நெய்தல் மீனவர் வாழ்வு முறைமைகள்


உறவுகளே உங்கள் பொன்னான நேரத்தை, கொஞ்சம் வாசிப்புகளில் செலவிடுங்கள், நாம் அறிந்துகொள்ளப்படாத வரலாற்று பக்கங்கள் இன்னும் ஏராளம் உண்டு...

கடலைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. கடலை சந்தித்ததிலிருந்து ஓயாமல் அலைகள் கரைபுரண்டு திரும்புகின்றன. கடலின் பேச்சை அருகாமையில் இருந்து கேட்கக் கேட்க பேராவல் பொங்குகிறது. எந்தவிதமான அயர்ச்சியிலிருந்தும் கடல் நம்மை மீட்டுக் கொண்டு வந்துவிடுகிறது. வறீதையாவும் தொடர்ந்து கடலைப்பற்றிப் பேசுகிறார். 

நெய்தல் சுவடுகள் துவங்கி சோழகக் காத்தின் சுழற்சியையும், நீரோட்ட அலைச்சுழிகளின் ஆர்ப்பரிப்பையும் நம்முள் கடத்திக் கொண்டுவரும் அற்புதம் அவரின் எழுத்தில் மிளிர்கிறது. வர்ளக்கெட்டில் தேர்ந்ததொரு கதையாளராக உருப்பெற்ற வறீதையா கூஜாநகரத்தில் கவிஞராக வெளிப்பட்டிருந்தார். அதற்கு முன்னரே வறீதையாவின் எழுத்துலகம் கடல்மக்களின் வாழ்வில் மையம் கொண்டிருந்தது.

இடைவெளியற்று இயங்கும் அவரால் எழுதப்பட்ட ஆய்வுகள் களப்பணி நடத்திப் பெற்ற அனுபவங்களிலிருந்து நூல்களாக மலர்ந்தன. நீண்டதொரு ஆய்வுப் பாரம்பர்யத்தின் வேர்களில் புதுப்புது வாசிப்புகள் காய்த்து கனிந்து கிடக்கின்றன. இந்த நூலும் இதற்கொரு சாட்சி.

தமிழ் அறிவுச் சூழலில் மீனவர்கள், முக்குவர்கள் என்பதான இருவித சொல்லாடல்கள் புழக்கத்தில் உள்ளன. துறைமுகம் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் மீன்பிடிதுறைமுகமும், வர்த்தக துறைமுகமும் ஒளிந்திருப்பதைப்போல பண்பாட்டு மரபுக்குள் இருந்தே இவ்வித ஞாபகங்கள் கிளர்ந்தெழுகின்றன. அனைத்தும் நுண் அரசியல் சார்புநிலை கொண்டவை. மற்றமையை அழித்து தன்னை நிறுவுகிற ஒற்றை அதிகாரத்தின் மீதான விமர்சனங்களாகவே இம் மொழியாடல்கள் வரலாற்றின் போக்கில் இடம் பெறுகின்றன.

சோழகக் கச்சான், சோழகக்கொண்டல் போன்றபதங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசும் காற்றுக்கு கடலனுபவம் சார்ந்து மீனவர்களால் பெயர்க்குறிப்புகள் சொல்லப்படுகின்றன. பொதுவாக வடக்கில் இருந்து வீசும் காற்று வாடை, தெற்கில் இருந்து வீசும் காற்று குறிஞ்சி, சோழகம்,கிழக்கில் இருந்து வீசும் காற்று கொண்டல், மேற்கில் இருந்து வீசும் காற்று கச்சான் என்பதாக புழக்கத்தில் இருக்கின்றன. 

