஜயாலயன் முகமே தெரிந்தது. அந்த முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. "விஜயாலயா நீயா!" என்று முணுமுணுத்தார் மாரவேள்.

விஜயாலயன் பதிலுக்குத் தலையை அசைத்தான். "விஜயாலயா!" இன்னொரு முறை முணுமுணுத்தார் மாரவேள்.

விஜயாலயன் அவர் தலைமாட்டில் மண்டியிட்டு உட்கார்ந்தான். முகத்தை அவர் முகத்தை நோக்கித் தாழ்த்தவும்
செய்தான். மாரவேளின் கண்கள் பஞ்சடைந்தன. அந்த நிலையிலும் கேட்டார் “இளைய வேள்...'' என்று.

"தப்பவிட்டுவிட்டேன்'' என்றான் விஜயாலயன்.

''சோழதேவா...'' சுவாசம் வாங்கியது மாரவேளுக்கு. அவர் குரலில் பெருமதிப்பு இருந்தது.

''மாரவேள்''- பெரும் கருணை ஒலித்தது விஜயாலயன் குரலில்.

''உன் கருணை எல்லையற்றது. அதற்கு வணங்குகிறேன்'' என்றார் மாரவள்.

''கருணை ஏதுமில்லை இதில் கடமையிருக்கிறது. என் பக்கம் நின்ற மகானுக்கு, ஓவியருக்கு என் கடமை" என்றான் விஜயாலயன்.

''என் பேரனை...'' என்ற மாரவேள் பரிதாபத்துடன் பார்த்தார்

''அஞ்சவேண்டாம். ஏதும் செய்யமாட்டேன்" என்றான் விஜயாலயன் இதைக் கேட்டதும் சாந்தி நிலவியது மாரவேளின் முகத்தில். அவர் கண்கள் தாமாகவே மூடின. தலை மெள்ள சாய்ந்தது ஒருபுறம். கண்ணழகியின் கண்ணீர் அவர் முகத்தில் விழுந்தன பொலபொலவென்று.

விஜயாலயன் ஜாடைகாட்ட கண்ணழகியின் கைகளைப் பிடித்து அப்புறம் அழைத்துச் சென்றான் இதயகுமாரன். நான்கு அடிகள் சென்றதும் திரும்பி நோக்கினான். அப்பொழுது விஜயாலயன் எழுந்து நின்றுகொண்டிருந்தான். கையில் வாளுடன் வாளைத் தாழ்த்தி, தலையையும் தாழ்த்தி வணங்கினான் மாரவேளை. பிறகு திரும்பி மெள்ள அரண்மனையை நோக்கி நடந்தான். அவன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் வேதனையிருந்ததை இதயகுமாரனும் கண்டான், சோழன் செல்வியும் கண்டாள். அவன் சென்ற மறுவிநாடி மரக்கூட்டத்தின் மறைவிலிருந்து தாணு ரவிவும் சங்கரநாராயணனும் வெளியே வந்தார்கள். இருவரும் மாரவேளின் சடலத்தை உற்று நோக்கினார்கள்.

''கிரகங்கள் பொய் சொல்வதில்லை'' என்றார் சங்கரநாராயணன்.

சேரமன்னன் பேசவில்லை. தலையை மட்டும் வணங்கினான் மாரவேள் சடலத்தை நோக்கி, ''உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்று தன் வாளில் கைவைத்துச் சத்தியம் செய்தான்.பிறகு கச்சையிலிருந்து இரு பதக்கங்களை எடுத்து அவர் மார்புமீது வைத்தான்.

((குறிப்பு: இந்த நூலாசிரியர் சான்டில்யனுக்கு நம்மீது என்ன கோவமோ தெரியவில்லை தாறுமாறாக எழுதியிருக்கிறார், என்றாலும் நம்முடைய முன்னோர்களின் வீரதீர பராக்கிரமங்களை இவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை, அதற்காகவே இப்பதிவு..))

தொடர்வோம்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER