கண்ணப்பநாயனார் வரலாறு - Kannapa Nayanar Mutharaiyar History.
கண்ணப்பநாயனார் வரலாறு - Kannapa Nayanar Mutharaiyar History.
தமிழ் புராணம் போற்றும் சிவ கண்ணப்பர் :
"மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்,
நாவலர் புகழ்ந்து போற்ற நல் வளம் பெருகி நின்ற
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு."
'நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.'
"வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே."
பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்.திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.
முத்தரையர் குல கண்ணப்ப நாயனார் :
சைவ சமய ஆன்மீக வரலாற்றில் ஆதிகடவுள் ஈசன் சிவபெருமானுக்கு கண்கொடுத்த சிறப்புமிகு கடவுளாக கண்ணப்ப நாயனாரின் வரலாறும், ஆன்மீகத்தின் உச்சமிகு உன்னத சிவ நாயனாரின் வரலாறும் நம் அனைவருக்கும் தெரிந்ததே..!
பண்டைய காலத்தில் 2000 வருடத்திற்கு முன்பு வேட்டுவ மன்னர்கள் தலைசிறந்தவர்களாக விளங்கியதும், முதுதமிழரின் புகழ்பாடி நிலைத்த வரலாறுகளை சங்ககால புராணங்கள் எடுத்துரைக்கிறது.
அக்காலத்தில் பொதப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்ற வேட்டுவ மன்னர் தம்குல வீரமிக்க வேடர்களின் தலைவனாகவும், மக்களின் நலனுக்கான சிறந்த ஆட்சியுடன் காத்து நின்று, வேட்டையாடும் கலையிலும் சிறந்து விளங்கினார். மன்னர் நாகனுக்கும் அவரது மனைவி தத்தை எனும் வேட்டுவ அரசியாருக்கும் முருகப்பெருமானின் அருளாலே நீண்ட நாள் கழித்து ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். ராஜவேடர்கள் தலைவனின் மகனல்லவா? அலங்கார ரத்தினங்கள், பவள மாலைகள் மற்றும் மிருகங்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பற்கள், தந்தங்கள் முதலியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களை அவன் மார்பிலும் இடையிலும் அணிகலன்கலாகப் பூண்டு வளர்ந்தவன்.
திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் ஒரு நல்ல நாள் பார்த்து நாகன் அவனுக்கு வேட்டையாடும் கலையைக் கற்றுத்தந்து ஏழு நாள் விழா எடுத்து நாட்டுமக்கள் அனைவரும் கூடியிருக்கப் பிரமாதமாக அவன் மகனை வேட்டையாடுதலுக்கு அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் சிறப்பாக உணவளித்தான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பெற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது. நாகன் முதுமை காரணமாக தன் பதவியினை தன்மகனாகிய திண்ணனிடம் தந்து இளவரசனாக நாடாளும்படி பட்டம் சூட்டினார். இதனை கண்டு தேவராட்டியும் வந்து நலம் சிறக்க என வாழ்த்திச்சென்றாள்.
அரசனாக பதவியேற்று சிறப்பான நல்லாட்சி புரிந்து மக்கள் நலனுக்கான நற்சேவைகளை செய்து வந்தான் திண்ணன். பின்னர் ஒருநாள் அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் ராஜ வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடன் ஏனைய வேடர்களும், நாணன், காடன் என்பாரும் சென்றனர். அப்போது ஒரு அரியவகை விலங்கும், புள்ளி மானும் தப்பியோடியது. அவ்விரு விலங்குகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடுகையில் கொடிய விலங்கானது திசைமாறி மறைந்தது. காட்டுபகுதியை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று புள்ளிமான் மட்டும் திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்கே தலைவனான திண்ணன் வீராவேசத்தோடு முன் சென்று அதைக் கொன்று வீழ்த்தினான். அப்போது தான் மற்ற வேடர்களை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர்.
திண்ணன் அந்தப் புள்ளிமானை காடனிடம் கொடுத்து குலதெய்வத்திற்கு படைத்து பசியார சமைக்க சொன்னான். காட்டுக்கும் மலைக்கும் அந்தப்பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர். அவ்வாறு காட்டைக் கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் குடுமித்தேவர் (சிவன்-குடுமிநாதர்) ஆலயம் இருப்பதாகவும் அவரைத் தரிசிக்கலாமென்றும் நாணன் கூற, அதுவே சிவனின் பாற்செல்ல திண்ணன் எடுத்த முதல் அடியாகும்.
சிவபெருமானும் கண்ணப்ப நாயனாரும் :
முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலன், திண்ணனை சிவபெருமானின்பால் ஈர்க்க உதவின. அவரிடம் அவன் கொண்ட ஈடில்லா அன்பானது பெருவெள்ளமாகப் பொங்கி வளரத் தொடங்கியது. அவனுடைய தூய அன்பும் உடன் வந்த நாணனும் அவனை மலைமேல் அழைத்துச் சென்றன. உள்ளம் கவர் கள்வனாகிய சிவபெருமானை அவன் காண்பதற்கு முன் அந்தக் கள்வனே திண்ணனுடைய பிறப்பின் ஆதாரமும் அவனுடைய பிறப்புக்கும் வாழ்க்கைக்குமிடையேயான உறவாகவே உணர்ந்தார்.
திண்ணன் அங்கே ஒர் சிவலிங்கத்தைக் கண்டான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்களினால் பருக, அக்காட்சியின் அருமை அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. அவன் நினைவு தன் வசமில்லாமல் போயிற்று. அந்த அன்புப் பரவசத்தில் அவனை ஆழ்த்திய சிவனிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டான். அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது.
அதே சமயம் அவன் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் வழிந்தது. “எம்பெருமானே..! இந்த அடர்ந்த காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே உன்னைக் காக்க ஆளில்லாமல் இப்படித் தனிமையில் இருக்கிறாயே..? இது முறையன்று, இது முறையன்று.!” என்று கதறினான். அவனுடைய வில் கீழே விழுந்தது கூடத் தெரியாமல், நாணனிடம், யார் இப்படி எம்பெருமானுக்குப் பச்சிலையும் பூக்களுமாக உணவளித்திருப்பார்கள்? என்று வினவினான். அதற்கு நாணன், ஒரு முறை நான் இங்கே வேட்டையாட வந்தபோது ஓர் அந்தணர் அபிஷேகம் செய்து பூச்சொரிந்ததைக் கண்டேன். அவர் தான் இன்றும் செய்திருக்கவேண்டும்” என்றான். திண்ணனுக்குப் பொறுக்கவில்லை. “எம்பெருமான் இப்படித் தனியே இருப்பதா? அவருக்கு மாமிச உணவு, இறைச்சி உணவளிக்க ஆளில்லை! அவரை எப்படித் தனியே விட்டு வருவேன்? என் செய்வேன்? அவருக்குப் பசியாற நல் இறைச்சி கொண்டுவரவேண்டும் நான்.., என்று கூறினான்.
திண்ணன் சிவனுக்கு அமுது இறைச்சி கொணர முற்படுவான், ஆனால் அவர் தனிமையிலிருப்பது நினைவுக்கு வரவும் ஓடோடி வந்து அவருக்குத் துணையிருக்க எண்ணுவான். மீண்டும் இறைச்சி கொணர முற்படுவான், மீண்டும் ஓடோடி வந்து துணையிருப்பான். இப்படியே ஒரு பசு தன் இளம் கன்றை விட்டு அகலாதது போல் சிவனுக்கு முன் நின்று அவரிடமிருந்து தன் கண்களைப் பறித்தெடுக்க இயலாமல் தடுமாறினான். ஒரு கணம், “எம்பெருமானே ! உனக்கு "மிகச்சிறந்த இறைச்சி கொண்டுவரப் போகிறேன்” என்று உறுதிமொழி கூறுவான். மறுகணம், “உன்னைத் தனிமையில் விட்டு எங்ஙனம் செல்வேன்?” என்பான். பின், “ஆனால் நீ மிகுந்த பசியுடனிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லையே… என் செய்வேன்!” என்று புலம்புவான். கடைசியில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அனைத்தும் உடைய சிவபெருமானுக்கு வேண்டியதைக் கொண்டு வந்தே தீரவேண்டுமென்ற ஒரு முடிவோடு சென்றார் திண்ணனார்.