இதன் அடிப்படையிலேயே தென்மேற்கிலிருந்து வீசும் காற்று சோழக கச்சான், தென்கிழக்கிலிருந்து வீசும் காற்று சோழகக்கொண்டல் என்றும் அழைக்கப்படுகின்றன. காற்றும், பொழுதும், கடலின் நீரோட்டங்களும் நெருங்கிய தொடர்புடையன. வானில் தென்படும் நட்சத்திரங்களின், மேகங்களின் இருப்பின் அடிப்படையிலேயே மீனவர்கள் கடலறிவின் விஞ்ஞானிகளாக கடலின் நீரோட்டத்தை கணிக்கும் அற்புதத்தை செய்கிறார்கள்.இந்த நீரோட்டத்தின் அடிப்படையில் கடல் பயணத்தை மேற்கொள்ளவும்,மீன்பாடை தீர்மானிப்பதும் நிகழ்கிறது. கரமடி, தட்டுமடி, சின்னமடி, சாளவலை, கச்சாவலை,வளுவ வலை, தாத்துவலை என எந்த நீரோட்டத்திற்கு எந்த வலையை விரிப்பது என்பது பற்றிய  அறிதலுமாக கடலறிவு சேகரமாகி இருக்கிறது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தென்படும் நீரோட்டம் சோணுவாடு வலு, மீன்பாடு அதிகம் கிடைக்கும் நீரோட்டம் இது. கிழக்கிலிருந்து மேற்காக தென்படும் நீரோட்டம் வாணுவாடுவலு ,இதில் நடுத்தரமாய் மீன்கிடைக்கும். தெற்கிலிருந்து வடக்காக செல்லும் நீரோட்டம் நேரே கரையட்டிவலு எனப்படுகிறது.நேரே உம்மறிஞ்சவலு வடக்கிலிருந்து தெற்காக நீரோட்டம் தென்படுவதாகும். இவ்விரு காலங்களிலும் மீன்பாடு குறைவாகவே கிடைக்கும். 

தமிழ்மாதங்களின் அடிப்படையில் கார்த்திகை, மார்கழி தை, மற்றும் புரட்டாசி ஐப்பசி, என ஆண்டு முழுவதும் வாணுவாடு, நேரே கடியட்டி வலு என ஒவ்வொரு நீரோட்டங்களும் , காற்றின் திசைவழியும், அறிதலுக்கு உள்ளாகின்றன. மேலாக்கடல், கீழாக்கடல், சாயல் என கடலின் பருவங்களை பாகுபடுத்துவதும், வானில் தோன்றும் கூட்டவெள்ளி, மலைமீன், எரிஞ்சான்வெள்ளி  போன்ற மரபுவழி புரிதல் சார்ந்த நட்சத்திரங்களினால் கடலின் மேற்பரப்புக்கு வரும் மீன்வகையினங்கள் அறிவதும் மீனவர்களின் பாரம்பர்ய அறிவின் அனுபவக் கொடைகளாகும்.

பின்காலனிய சிந்தனைப் புலத்தில் இயங்கும் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பைவாக் அடித்தளமக்கள் பற்றிய ஒரு குறிப்பினை முன்மொழிகிறார். நவீன தொழிற்மய முதலாளித்துவ ஆலைகளில் உற்பத்தி செய்த மூலதனத்திலிருந்து  அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பாளியின் உழைப்புத் திரட்சியின் அடிப்படையில் மார்க்ஸ் தொழிலாளி (proletariat) கருத்தாக்கத்தை முன்வைத்தார். சீனப்புலம் சார்ந்து விவசாயவர்க்கம் ( peasant) என்பதாக மண்சார் விவசாயிகளின் முதன்மையை மாவோ வழிமொழிந்தார். 

இதாலியமார்க்ஸியர் அந்தோனியா கிராம்ஷி சமூக கட்டமைப்புக்குள், உற்பத்தி உறவுகள் சார்ந்து உருவாகிய அறிவாளியற்ற சமூக வர்க்கமான ( Non elite social class) மக்கள் பகுதியை கவனப்படுத்தினார். பாசிசத்தைக் கூட கேள்விக் கணக்கு ஏதுமற்று , ஏற்றுக் கொள்ள வைக்கிற மனோபாவ அரசியலை, அதன் சமூக ஒப்புதலை, மந்தைத்தனத்தை கட்டுடைக்கிறார். இதன்வழியாக உருவாக்கப்படும் ஆதிக்க கருத்தியல் மனக்கட்டமைப்பு மிகுந்த ஆபத்தான ஒன்றாகவே உருமாறியிருக்கிறது. 

