வலையர் வழங்கும் விருந்து
-------------------------------------------------
வலைஞர் வழங்கும் விருந்து;
பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலங்களை, முறையே கடந்து செல்லும் பெரும்பாணன், இறுதியாகக் கடக்க வேண்டிய நெய்தல் நில இயல்பையும், அந்நிலம் வாழ்
வலைஞர் வாழ்க்கை முறைகளையும் விளக்கத் தொடங்கினார். வலைஞர் குடில்கள், மெல்லிய மூங்கில்களை வரிசையாகப் பரப்பி, வஞ்சி அல்லது காஞ்சி மரத்தின் வெள்ளிய கொம்புகளை இடை இடையே இட்டுத், தாழை நார்கொண்டு கட்டி, தருப்பைப் புல் வேய்ந்து, பெய்யும் மழையால் நனையாவாறு சுவர்களைக் காத்தற் பொருட்டு, குறிய இறப்பை, நாற்புறங்களிலும் அமையக் கட்டப் பட்டிருக்கும்..
ஓடும் நீரில் எதிர்த்து ஏறும் மீன்களை வாரிக் கொட்டும் பறிகள், மனை முற்றத்தில் காணப்படும். உணவிற்குத் துணைக்கறியாகப் பயன்ப்டவல்ல அவரை, பீர்க்கு, புடலை, பாகல் போலும் காய்களைத் தரும் கொடிகளை வளர்த்து, அவை பெருகப் படர்ந்து பயன் தரற்
பொருட்டு, வளைந்து கவிர்த்த புன்னைக் கிளைகளை நட்டுப், போடப் பட்டிருக்கும் பந்தலும் ஆங்கு காணப்படும்...
மேலே பந்தல் நிழல் செய்ய, கீழே, மெத்தென்ற மணல் பரந்த அந்த இடம், இருந்து இளைப்பாறுதற்கு இனிதாக இருக்கும். கடல் மீன்களைக் காட்டிலும் குளத்து மீன்களே சுவை
மிகுந்தவை; பெருவிலை தருபவை; கட்டுமரம் ஏறிச்சென்று கடலோடு போராட வேண்டுமே என்ற கவலை தராமல் பெறக் கூடியவை என்பதால், குளத்து மீன் பிடிப்பதிலேயே
ஆர்வம் காட்டுவர். வலைஞர் குடியிருப்பு கடற்கரையைச் சார்ந்திருக்கும்.
கடல் நீர் உப்பு நிறைந்து உண்ணவும் மண்ணவும் பயன்படாது. அதனால், அப்பகு திவாழ் வலைஞர்கள், குடிப்பதற்கு நீர் பெற ஒரு குளம். குளிப்பதற்கு ஒரு குளம், உள் நாட்டு மீன் வகைகளை வளர்ப்பதற்குச் சில குளங்கள் எனத், தம் குடியிருப்பைச் சுற்றிக் குளங்களாகவே வெட்டி வைத்திருப்பர்.
குளத்தில் நீர் வற்றி விட்டால், குடிப்பதற்கு நீர் இல்லாமல் போகும் என்பது மட்டுமன்று; நீர் வற்றி விட்டால், மீன் அற்றுப் போக, அவர் பிழைப்பும் அற்றுப் போகும் அதனால், குளத்து நீரை வற்ற விடாது காப்பதில் விழிப்பாயிருப்பர். அதனால், அவர்கள் வெட்டியிருக்கும் குளங்கள், மழை தரும் மாரிக் காலம் குறைந்து, மழை தராக் கோடைக்காலம் நீண்டு போகும் ஆண்டிலும், உயர்த்திய கையோடு இறங்குவார் கையும் மறைய நீர் நிறைந்திருக்கு மளவு மிக
ஆழம் உடையதாகவே இருக்கும்.
மீன் வளர்க்கும் எல்லாக் குளங்களிலும், எல்லா வகை மீன்களையும் ஒரு சேரக் கலந்து வளர்க்க மாட்டார்கள். பெரு மீன்கள், சிறு மீன்களைத் தின்று அழித்து விடும் ஆதலாலும், சிறு மீன்களை வலை வீசி வாரிக் கொள்ள
வேண்டும்; பெரு மீன்களைத் தூண்டில் கொண்டு பிடிக்க வேண்டும் ஆதலாலும், கண்டை, கயல், இறால் போலும் சிறு மீன்களை ஒரு குளத்திலும், வரால், வாளை போலும்
பெரு மீன்களை வேறு குளத்திலுமாக வளர்த்திருப்பர்...