இவ்வுலகிலுள்ள எல்லாவற்றின் மீதும் உள்ள ஆசைகளனைத்தும் எரிந்துபோய் சிவனின் மீதுள்ள ஆசை மட்டுமே அவரிடமிருக்க, திண்ணனும் நாணனும் பொன்முகலி நதிக்கரையிலிருந்த ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர். அப்போது காடன் வந்து மூவரும் உணவருந்தலாமென்று அழைத்தான். நாணன் அவனிடம், திண்ணன் சிவனைத் தரிசித்தபின் தான் வேடர்களின் தலைவன் என்ற உண்மையை மறந்து (மெய் மறந்து) அந்த எண்ணத்தைத் துறந்து, தன்னை இப்போது சிவனின் அடிமையாகவே கருதுகிறானென்று சொன்னான். அதைக் கேட்டதும் காடன் அதிர்ச்சியடைந்தான்.
திண்ணனோ எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் இறைச்சி அமுதினை ஒரு கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் இலையிலான தொன்னை மற்றும் தன் வாயில் நிரப்பிக்கொண்டு, சிவனுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து தன் தலையிலும் கிரீட மேற்கோப்பையிலும் சூடியெடுத்துக்கொண்டு, சிவனுக்குப் பசிக்குமே என்றெண்ணி மலையுச்சிக்கு விரைந்து சென்றான்.
சுயம்புவாகத் தோன்றிய அந்தச் சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களை களைந்து வீசித் தான் கொண்டுவந்த தூய நதிநீர் தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில் சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பணிந்தபின் தான் சுவைத்து எடுத்து வந்த இறைச்சியை உணவாக அளித்தான். அப்படியும் அவனுக்குச் சமாதானமாகவில்லை. சிவனுக்கு மேலும் உணவளிக்க வேண்டுமென்று எண்ணினான்.
சூரியன் அஸ்தமனமாகிப் பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேட்டுவர் தலைவன் திண்ணன், வனவிலங்குகள் இரவில் வந்து சிவனைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் அருகிலேயே தன் வில்லும் அம்பும் உடனாகக் காவலிருந்தான். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவனை விழுந்து வணங்கிவிட்டு அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான்.
அவன் சென்றவுடன் சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியையும், பூஜைகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். “இது அந்தப் பொல்லாத வேடர்களின் வேலையகத்தானிருக்கும்” என்றெண்ணி பின்னர் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்து அவருடைய திருநாமங்களை மொழிந்து அந்த ஒப்பிலாப் பரம்பொருளைப் பல முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினார்.
நம் அன்பு வேடன் திண்ணன் வேட்டையாடி அவற்றின் சுவையுள்ள இறைச்சியை சிவனுக்கு அமுதான உணவையே அளிக்கவேண்டுமென்பதால் அவற்றின் மேல் தேன் வார்த்துக் கொடுத்தான் திண்ணன்.
தினமும் பூசைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பிறப்பிறப்பிலாப் பெருமானை மிகுந்த அன்புடன் வழிபடச் செல்வான். இரவு உறக்கத்தை மறந்து சிவனைக் காவல் காப்பதையே கருத்தாகக் கொள்வான்.
இப்படியாக நம் நாயனார் (திண்ணனார்) இறைவருக்கு இறைவனான சிவபெருமானைத் தனக்குத் தெரிந்த முறையில் வழிபட்டுக் கொண்டிருக்க, சிவகோச்சாரியார் இந்த இருவித வழிபாடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, சிவகோச்சாரியாரின் கனவில் சிவன் தோன்றி, “அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே"! என்னுடைய அன்பே அவனை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவனும் ஆன்மீக வழிபாடு தொண்டு செய்யும் குருகுலத்தை சார்ந்தவனே என்றும், அவன் செயல்கள் எனக்கு ஆனந்தமளிக்கின்றன என்றும் விளங்கினார். அவன் வாயிலிருந்து என் மேல் உமிழும் தண்ணீர் கங்கையைவிடப் புனிதமானது, அவன் தலையில் சூடிக்கொண்டுவந்து எனக்கு அளிக்கும் மலர்கள் பூவுலக தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களை விடப் புனிதமானவை. இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால் அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்! என்று கூறி மறைந்தார்.” திடுக்கென எழுந்தவர் அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈசுவரனின் சன்னதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார்.
அன்று ஏழாவது நாள்… திண்ணனார் என்றும் போல் அளவிலா அன்புடன் பூசைப் பொருட்களைக் கொண்டுவந்தார். பூசைக்குத் தாமதமாயிற்றே என்றெண்ணிய திண்ணனாருக்குப் போகிற வழியெல்லாம் அபசகுனங்கள் பல தோன்றின. சிவனுக்கு ஏதேனும் ஆயிற்றோ என்றஞ்சி விரைந்தோடினார். சிவகோச்சாரியாருக்குத் திண்ணனாரின் அன்பைக் காட்டுவதற்காக சிவன் தன் முக்கண்ணில் ஒன்றிலிருந்து இரத்தம் கசியச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார் அதிர்ச்சியடைந்து மிகவும் மனவேதனையுடன் சிவனருகே ஓடிச்சென்று குருதியை நிறுத்த முயன்றார், ஆனால் அது நிற்கும்படியாக இல்லை.