இத்தோடு பேசப்படுகிற ஒன்றுதான் பட்டியலிடப்பட்ட சாதிகளான தலித்துகள், மற்றும் பழங்குடிகள் சார்ந்த மக்கள் பகுதியாகும். காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பைவாக் இதன் எல்லைகளையும் தாண்டி, பட்டியலிடப்படாத சாதிகள் மற்றும் பழங்குடிகள் பற்றியும் அக்குழுமங்களில் கடைசிநிலையில் ஒடுக்கப்படும் பெண்குறித்தும் கவனப்படுத்துகிறார். ஒற்றைப்படுத்தப்பட்ட நெய்தல் வெளிக்குள் இந்தவகை நீட்சியாகவே பழங்குடி மீனவர் இனங்களும் அவ்வினங்களுக்குள் சிறுபான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்டுக்கிடக்கிற உட்குழுமங்கள் குறித்த கவனப்படுத்துதலும் மேலெழும்பி வருகின்றன.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் பயணம் செய்ய மரக்கலங்கள்  கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். கடலில் சென்று உணவிற்கும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்  மீனவர்கள் ஆயினர். 

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறைமை அடிப்படையில் வலையர், பரவர், கரையர் என பகுக்கப்பட்டனர்.வலையைவைத்து மீன்பிடித்ததால் வலையர் என்றும் பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரவர் எனப்பட்டனர்.

கரை ஓரங்களில் மீன்பிடித்து கடல் சார்ந்த கரைதொழில்கள் கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை செய்தல் போன்ற தொழில்கள் செய்தவர்கள் கரையர் எனப்பட்டனர். கரையர் மருவி கடையராக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனும் பிரிவுகளாக உள்ளனர்.

வறீதையாவின் எழுத்தில் மீனவர்களின் பூர்வீக வரலாறுகுறித்த தேடல் நிகழ்ந்திருக்கிறது. நீரியல்சார்ந்த வளங்களும் சிதைவுகளும் பேசப்படுகின்றன.நான்கு நூற்றாண்டுகளில் முத்துக்குளிப்பும் சங்குகளும், பவளப்பாறை மீன்பிடிப்பும் அரேபியர், இஸ்லாமியர், போர்ச்சுகீசியர், கிறிஸ்தவ மெஷினரிகளின்பால் வெகுவான தாக்கத்தை உருவாக்கியிருந்தது.

முக்குவர் எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும், மீனவ சமூகத்தைச் சேர்ந்த சமூகக் குழுவினராகும். தமிழ்நாட்டு கரையோரங்களில் இருந்து கேரளாவிற்கும் இலட்சத்தீவுகளுக்கும் முக்குவர் குடியேற்றம் நிகழ்ந்ததான வரலாற்றுச் செய்தியும் உண்டு. இலங்கைக்குச் சென்று குடியேறி, பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி கேரளாவின் தென்மேற்குக் கரையோரங்களில் குடியேறினர் என்பதான கருத்தும் உண்டு. 

சமகால அர்த்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலம்  திருவனந்த புரத்திலும் வாழும் கடல்வாழ் மீனவர்களான முக்குவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயஅடையாளம் சார்ந்து வாழ்கிறார்கள். முக்குவர் என்ற சொல்லின் உருவாக்கத்தை பலவிதமாக அணுகமுடியும். இந்திய தீபகற்பத்தின் தெற்கு மூலையில் , முக்கில் வாழ்ந்தவர்கள் என்பதால் முக்குவர்கள் ஆனார்கள் என்பது ஒரு கருத்து. நீரில் முங்கி மீன்பிடித்ததாலும் முக்குவர்கள் ஆனார்கள் முன்னெடுங்காலத்தில் முத்துக்குளிக்க  முக்குளிப்பவர்களாக இவர்கள் இருந்திருக்கக் கூடும். எனவேதான் முத்துக்குளிப்பவர் முக்குவர் ஆனார்கள் என்பதாகவும் பூர்வீகம் சார்ந்த கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் மட்டக்கிளப்பு பகுதியின் மூத்தக்குடிகள்தான்  முக்குவர் என்ற கருத்தும் உண்டு. மட்டகிளப்பு மான்மியம் எனும் நூல் முக்குவர்களை முற்குகர் என குறிப்பிடுகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்கிளப்புபகுதிகளில் முக்குவர்கள் குறுநில அரசர்களாக இருந்திருக்கக்கூடும். அரயன் அரயத்தி போன்ற முக்குவர் சமூக சொற்கள் இந்தப்பின்னணியில் உருவாகி இருக்கக்கூடும். கேரளக் கரையோரத்திலிருந்துப் வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாகவும் அந்த ஓலைச்சுவடிகுறிப்பு  தெரிவிக்கிறது. இவ்வாறாக புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனதான  வரலாற்றுச் செய்தியும் உண்டு.

முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் முஸ்லிம்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்றதொரு கருத்தும் நிலவுகிறது.

