மார்பிடுகு பெருங்கிணறு:-
திருவெள்ளறை :
மார்பிடுகு பெருங்கிணறு:
திருச்சியில் இருந்து 20 கி.மி. தொலைவில், துறையூர் செல்லும் வழித்தடத்தில், மண்ணச்சநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளறை. இங்கு அருள்மிகு புண்டரீகாஷ பெருமாள் திருக்கோவில் உள்ளது. தாயார் பங்கய செல்வி என்னும் திருநாமம் கொண்டு அருள்கிறார். இத்திருத்தலம் திருவரங்கத்திற்கும் முற்பட்டதாதலால், இது 'ஆதி திருவரங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. வெண்பாறைகளால் அமைந்த கோவில் எனப் பொருள்படும் வகையில் 'திருவெள்ளறை' என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் அழகிய கட்டிடக்கலை அமைப்பினைக் கொண்டது இத்திருத்தலம். உயரமான மதிலையும், குடைவரை அமைப்புகளையும், பல்வேறு அழகிய சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது திருவெள்ளறை திருத்தலம்.
இத்திருத்தலத்தில் ஒரு முக்கியமான கல்வெட்டு உள்ளது. பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு , கரிகால சோழர் பதினாறு நூறாயிரம் பொன்னை ஒரு பதினாறு கால் மண்டபத்தில் வைத்து, அம்மண்டபத்தோடு பரிசளித்தார். பிற்காலத்தில் சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, சோழ தேசத்தையே சூறையாடி, தரைமட்டமாக்கி தஞ்சையில் கழுதையை வைத்து உழுது, விஷ கடுகு விதைத்த மாறவர்ம சுந்தர பாண்டியன், உருத்திரங்கண்ணனாருக்கு கரிகால் பெருவளத்தான் கொடுத்த அந்த பதினாறு கால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் தமிழுக்கு தலை வணங்கிய செய்தி அக்கல்வெட்டில் உள்ளது.
அந்த கல்வெட்டு தகவல் பின்வருமாறு :
வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன் செல் பட்டினப்பாலைக்கன்று நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.
தமிழுக்கு பாண்டிய மன்னன் செலுத்திய மரியாதையை தெரிவிக்கும் இக்கல்வெட்டானது போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
மேலும் அக்கால கலைகளில் ஒன்றான 'குடக்கூத்து' ஆடும் சிற்பம் இருக்கிறது.
இத்திருத்தலத்திற்கு அருகிலேயே ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்றும் உள்ளது. நான்கு துறைகளை உடைய இக்கிணற்றில் ஒரு துறையில் இருந்து பார்த்தால் மற்ற மூன்று துறைகளும் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது. நிறைய அழகிய தெய்வங்களின் சிற்ப வேலைப்பாடுகளும் இக்கிணற்றில் உள்ளன.
இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் பெயர் 'மாற்பிடுகு பெருங்கிணறு' என அக்கிணற்றின் மேலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கி.பி. 800-ம் ஆண்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவர், பல்லவ அரசன் தந்திவர்மனின் பெயர் விளங்குமாறு, தந்திவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான 'மாற்பிடுகு' பெயரில் இக்கிணற்றினை வெட்டியுள்ள செய்தி அக்கல்வெட்டில் உள்ளது.
அக்கல்வெட்டு செய்தி பின்வருமாறு :
ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்ரத்தின்வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன்தந்திவர்மற்கு யாண்டு நான்காவதுஎடுத்துக்கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான்அலம்பாக்க விஷையநல்லுளான் தம்பி கம்பன்அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப்பெருங்கிணறு இதன் பியர்மார்ப்பிடுங்குப்பெருங்கிணறென்பது இதுரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்றுவரோம்
ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் அதே கிணற்றின் பக்கச் சுவரில் ஒரு செய்யுளையும் கல்வெட்டுப் பாடலாக பொறித்துள்ளார்.
அப்பாடல் பின்வருமாறு :
ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன் உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்
இந்த செய்யுளின் பொருளாவது :
நேற்று ஒருவனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை. இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் ஆசைகொண்டு நிற்காதீர்கள். அன்றொரு நாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்.
இந்த கல்வெட்டுகள் மட்டுமின்றி இக்கிணற்றின் ஒரு துறையில் உள்ள படிக்கட்டுகளில் தமிழ் எண்களை படிக்கு ஒன்றாக கல்வெட்டு போல் வெட்டியுள்ளனர்.
Comments
Post a Comment