முத்தரையர் கல்வெட்டு 1







மற்றும் ஒரு 
முத்தரையர் கலைச்சின்னம்...
#புதுக்கோட்டைகுடைவரைகள்

புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும், முறையான பாதையில்லை. மழைகாலத்தில் செல்வது சிரமம்தான். காரையூர் விளக்கு வழியாகவும் இவ்வூரினை அடையலாம்.

கோவிலின் அமைப்பு:
இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது. மேலும் குடைவரையின் பக்கவாட்டில் சுமார் 3 அடி அகலமும், 2 அடி உயரம் உடைய விநாயகர் சிலையும் அகழப்பட்டுள்ளது. இவரை பூமிப்பிள்ளையார் என அழைக்கின்றனர். 
பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரையிக்கு வெளிநீட்சியாய் உள்ளது.அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய்  சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

குடைவரை அமைப்பு:
லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்தது இம்மாவட்டத்திற்கு உள்ள சிறப்பு. பெரும்பாலும் பாண்டியர் குடைவரைகள் அனைத்துமே தாய்ப்பாறை லிங்கங்களே.
இக்கோவிலின் கருவறை வாயிலின் இடப்புறம் நீர் வெளியேறும் வண்ணம் வெட்டப்பட்டுள்ளது! 

கல்வெட்டுகள் :
இக்கோவிலில் மொத்தம் 39 கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் காலத்தால் முற்பட்டது ஸ்ரீபூதி களரி எனும் முத்தரையரின் கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டில் 
"ஸ்ரீபூதி களரி ஆயின அமரூன்றி முத்தரையன் தன்(ம) ம் "
என உள்ளது. எழுத்தமைதி மற்றும் குடைவரையின் அமைப்பை வைத்து பார்க்கையில் இதனை 8 ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. இம்முத்தரையன் மன்னனா?  அல்லது அதிகாரியா?  என தெரியவில்லை. செந்தலை கல்வெட்டில் வரும் சுவரன் மாறனுக்கும், மலையடிப்பட்டி குடைவரை கண்ட விடேல்விடுகு முத்தரையனுக்கும் இடைப்பட்ட முத்தரையனாக இவரைக்கொள்ளலாம். அவ்வகையில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கடுத்து கோப்பரகேசரி ஒருவரின் கல்வெட்டும், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன்,  முதலாம் குலோத்துங்கன், "எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன்", சடையவர்மன் சுந்தரபாண்டியன், விஜயநகர கல்வெட்டுகள் காணப்படுகிறது! 
சோழராட்சியில் இவ்வூர் கேரளாந்தக வளநாட்டு, கூடலூர் நாட்டின் கீழ் இணைக்கப்பட்டும், பின்னர் கடலடையாது இலங்கைகொண்ட சோழவளநாட்டின் கீழும், பாண்டியராட்சியில் பொன்னமவராவதி வடபற்றிலும் இருந்துள்ளது. அருகேயுள்ள ஊரின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது!  இன்றும் அப்பெயரிலேயே அவ்வூர்கள் வழங்கிவருகிறது சிறப்பு.
(சாத்தனூர், தேனூர், காரையூர், அரசூர், செவ்வலூர், 
திருப்பத்தூர்)
நந்தாவிளக்கு, படையல், வழிபாடு சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளே முழுக்க காணப்படுகிறது!  அப்பகுதியிலுள்ள ஊரார் பெயர்கள் வருகிறது, 
சோழர்காலத்தில் உவச்சரான கண்டன் சிவகண்டனான அச்சகண்டபெருமாள் என்பவரின் வழிகாட்டலில் பஞ்சமகாசப்தம் வாசித்தமை கல்வெட்டுகூறுகிறது. நாயக்கர் காலத்தில் வரிகட்ட இயலாமையால் தன்நிலத்தை கோவில் காணியாக, இறையிலியாக விட்டதும் தெரிகிறது.
இம்மண்டபங்களை குடைவித்தது ஸ்ரீகோவிலுடையான் வாதுணிஊரன் துற்றினை என தெரியவருகிது.
தற்சமயம் தொல்லியல்துறை இக்கோவிலை சுற்றி வேலியெழுப்பி வருகிறது! இக்கோவில் பெரும்பாலும் அடைத்தே காணப்படும். கோவிலை காண எண்ணுவோர் வையாபுரி சென்று அவ்வூரில் பூவாலைக்குடி கோவில் செல்ல வேண்டும் என தெரிவித்து சாவியினை பெற்றுக்கொண்டு சென்றால் வீண் அலைச்சலை தவிர்க்கலாம்....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்