வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
நாகரிகம் சென்றடையாத கிராமப்புறப் பகுதிகளையே நாட்டுப்புறம் என அழைக்கிறோம். நாட்டுப்புறம் என்ற சொல் சிற்றூர், சிற்றூரைச் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம். அங்கு வாழும் மக்களிடையே மலர்ந்து மணம் பரப்பும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள் போன்றவைகளை நாட்டுப்புற இலக்கியம் எனக் கூறலாம்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று முன்னோரால் போற்றப்படும் தமிழ் மொழியின் தோற்றம் போன்றே இவள் என்று பிறந்தனள் என்று அறியப்படாத இயல்பை பொறுத்த வரையில் நாட்டுப்புற மக்களோடு இரண்டறக் கலந்தவை என்று கூறலாம். அதாவது வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
கள ஆய்வால் சேகரிக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் முனைவர் சக்திவேல் அவர்கள் இவ்விலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துவார்.
1. நாட்டுப்புறப் பாடல்கள்,
2. கதைகள்,
3. கதைப்பாடல்கள்,
4. பழமொழிகள்,
5. விடுகதைகள்,
6. புராணம் முதலியன. வாய்மொழி இலக்கியங்களை ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என வகைப்படுத்துவர் இன்று வாய்மொழி இலக்கியங்களை ஏட்டில் எழுதும் பாங்கு தோன்றலாயின. இன்று எல்லா மக்களிடையேயும் வழங்கும் தாலாட்டு, ஒப்பாரி, தொழில் சம்பந்தமான பாடல்கள் அனைத்தும் இலக்கியங்களாக வடிவம் பெற்றுள்ளன. அதனைப் பல ஆய்வாளர்களும் ஆய்வு செய்துள்ளனர் - செய்து வருகின்றனர்.
வலையர் மக்கள்:-
வலையினைப் பயன்படுத்தி, வேட்டையாடிய மக்களுக்கு வலையர் என்று பெயர் ஏற்பட்டது. ''வல்லயம்'' என்னும் போர்க்கருவியை வலையர் சமுதாயத்து மக்கள் பயன்படுத்தியதால் இவர்களுக்கு ''வல்லயர்'' என்று பெயர் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இச்சொல் மருவி ''வலையர்'' என மாறிற்று என்று ''வலையர்'' சமுதாயத்தினர் கூறுகின்றனர். இம்மக்கள் மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற வலையர் மக்களிடம் வாய்மொழியாக வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களில் சிலவற்றை மட்டும் காண்போம்.
தாலாட்டுப் பாடல்கள்:-
ஆழங்காண முடியாத அன்புக் கடலான ஒப்பிட்டுக் கூற இயலாத உயர்ந்த கருணையான தாயின் வெளிப்பாடே தாலாட்டு எனலாம். தாலாட்டிக் குழந்தையைத் தூங்க வைக்கும் இப்பாடல்கள் தாயின் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. குழந்தை எப்படியெல்லாம் வளர்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்தையின் வீரத்தை, பாட்டனின் பரம்பரைச் சிறப்பை, மாமனின் சீர் வரிசையை, தாய் வீட்டுச் சீதனப் பட்டியலை, கடவுள் குழந்தையைக் காக்க வேண்டும் என்ற வேண்டுதலை, குழந்தையின் சிறப்பை, குழந்தைக்குரிய கருவிகள் பற்றிய சிறப்பை இவை போன்ற தாயின் பல்வேறு எண்ணங்களின் வெளிப்பாடாக தாலாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன. இத்தகைய தன்மைகள் கொண்டவையாகத் தாலாட்டு பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றிற்குச் சில உதாரணங்களாக வலையர் இன மக்கள் பாடல்களைக் காணலாம்.
ஆரிராரிராரோ கண்ணே ஆரிராரிராரோ
நீயே ஒறங்கம்மா ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ நித்திரையில் சுகம் பெற
பச்சை மரம் வெட்டி
பால்வடிய தொட்டி கட்டி
தொட்டி கட்டி தோராட்டு தன்னே
துரைமகனை போட்டாட்டி
வைய நெறி வாரா என்கண்ணே
வலனுமென துள்ள வாரா
துள்ளி வந்து மேனுக்கெல்லாம் என்ஐயா நீ
தூண்டி வலை போட்டாளே (கள ஆய்வு)
இப்பாடல் குழந்தையின் பெருமையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.
