முத்தரையர் கல்வெட்டு 3

முத்தரையர் கல்வெட்டு:-

முத்தரசர் என்ற சொல்லினை முதன்முதலாக பெங்களூர், கோலார்,தலைக்காடு பகுதிகளில் ஆண்ட கங்கர்களின் செப்பேட்டிலே காண்கிறோம். இவர்கள் கொங்கனி கங்கர் என அழைக்கபடுகின்றனர்.

பொயு 550-600 ன் இடைப்பகுதியில் ஆண்ட துர்விநீதன் என்பவர், முதல்பகுதியை சமஸ்கிருதத்திலும் மறுபகுதியை பழைய கன்னடத்திலும் (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழிலேதான் இருக்கும்) கொண்ட இருமொழிச் செப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செப்பேட்டின்  சமஸ்கிருத பகுதியில் அவர் தன்னை "ஸ்ரீமத் கொங்கனி விருத்தராஜேன துர்விநீத நாமதேயன்" எனவும், அதே பகுதியை பழைய கன்னடத்தில் "ஸ்ரீ கொங்கனி முத்தரசரு" எனவும் குறிப்பிடுகிறார். பொயு 7ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்சிவமாறன் என்ற கங்க மன்னனும் இவ்வாறே முத்தரசர் என்று தன்னை அழைக்கிறார்.

சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வேளிர்களில் கங்கரும் உள்ளனர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் "நன்னன் ஏற்றை நறும்பூண் அந்தி துன்னரும் கடுந்திறள் கங்கர் கட்டி"(அகம்.44 ) என சிறப்பித்துக் குறிப்பிடபடுகின்றனர். இதில் குறிப்பிடப்படும் நன்னன் என்ற கங்கர், சோழன் ஒருவரோடு போரிட்டு தோற்றுள்ளார், சங்ககால கங்கர் கொங்கானத்தை ஆண்டு படிப்படியாக பெங்களூர், கோலார் வரை அரசை நிறுவினர். இந்த தரவுகளை வைத்து கங்கரே முத்தரையர்  எனக் கருதுகிறோம்.

முத்தரையர் வம்சாவளியினராக,

1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்

2.அவர் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்

3.அவர் மகன் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன்

என மூன்று தலைமுறை முத்தரைய மன்னர்களைச் செந்தலை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முத்தரையர்களின் அரசானது பல்லவர் காலத்தில் துவங்கி பின் பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆதரவில் வளர்ந்து பிற்காலசோழ பேரரசின் தலையெடுப்பில்  முடிவுற்றது. இவர்களின் அரசானது தஞ்சை மேற்குபகுதியிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையிலும், காவிரி வடகரையிலிருந்து புதுக்கோட்டையின் ஒரு பகுதி வரையிலும் நீண்டிருந்தது. முத்தரையரின் கல்வெட்டுகள் நேரடியாக செந்தலை, திருசென்னம்பூண்டி, திருசோற்றுத்துறை, மலையடிப்பட்டி நார்த்தாமலையிலும், பின்னர் அவர்கள் வேளிர்களுடன் கொண்ட திருமணமுறை குறித்து குடுமியான்மலை போன்ற சில இடங்களிலும், அதிகாரிகள், படைவீரர்கள் போன்ற நிலையை எய்தியமைக்கு சான்றாக சோழதேசத்தில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

அந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்களை வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்.

முதலில் எளிய கல்வெட்டொன்றோடு துவங்குவோம். படத்தில் உள்ள கல்வெட்டானது புதுக்கோட்டை மாவட்டம்  கிள்ளுக்கோட்டையில் இருந்து குன்றாண்டார் கோயில் செல்லும் வழியில் ஒரு கி.மீ தூரத்திலே, சாலையின் வலப்புறம் உள்ள களிகைக்கு எதிராக சாலையின் இடப்புறம் உள்ள சோளக்காட்டில் மறைந்துள்ளது.

இக்கல்வெட்டானது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனின் பட்டமான "கள்வர் கள்வன்", "சத்ருகேஸரி", "வாள்வரிவெங்கை" போன்ற பட்டத்தினை தாங்கியுள்ளது, ஆட்சியாண்டு காணப்படவில்லை.  இது தரும் செய்தியினை உறுதியாகக் கூறஇயலவில்லை.

தகவல்கள்:

1.Epigraphia indica vol 13(page 142)

2.Pudukottai state inscriptions

3.குடவாயில் பாலசுப்ரமணியம் (நந்திபுரம்,தஞ்சாவூர்)

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்