 கேரள கடற்கரையோரங்களிலும், மலபார் தேசத்தின் கொடுங்கநல்லூரில்  பகுதியிலும் சமய குழுக்களாகவும், வணிகர்களாகவும் வந்திறங்கிய அரபுகளுக்கும்  உள்ளூர் மீனவ பெண்களுக்கும் இடையேயான திருமண உறவுகளை முன்வைத்து உருவானதுதான் மாப்பிள்ளை முஸ்லிம் சமூகம் என்பதான வரலாற்றுத் தரவுகளும் நமக்கு கிடைக்கின்றன.. 

தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் என்ற பெயர் வந்தது என்பதான ஒரு கருத்தும் உண்டு.வரலாற்றாய்வாளர் லூயிஸ்மூர் தனது மலபார் சட்டமும் மரபுவழக்கமும் நூலில் (Lewis Moore, Malabar Law and Custom,1882)இக்கருத்தை விளக்கிவிட்டு மாப்பிள்ளா என்ற சொல்லுக்கு மணமகன், மருமகன், மாப்பிள்ளை என்பதாக பொருள் கொள்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த சி. பிரிட்டோ எழுதி 1876 களில் வெளிவந்த நூல்தான் முக்குவர் சட்டம்(The Mukkuva Law on The Rules of succession among the mukkuvars of Ceylon , c. Brito, Colombo 1876) தமிழ் இனக்குழுக்களில் ஒன்றாக யாழ்பாணம், மட்டகிளப்பு பகுதிகளில் வாழ்ந்திருந்த முக்குவர்களின் குடும்ப உறவுகள்,வாரிசுரிமை மரபுவழிபழக்கங்களின் சட்டத்தொகுப்பாக ஏழு அத்தியாயங்களில் இவ் வாழ்வியல் விவாதிக்கப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகளின் விவரங்களும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. 

கலாநிதி கா.சிவத்தம்பி முக்குவர்சட்டம் ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்டுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத்தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்காகவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய மட்டக்களப்பு ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர் என்பதாகவும் இதனை மதிப்பீடு செய்கிறார்.
இந்திய அளவில் இருபதுக்கும் மேற்பட்ட பெரும்பிரிவு மீனவச்சமூகங்கள் வாழ்கின்றன.

தமிழகத்தில் மீனவசமூகப்பெரும்பிரிவுகளாக பட்டினவர், முக்குவர்கள் மற்றும் பரவர்கள் உள்ளனர். கேரளாவில் முக்குவர், (Mukkuvar) அன் ஜுட்டி,( Anjootty,) தீவெரா, (Dheevera,)  புஸலர்( Pooislar)கர்நாடகாவில் மொகவீரர்,(Mogaveeras) மேற்கு வங்கத்தில் கைபர்தாஸ்,( Kaibartas) ஒரிசாவில் ஜலாரிஸ், (Jalaris) பேலிஸ்,(Palles) பட்டபு, (Pattapu)ஆந்திராவில் வடபலிஜாஸ்( Vadabalijas) ஜலாரிஸ், பேலிஸ், பட்டபு குஜராத்தில் கார்வாஸ், (Kharvas,) கோலிஸ், (Kolis) மச்சியராஸ் (Macchiyaras) என்பதாக இது நீண்டு செல்கிறது.இந்தவகை தொழிற்குழுமங்கள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய அடையாளங்கள் சார்ந்தும் இருப்பதை கவனத்திற் கொள்ளலாம்.

இந்தியக்கடற்கரையின் பதின்மூன்று சதவிகிதம் தமிழக கடற்கரையாகவும் இலங்கையில் மூன்றில் இரண்டுபகுதி தமிழ்நிலக்கடற்கரையாகவும் உள்ளது.  சென்னை முதல் கோடியக்கரை வரையிலான கோரமண்டல் கடற்கரை 357.2கி.மீ, கோடியக்கரை முதல் பாம்பன் வரை பாக் ஜலசந்தி 293.9 கிமீ, பாம்பன் முதல் கன்னியாகுமரிவரை மன்னார்வளைகுடா 364.9 கிமீ, கன்னியாகுமரி முதல் நீரோடிவரை மேற்குக்கடற்கரை 60 கிமீ என மொத்தம் 1076கிமீ நீளமுடையதாக தமிழக கடற்கரை உள்ளது.
மீனினம் நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். மீன்கள் சுமார் 500 மில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்றதொரு அறிவியல் கருத்து உள்ளது. பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. 

சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. வலுவான எலும்புகள் கொண்ட மீன்கள் சுமார் 20,000 வகைகள் உள்ளன.குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள். சுமார் 50 வகைகள், சுறா, மற்றும் திருக்கை  போன்ற குருத்தெலும்பு கொண்ட  சுமார் 600 மீனின வகைகள், விலாங்கு, ஆரல் போன்ற  செதில் இல்லா குருத்தெலும்பு உள்ள சுமார் 50 வகை எளிய மீன் வகைகள் உள்ளன.ஐக்கிய நாட்டுசபையின் உணவு மற்றும் வேளாண்மைப் பிரிவு மதிப்பீட்டின் படி உலக அளவில் 1100 மீனின வகைகள் அறுவடை செய்யப்படுகின்றன.

பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆனால் திமிங்கிலச்சுறாமீன்என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் இரண்டு யானையின் எடை சுமார் 14 மெட்ரிக் டன் எடை உடையதாகும்.
கடல் மீன்களும், நன்னீர் மீன்களும் உணவிற்காக பிடிக்கப்பட்டு சமைத்து உண்ணப்படுகின்றன. சாளை, நெத்தெலி, கிழாத்தி, வாளை, நவரை, இறால் போன்றவை உணவிற்காக பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் கடல் மீன் வகைகளாகும்.
உலகின் முதல் பத்து மீன் உற்பத்தி முதன்மை நாடுகளில் சீனா, பெரு விற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.. இந்தியமாநிலங்களில் ஆந்திரா, குஜராத், கேரளாவிற்கு அடுத்ததாக தமிழ்நாடு மீன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
கடல் இயற்கை வளங்களின் கொடையாகவே இருந்து வருகிறது.

முத்துச்சிப்பிகள், வலம்புரிச்சங்குகள் பவளப்பாறைகள் என மதிப்புயர்ந்த உயிரிகளை அது தன்னுள் கொண்டுள்ளது. கடலில் முத்துக்குளித்து சேகரிக்கப்படும் எல்லா சிப்பிகளிலும் முத்து இருப்பதில்லை. சிப்பிகளினுள் விழும் மழைத்துளியோ அல்லது திடப்பொருள் துகளோ உறைந்து உருண்டு முத்தாக மாறுகிறது. தமிழகத்தின் தொன்மையான மரபில் ஒன்றாக முத்துக்குளித்தல் இருந்து வந்துள்ளது. பவளம்  என்பதும்  ஒருவகை கடல் வாழ் உயிரினமாகும். பவளப் பூச்சிகளின் உடல் வேதியல் மாற்றத்தில் பல கிளைகளைக் கொண்ட மரத்தைப்போல பவளக்கொடிகளாகி, பவளத்திட்டுகளாய் மாறும். பின்னரே இவை பவளத்தீவாகும்.
கடல் பறவைகளான கடல் கொக்குகள், கருவண்டு பறவைகள்,அல்பட்ராஸ் பறவைகள் என அறிவுப்புலனில் நினைத்துப்பார்க்க முடியாத பறவை இனங்களும் உண்டு. 

கடல்வாழ் பறவைகளிலேயே அல்பட்ராஸ்தான் உலகிலேயே மிக நீளமான இறக்கைகள் கொண்டுள்ளன. பதினொரு அடி நீளமுள்ள இறக்கைகளை அசைக்காமலேயே நீண்ட தூரம் இந்தப் பறவைகள் பறக்கின்றன.
 கடல்தாவரங்களான, பச்சைப்பாசி, கொட்டப்பாசி, சாட்டாம்பாறைபாசி, கடல் செடிகள் என வகையினங்கள் பல உண்டு. கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை மேலும் சில தாவர இனங்களாகும்.
கடல் விலங்குஇனவகையில் கடல்பன்றிகள், கடல் அரசன் எனப்படும் பெரியமீன்கள், திமிங்கலங்கள் தவிர்த்து மன்னார் வளைகுடாவில் கடற்பசு, கடற்குதிரைகள், கடல் ஆமைகள், கடல் அட்டைகள் உட்பட மூவாயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதாக ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது. உலோக தாதுக்களும்,இயற்கை வாயுக்களும், எண்ணெய்கிணறுகளும் கூட கடலடி ஆழத்தில் கிடைக்கின்றன.கடலின் அதிசயங்கள் இன்னும் அறியப்படாத ரகசியங்களாக நம்முன் இன்னும் இருக்கின்றன.