இஞ்சிப் பொதி ஏத்தி ஒங்க மாமமாரு
இளநேரம் வண்டி போட்டு
இஞ்சிப் பொடி மணக்க ஒங்க மாமமாரு
இந்திரரும் போகும் பாதை
மஞ்சப் பொதி ஏத்தி ஒங்க மாமமாரு
சாயங்காலம் வண்டி கட்டி
மஞ்சப்பொடி மணக்க ஒங்க மாமமாரு
மந்திரரும் போதும் பாதை (கள ஆய்வு)
இப்பாடல் தாய்மாமன் பெருமையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.
கடல்ராசு பவளமால
கண்ணிராசு வேப்பமால
பச்ச மரம் வெட்டி
பால் வடிய தொட்டிகட்டி
தொட்டிகட்டி எங்க ஐயா
துரைமகனை போட்டாட்டி
தெக்க நிலம் வாங்கி
தென்னம் பதியலிட்டு
தென்னங் கன்றைக் கொண்டு வீசாதிங்க
செல்லமகன் கண்ணசற
வடக்க நிலம் வாங்கி
வாள பதியலிட்டு
வாளையைக் கொண்டு வீசாதிங்க
வண்ணமகன் கண்ணசற (கள ஆய்வு)
இப்பால் தம்முடைய செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இஞ்சி அரைக்காணி
எலுமிச்ச முக்காணி
இஞ்சிக்கி பாஞ்ச தண்ணி
எலுமிச்சைக்கு பாயலியே
மஞ்சள் அரைக்காணி
மருள் போட்ட முக்காணி
மஞ்சளுக்கு பாஞ்ச தண்ணி கண்ணே
மருளுக்கு பாயலியே
ஆரிராரிராரோ கண்ணே
ஆரிராரிராரோ (கள ஆய்வு)
இப்பாடல் வயலில் தண்ர் இல்லாமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆரிராரோ கண்ணே ராராரோ
நாகமலைச்சாமி ஆரிராரோ ராராரோ
கண்ணே ஒறங்கு நாகமலைச்
சன்னதியிலே இடிமுழங்க
நாகமலைச் சாமி வர்ற வருவாரு
மல்லிகைப்பூ பூப்போல நாகமலை
மல்லி அளகு பூப்போல நாகமலை
மல்லி அளகு மாதந்த மணியடிக்கு நாகமலைச்சாமி
ஆடித்தவசுக்கு அலங்காரம்
ஆரிராரோ கண்ணே ராராரோ (கள ஆய்வு)
இப்பாடல் வலையர் மக்கள் தாங்கள் வணங்குகின்ற தெய்வத்தின் சிறப்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது.
கும்மிப்பாடல்கள்:-
நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் ஒன்று கூடி மகிழும் இயல்புள்ளவர்கள். அவ்வாறு ஒன்று கூடி மகிழும் விளையாட்டாக அமைவதே கும்மியடித்தல். திருவிழாக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் ஒய்வாக இருக்கும் பொழுதும் கும்மியடித்துப் பாடல்கள் பாடி மகிழ்வர். இவ்வாறு கும்மி அடித்துப் பாடும் பாடல்கள் கும்மிப் பாடல்களாகும். வலையர் இனத்தில் கோவில்களில் விழாக்கள் நடைபெறும் அன்று பெண்கள் கும்மியடித்துப் பாடுவது வழக்கம். இப்பாடல்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்தின் சிறப்பினையும், தங்கள் ஊரின் சிறப்பினையும் கூறுவதாக அமைந்துள்ளன. அவற்றுள் சில உதாரணங்களைக் காண்போம்.
மந்தையம்மாள் கோவிலிலே
மானு விளையாட
அம்மா நாங்க விளையாட
அம்மா சனங்கள் வந்து கூட
மானெடுத்து வில மதிக்கும்
மந்தையம்மாள் தாயே
தானான தானான
தானான தானான (கள ஆய்வு)
இப்பாடல் மந்தையம்மாள் தெய்வத்தினை வாழ்த்திப் பாடுவதாக அமைந்துள்ளது.