இச்செயலைச் செய்த குற்றவாளி யாராக இருக்குமென்று உக்கிரமான கோபத்துடன் எல்லாப் பக்கமும் தேடினார். மக்களையோ மிருகங்களையோ யாரையும் அருகே காணவில்லை. மனமுடைந்து சன்னதிக்குத் திரும்பி சிவனை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.
பிறவிப்பிணி முதலாய எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் மருந்தான சிவபெருமானின் பிணிதீர்க்க மருந்து தேடிக் காற்றைப்போல் மிகவிரைவாகச் சென்று காட்டிலிருந்த மூலிகைகளிலிருந்து மருந்தெடுத்துக் கொண்டுவந்தார். அப்படியும் சிவன் கண்ணினின்றும் வழியும் குருதியை நிறுத்தமுடியாத தன் இயலாமையை எண்ணி வாடி வருந்திய திண்ணனாருக்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க, நற்பலன் பாராது அம்பினால் சட்டென்று தன் கண்ணைத் தோண்டியெடுத்து சிவனின் கண் இருக்குமிடத்தில் வைத்தார். உடனே இரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து வான் வரை குதித்துத் தான் செய்த வீரச்செயலையெண்ணி மகிழ்ந்தார்.
ஆனால் சிவபெருமானோ அவருடைய பக்தி இதைக்காட்டிலும் எல்லையற்றது என்பதை நிரூபிக்க முடிவெடுத்தார். அவர் வலது கண்ணில் குருதி நின்றதும் இடது கண்ணினின்று குருதி வழியத் தொடங்கியது. ஒரு கணம் அதிர்ச்சியடைந்த நாயனார், “ஓ… இப்போது தான் இப்பிணிக்கு மருந்து என்னவென்று எனக்குத் தெரியுமே..! என்னிடம் இன்னொரு கண் உள்ளதல்லவா? அதுவே இதைத் தீர்த்து வைக்கும்!” என்று தெளிந்தார். முன்பு போலவே அம்பினால் கண்ணைத் தோண்டப் போனவர் அதையும் எடுத்துவிட்டால் கண்ணில்லாமல் (பார்வையிழந்த பின்) எப்படிச் சிவலிங்கத்தின் கண் எங்கேயிருக்கிறது என்று தேடி வைப்பது என்று குழம்பி அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் காலைத் தூக்கிச் சிவலிங்கத்தின் கண் இருக்குமிடத்தைக் குறித்துக் கொள்வதற்காகத் தன் கால் கட்டை விரலை வைத்துக் கொண்டார். பின் அவர் அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டியெடுக்க எத்தனித்தார்.
இதை விவரிக்க வார்த்தைகளேயில்லை. (திண்ணனார்) கண்ணப்ப நாயனாரும் பக்தியும் வெவ்வேறில்லை, இரண்டும் ஒன்றே என்று சொன்னாலும் போதாது. இதைக் கண்ட சிவபெருமானுக்கே பொறுக்கமுடியாமல் கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் “ஓம்… நில் கண்ணப்பா! நில் கண்ணப்பா!” என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் கண்ணப்பரின் அளவிலாப் பேரன்பையும் அதற்கு அவருக்குக் கிட்டிய அருளையும் கண்டார்.
இப்பெருமைகளின் காரணமாகவே சிவபெருமானின் திருவாயினாலே கண்ணப்பர் என்றழைக்கப்பட்டு 63 சிவ நாயனாரில் சிறப்புமிகு முக்கிய நாயனாராக முத்தரையர்குல கண்ணப்பர் போற்றப்படுகிறார்.
“ஓ! அன்பிலும் பக்தியிலும் ஒப்பற்றவனே! நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக! என்று சிவபெருமானே சொல்கிறார்..!!
நாயனார் பற்றிய குறிப்பு :
பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.
உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.
குலம் : வேட்டுவர் ராஜகுலம். (சூரிய-குரு குலம்).
பிறப்பு மாதம் : தை மாதம்.