கரையில் நின்றால் எதுவும் கிடைக்காது
கடலில் குதி பொக்கிஷங்கள் கிடைக்கும்
சூபிக் கவிஞனின் வரிகள் உண்மையிலேயே நமக்கு  கடலின் அற்புதக் கொடைகளை அள்ளித்தந்து கொண்டே இருக்கிறது.

மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலில் ஏற்படும் நெருக்கடிகளில் சமகாலத்தில் தலையாயனானது தமிழகமீனவர்களை எல்லைமீறி மீன்பிடித்ததாக படகுகளோடு பிடித்துச் செல்லும் இலங்கைராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையாகும். இந்த உயிர்தரப்பான பிரச்சினையை வறீதையா தனது மன்னார் வளைகுடா கட்டுரையில் பேசுகிறார்.

இந்திய இலங்கை பன்னாட்டுக் கடல் எல்லைப்பகுதியில் தொடர்ந்து எழும் மீன்பிடிச்சிக்கலை முற்றிலும்  பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நின்று பேசும் வறீதையாவின் குரல் மிகைமதிப்பீடு சார்ந்த்தல்ல. பூர்வகுடி மீனவச் சமூகத்தின் மீதான தாக்குதலாகவே உயர்தொழில்நுட்ப திணிப்பை, தொழிற்துறை மீனவர்களின் செல்வாக்கை, இழுவைமடி விசைப்படகுகளின் ஆதிக்கத்தை, பெரும் லாபம்சார்ந்த வணிகமீன்பிடி கப்பல்களின் பரவலை மதிப்பீடு செய்கிறார். மன்னார்கடல் சூறையாடப்பட்டு சிதைந்து போனநிலையில் ஈழத்து பூர்வகுடி மீனவர்களின் கையறுநிலை வேதனை வெளிப்பாடாக மாறுகிறது.எனவேதான் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து போருக்கு வருவதுபோல் இராமேசுவரம் படகுகள் கரைக்கடலில் அணிவகுத்து நிற்பதாக மிரள்கிறார்கள்.தொப்புள்கொடி உறவை உங்கள் இழுவை மடிகளில் போட்டு இழுக்கிறீர்களே என ஆதங்கம் கொள்கிறார்கள். 

ஈழத்து மீனவர்களின் மாற்றுத்தரப்பான நியாயக்குரலுக்கு இக்கட்டுரை முழுமையான இடமளித்துள்ளது.இலங்கையில் முள்ளிவாய்க்காலிலும் ஈழத் தமிழர்களின் அழித்தொழிப்பு அரசியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் சமூகவியல் பின்னணியும் கவனஈர்ப்பை பெறுகிறது.தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் பலாத்கார நடவடிக்கைகளும், மன்னார்கடல் பகுதியின் உரிமை பறிப்பும், சமகால நெருக்கடிகளாகவே வறிதையா தனது ஆக்கத்தில் விவாதிக்கிறார். 

பாரம்பர்ய மீனவர்களுக்கான 5.4 கிமீ தொழிலுரிமையும், விசைப்படகு மீன்பிடிக்கலன்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புமான எல்லை வகுத்தலில் இருந்து துவங்கி கச்சத்தீவு மீட்பு முராரிகமிட்டியின் பரிந்துரைப்பின்படி பன்னாட்டு வணிக மீன்பிடிக்கப்பல்களுக்கு இந்திய தனியுரிமை பொருளாதார கடற்பகுதிகளில் தடைவிதிப்பது வரை எட்டவேண்டிய தீர்வுகள் இன்னும் நடைமுறைக்கு வராமலேயே உள்ளன.தமிழக அரசியல்வாதிகளின் பிம்ப அரசியல் வழிபாட்டுக்கு நெடுநாளாய் இப்பிரச்சினை தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகவும் விமர்சிக்கிறார்.