அவரை முதலாம் கொடி படர்ந்திருக்கும் பந்தலின்கீழ் மணற்பரப்பில் ஒன்றுகூடும் வலைஞர், ஊரெல்லாம் திரண்டுவிட்டனர், குடியிருப்பைச் சேர்ந்த ஆண், பெண், இளை
யோர், முதியோர் அனைவரும் வந்து விட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு குளக்கரை அடைவர். அம்பு முனைபோலும் வடிவுடைய தாய்ப், புரண்டு, புரண்டு திரியும் போது வான் மீன் போல் ஒளி காட்டும் கயல் மீன் கூட்டமும்.
வில் வடிவில் வரிசை அமைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய்த் திரியும் இறால் மீன்களும் களித்துக் திரிவது கண்டு, சிறிது நேரம், அக்காட்சியில் களிப்புற்று, பின்னர் உடன்
வரும் இளம் பிள்ளைகளோடும், குளத்துள் ஒரு சேர இறங்கி மீன்களை அளைந்து வாரிக்கொண்டு கரையேறி மகிழ்வர்.
மீன் பிடித்தற் பொருட்டு, கூட்டமாகக் குளத்துள்
இறங்கி நீரைக் கலக்கிச் சேறாக்கி விடுவர் என்றாலும், குடிநீர் குளத்தில், குடி நீர் கொள்வதல்லது, ஒருவரும் காலிடார். தவறி யாரேனும், அறியாது அதிலும் இறங்கி, நீரின்
தூய்மையைக் கெடுத்து விடுவாரோ எனும் அச்சத்தால், ஆண்டு முதிர்மையால், குளத்துள் இறங்கியோ, கடல்மேல் சென்றோ மீன் பிடிக்க மாட்டா முதியவர்கள், குடிநீர்க் குளக்கரையில் அமர்ந்து காவல் காத்திருப்பர். அவ்வாறு
காவல் காத்திருக்கும் நிலையிலும், காலமெல்லாம் தொழிலாற்றிய அவர் கைகள் வாளா இராது, மீன் பிடி வலைகளைப் பின்னிக் கெண்டிருக்கும்.
அத்தகைய வலைஞர் மனைகளில் தங்குவீரானால், ஆங்கு' கொழியல் போகக் குற்றி விட்டால் உரச் சத்து அற்றுவிடும் என்பதால் கொழியல் போகாது. வெறும் உமி மட்டுமே நீங்கக் குற்றிய அரிசியைக் கஞ்சி போகச் சோறாக்கும் நிலையிலும் உரச் சத்து அகன்று விடும் என்பதால் சோறாக வடித்துக் கொள்ளாமல், இளகிய வடிவில் துழாவி எடுத்து வாய் அகன்ற தட்டிலே வார்த்துச் சூடு போக ஆற்றிய களியையும், தாம் அரிதின் முயன்று எடுத்த புற்றினுள் பாம்பு குடிபுகக்கண்டு, வெளிப்பட்டு இறகு உதிர்ந்து வீழ்ந்து கிடக்கும் புற்றீசல் குவியலோ என ஐயுறுத்தக்க வடிவுடையதாகிய செந்நெல்லின் குறுமுளைகளால் ஆன அடையையும், காடி எவ்வளவு புளிப்பு ஏறுகிறதோ, அவ்வளவும் சுவைமிகும் என்பதால், வாய் அகன்ற உறுதியான பெரிய சாடியில் முழுமையாக இரண்டு பகல், இரண்டு இரவு கழியப் புளிக்க வைத்துப் பிறகு அடுப்பிலேற்றிக் கொதிக்க வைத்து, இறக்கி கையிட்டு அலைத்தும் பிழிந்தும், நெய்யரி கொண்டு வடித்தும். கொண்ட மணம் மிக்க கள்ளையும், நெருப்பிலே இட்டுச் சுட்டு எடுத்த மீனையும் அன்போடு வழங்குவார்கள். அத்தகைய உணவின்பால் உங்களுக்கு விருப்பம் இல்லாது போயினும், நெடும் வழி நடையாலும். பெரும் பசியாலும் உண்டாகும் தளர்ச்சி போகவாவது சிறிது உண்டுசெல்வீராக
என்றார்.
பாடல்:
“வேழம் நிரைத்து வெண்கோடு விரை இத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறி இறைக் குரம்பைப், பறியுடை முன்றில்,
கொடுங்கால் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணல் பந்தல்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிப்,
புலவுநுனைப் பகழியும் சிலையும் மானச்,
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்
மை இரும்குட்டத்து மகவொடு வழங்கிக்,
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயின் சேப்பின்
அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்,
பாம்புறை புற்றில் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்லடை அளை இத், தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்"
(263-282)
Comments
Post a Comment