நட்சத்திரம் : மிருக சீரிஷம்.
குரு பூசை : தை - மிருக சீருஷம்.
பிறப்பிடம் : உடுப்பூர்.
முக்தி தளம் : திருக்காளகத்தி.
மேலும், கண்ணப்பர் கடவுள் தரிசனம் காண திருவண்ணாமலை கிரிவல பாதையின் மேற்கு திசையில் அண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது கண்ணப்பர் கோவில். கிரிவலம செல்லும் பக்தர்கள் ஒற்றையடி பாதை வழியாக சென்றால் ஈசன் திருவடியில் கண்ணப்பர் சன்னதியை தரிசிக்கலாம்.
முத்தரையர் குலமரபில் கண்ணப்ப நாயனாரின் தொடர்பு:
1. திண்ணன் என்ற இயற்பெயருள்ள கண்ணப்ப நாயனார் எனும் இவர், வேட்டுவமன்னர் குலத்தின் வழிவந்த நாகன் என்பாரின் மகனான வரலாறு கூறுகிறது.
மூத்தகுடி முத்தரையர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நான்கு திணைகளின் பகுதிசார்ந்த தொழிலில் பூர்வகுடியாக அரசாட்சி, வேளாண்மை, ராஜ வேட்டுவர், ஆதி மீனவர் என வெவ்வேறு புகழ் வரலாற்றை கொண்டுள்ளனர்.
பண்டைய வரலாற்று கூற்றுபடி ஆதி தமிழராகவும் (மீனவர், வேட்டுவர்), வேளிர் வழிவந்த சூரியகுல மன்னர் இனமாக அன்றும் இன்றும் அறியப்படுவது முத்தரையர்கள் மட்டுமே.
2. அதைதொடர்ந்து கண்ணப்பரின் வம்சவழியாக வழிபாடும் முத்தரையர் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் முத்தரையரில் வலையர், கண்ணப்ப குல முத்திரி, கண்ணப்ப வலையர், மூப்பனார், அம்பலக்காரர், முத்துராசா, வேட்டுவ கவுண்டர்கள், வேட்டைக்கார நாயக்கர் எனவும், பிற மாநிலங்களில் காலகஸ்தி தொடங்கி அரையர், முடிராஜ், முத்திராஜலு, கோலி என தொன்மை மிகு வழிபாடு ஒப்புமை கண்ணப்பர் வழியினராக உண்டு.
3. எவருக்கும் இல்லாத மரபு பட்டமாக *கண்ணப்பகுல வலையர், கண்ணப்ப குல முத்தரையர், கண்ணப்ப நாயக்கர்* என்ற சிறப்பான அடையாளமும்- கண்ணப்ப கோத்திரம் எனும் சடங்குகளும் காலம்காலமாக முத்தரையர் மக்களுக்கு உண்டு.
4. தைமாத மிருகசீரிஷ தினத்தில் தன் குலதெய்வ முன்னோரான கண்ணப்ப நாயனாருக்கு காப்பு கட்டி, விரதம் இருந்து முளைப்பாரி ஏந்தி பொங்கல் வழிபாடும் கொண்டுள்ள முத்தரையர்களை கவனித்தாலே புரியும் கண்ணப்ப குலத்தின் பெருமைகள்.
5. மேலும் ஈசனுக்கு கண்ணப்பர் கண்ஈந்த தினமே சிவராத்திரி திருநாளாகும். அதனால் வருடா வருடம் சிவராத்தி திருநாளில் இம்மக்கள் வாழும் பகுதியில் மட்டுமே நடத்தப்படும் "தீ -கரகம் திருவிழா" சிவன் மற்றும் கண்ணப்ப நாயனாரின் வழிபாட்டின் மையமே என்பது உண்மை.
6. வருடந்தோரும் ஆடிமாத முதல் நாளன்று முத்தரையர் மக்களில் சிலர் ராஜகுல வேட்டை பாரம்பரியமும் கண்ணப்ப நாயனாரின் வழிபாட்டின் காரணமே ஆகும்.
7. இன்றளவும் *கண்ணப்பகுல வலையமார் என்ற அடையாளம் வேறு எவருக்கும் இல்லை* என்ற மரபு தொடர்பே நிலையான வரலாற்றுக்கு முதன்மை சான்று...
வாழ்க கண்ணப்ப குல முத்தரையர் பெருமைகள்..!
நன்றி: தனஞ்சயராயர்
அன்புடன்...
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥
Comments
Post a Comment