எது வளர்ச்சிக்கோட்பாடெனும் கேள்வி எழுப்பும் வறீதையாவின் அதிசய உடையும் அம்மணராசாவும் வனம், நிலம், கடல் என மூன்று பரப்புகளிலும் நிகழும் பழங்குடிகளின் வெளியேற்றம் குறித்து கவனப்படுத்துகிறது. ஜே.சி.குமரப்பாவின் கிராமம் சார்ந்த தாய்மை வேளாண்பொருளாதார அணுகுமுறையையும், அமர்தியாசென்னின் கல்விப் பொருளாதாரத்தையும் முன்னுதாரணமாக எடுக்கத்தவறியதையும், நிலபயன்பாடு முன்னுரிமை இழந்து நிலமற்றவர்கள் அகதியமை யாவதையும், விவசாய தற்கொலைகளையும், தொழிற்சார் வாழிடங்களை இழப்பதன் வாயிலாக மரபான தொழிலறிவு சிதைந்து போவதையும் மிகுந்த கவனஈர்ப்போடு உரையாடல் செய்கிறார்.

நமது உரிமைசார்ந்த 25.32 லட்சம் சகிமீ கடற்பரப்பில் இலட்சத்தீவு உள்ளிட்ட 12.36 லட்சம் ச.கி.மீ மேற்கு கடற்பரப்பும்,அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய 12.96 லட்சம் ச.கி.மீ கீழைக்கடற்பரப்பும் எவ்வகையிலான மீன்வளங்களைக் கொண்டிருந்தது என்கிற விவரணையையும் செய்கிறது. இந்த ஆக்கம் இந்தியக்கடல்களில் அனுமதிக்கப்படும் பன்னாட்டு மீன்பிடிக்கலன்களின் எண்ணிக்கையை 270 ஆக உயர்த்த வேண்டுமென்ற மீனாகுமாரி குழு அறிக்கையின் பன்னாட்டு முதலாளிய ஏகபோக வர்க்கசார்பு குறித்து கேள்வி எழுப்புகிறது.

இந்திய ஆழ்கடல்மீன்வளங்களை அறுவடைசெய்யும் திறன்குறித்த மைய அரசின் கூற்றுக்களை கட்டுடைத்து தூத்தூர் விசைப்படகு மீனவர்களின் அறுவடை 45000 டன்களாக இருப்பதை சுட்டிக்காட்டி இது வெளிநாட்டுகலன்களின் அறுவடைமதிப்பை விட பத்து சதவிகிதத்திற்கு மேல் அதிகம் என்பதை நிரூபணம் செய்கிறது. நாட்டின் வள உற்பத்தியில் மீன்வளம் 0.7 சதவிகித பங்கிற்கு பனிரெண்டாயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக உண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 451 கோடிரூபாய் மொத்தத்தில் 3.75 சதவிகிதம் மட்டுமே என்கிற வஞ்சிக்கப்பட்ட கதையைப் பேசுகிறது.

விழுப்புரம் மரக்காணம் கடற்கரைப்பகுதியில் கோலா மீன்பிடித்தலுக்கு செல்கிற மீனவர்களின் விரதமிருத்தல் , இரவில் தூங்காமல் விழித்திருத்தல் நம்பிக்கைசார் சடங்கியல்களோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. வறீதையா அறிமுகப்படுத்தும் இராபர்ட் பனிப்பிள்ளையின் கடலறிவுகளும், நேர் அனுபவங்களும் பிரதி தென்திருவிதாங்கூர் கடல்வெளியை, பருவநிலைகளை, பொழுதுகளை, நீரோட்டத்தின் போக்குகளை, மீன்பிடி அனுபவங்களை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை, குஞ்சுபொரித்தலை, கடல்சார் இடர்களை உயிர்ப்புடன் சொல்வதை அறிமுகப்படுத்துகிறது. மருத நிலத்தின் திண்ணைகள் போன்ற நெய்தல் நிலத்தின் கொல்லணியாக இதனை வறீதையா படிமப்படுத்துகிறார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் பாரம்பர்ய கடலோடி என்ற சொற்றொடர் கூட அளப்பரிய மரபின் தொடர்ச்சியை நம்முன் நீந்திக் கொண்டு வருகிறது.

எல்லோருக்கும் பொதுவான செறுமங்கரைப் பாரை எனும் கடலடி மீன்திட்டை வலியதுறை ஆரோக்கியம் திரிமிந்திக் குடும்பம் தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் முறைமைக்கு எதிராக அத்திட்டையை கடலில் கண்டறிந்து, கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்துவரும் பனிப்பிள்ளை கடலோடியின் ஐந்துநாள் போராட்ட வாழ்வனுபவத்தை இராபர்ட் பனிப்பிள்ளை தன் சொந்த அனுபவமாகவே பதிவு செய்கிறார்.