நாகமல கோயிலே நாகம் விளையாட
அம்மா நாகம் விளையாட
அம்மா நாங்க விளையாட
அம்மா சனங்கள் வந்து கூட
நாக ரட்டினம் வில மதிக்கும்
நாகமலச் சாமி
தானான தானான
தானான தானான (கள ஆய்வு)
இப்பாடல் வலையர் இன மக்களின் குல தெய்வம் நாகமலைச் சாமியை வாழ்த்துவதாக அமைந்துள்ளது
பாதி தேரில் மீனாட்சி
பக்கத்து தேரில சொக்கரு
தன்னான னானான தன்னான னானான
உங்க தட்டு வலையல அவ
முன்னூறு கோட்டைக்கு நெல்லளத்து
சனங்க பார்த்துட்டு
கையலற நோறாங்க
ஆத்துக்கு கீளபுறம் மீனாட்சி மதுரமீனா
அண்ணனக் கண்டு சிணங்குறாளம்
தன்னான னானான தன்னான னானான
தன்னான னானான தன்னான னானான
கொடுத்த சீரெல்லாம் பத்தாதுன்னு அவ
இழுத்து முக்காடு போடுறாளாம்
தன்னான னானான தன்னான னானான
தன்னான னானான தன்னான னானான
இப்பாடல் மதுரை சொக்க நாதனையும் மீனாட்சியையும் வாழ்த்திப் படுவதாக அமைந்துள்ளது.
ஆரத்திப் பாடல்கள்:-
நாட்டுப்புற மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்று கூடி உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் இயல்புடையவர்கள். இவர்கள் குடும்ப நிகழ்வுகளான திருமணம் போன்ற சடங்குகள் செய்யும் பொழுது பாடல்கள் பாடுவது உண்டு, திருமணம் முடித்த பின்பு மனமக்களுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுதும் பாடல்கள் பாடுவது உண்டு. அதனை ஆரத்திப் பாடல்கள் என்பர்.
ஆராரு வாராரு
மாமன்மாரு வாராரு
மாமன் இட்ட பந்தலுக்கு
பந்தல் தெரு நெருங்க
பந்தக்காலு சோதிமின்ன
வெத்தல கட்ட மாமன்மாரு
விட்டெறிஞ்சு வாராங்க
பாக்கு கட்ட மாமன்மாரு
பகுஞ்சறிந்து வாராங்க
சுண்ணாம்பு கட்ட மாமன்மாரு
சூரெறிஞ்சு வாராங்க
முழுங்காலு தண்ணியில மாமன்மாரு
முகங்களுவி வாராங்க
கடங்காலு தண்ணியில மாமன்மாரு
கால்களுவி வாராங்க
கும்புட்ட கையிக்கு
என்னென்ன அடையாளம்
காலுக்குத் தண்டையம்மா
கைக்கு விடகாசு
நெத்திக்கு சிலம்பம்மா
நிலம் பார்க்க கண்ணாடி
போதும் போதும் என்று சொல்லி
மாமன்மாரு பூ மணக்க கொண்டாங்க
போடுங்க ஒரு குலவை
பொன்னாங்க மணிக்குலவை
நேருக்கு ஒரு குலவை
நிறுத்துங்க மணிக்குலவை (கள ஆய்வு)
ஆரத்தி எடுப்பவர் மணப்பெண்ணின் தங்கை மணமகன் வரும் போது தன் வீடு சிறப்படைகிறது என்பதற்காக பந்தல் நெருநெருங்கபந்தக்காலு, சோதி மின்ன, எனப்பாடுகின்றனர். ஆரத்தி எடுத்து முடித்த பெண்ணிற்கு மனமகன் தன்னால் இயன்ற பொருட்களை பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு மனமகன் கொடுக்க வேண்டிய பொருட்களை இப்பாடல் விளக்குகிறது.
இப்பாடல் அனைத்தும் ஏட்டில் எழுதப் பெறாதவையாக இருந்தாலும் மக்கள் யாவரும் பாடிக் கொண்டே இருக்கின்றார்கள். இப்பாடல்கள் முழுவதும் வலையர் இன மக்களின் மகிழ்ச்சியினையும் சிறப்பினையும் அவர்கள் வாழ்வியல் கூறுகளையும் காண முடிகிறது.
நன்றி: வேர்களைத் தேடி
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥
Comments
Post a Comment