கடலைக்கற்றுக் கொள்ளும் பனிப்பிள்ளையின் ஆர்வம் நம்மிடமும் ஒட்டிக்கொள்கிறது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கற்றுத்தந்த பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், அரபிக்கடலுக்கு பதிலாக கடல் அனுபவம் வேறுகடல்களை வாசகனுக்கு  காட்டித் தருகிறது.நேர்கடல், கீழாக்கடல், கள்ளக்கடல் எனவாக அது விரிகிறது.கடல்வாழ்வு அதிர்ச்சியும் சாகசமும் நிறைந்த உயிரைப் பண்யம் வைக்கும் ஒரு நீர்விளையாட்டாகிப் போகிறது. இந்த சாகசங்கள் கடலோடிகளுக்கு மிக இயல்பான அன்றாட தருணங்களின் நிகழ்வாகிறது.
பாரம்பர்ய மீன்பிடிமுறையான கட்டுமரத்தில் பாய்விரித்து தொலைவு வெளியில் கடலுக்குள் சென்று நங்கூரமிட்டு நான்கைந்து நாட்கள் தங்கி மீன்பிடித்துக் கரைக்குத் திரும்பும் படுவோட்டு முறையை  தங்கல் ஓட்டு என்றும் சொல்வதுண்டு. 

கடலடிப்பாறைகளில் வசிக்கும் பார்மீன்களை சேகரிப்பதற்கான தூண்டிலிடும் ஓடு கயிறு, இரை, கோட்டுமல், அடிக்கம்பு, கொளுந்தோட்டி, தூண்டிலுக்கான உண்வு, கடலில்தங்கும் காலம் உண்ண கட்டுச்சோறு, பனையோலைக்கடகத்தில் வேகவைத்த உணக்க கிழங்கு, சுட்ட வற்றல் மிளகு, உப்பிட்ட நீத்தண்னி, இடுப்பில் சொருகும் மடக்கு பெட்டியில் வெத்தில ,பாக்கு, புகையிலை என நீண்டதொரு மீன்பிடி தொழில்நுட்பங்களும், மீனவர் உணவுப்பண்பாட்டுக் கலப்புகளும் மீள் உருவாக்கம் பெறுகின்றன.சில்லமரம், இரையில்லா தூண்டில், நெடுந்தூண்டில் முக்கோணவடிவப்பாய் என புதிய தொழில்நுட்பங்களைச் சார்ந்து நூற்றாண்டுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் பகுதியில் உருவான மீன்வளத்திட்டுகளை கண்டடைந்து மீன் அறுவடையை நிகழ்த்தும் மாற்றங்களும் சாகசங்களும் இதன் வேறு பரிமாணங்களாக வடிவெடுக்கின்றன.

அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் 1951 இல் வெளிவந்த நாவல். நோபல் பரிசு, புலிட்சர் விருது பெற்ற இந் நாவல் நடுக்கடலில் மூர்க்கத்தனமான கடல் அலைகளோடும் பெரிய முரல் மீனோடும் போராடும் ஒரு வயதான கிழவனின் வாழ்க்கையை பேசியிருந்தது. பலநாட்களாய் கடலுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்ற கிழவன் நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கிறான்.. 

கிழவனின் படகைவிட பெரிதான ஒரு ராட்சச மீன்  சிக்கிவிடுகிறது. இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன் போராடி அதைக்கொன்று, படகில் கொண்டு கரைக்குத் திரும்புகிறான்.வரும்வழியில் அம்மீனைத் தின்னவரும்  சுறாக்களுடன் மீண்டும் போராடுகிறான்.கடைசியில்  சுறாமீன்களுக்கு அப்பெரிய மீனை இரையாக்கி வெறும் மீனின் எலும்புக்கூட்டுடன் வீட்டுக்குத்திரும்புகிறான். பனிப்பிள்ளையின் அனுபவமும் ஹெமிங்வேயின் படைப்பு அனுபவமாகவே அலையடித்து சென்றிருக்கிறது. 

வறீதையாவின் எழுத்தில் ஹெமிங்வேயின் கடலும்கிழவனும் ஒப்பீடும் தவறாமல் இடம் பெறுகிறது.ச.து.சு.யோகி, எம்.எஸ் மொழியக்க அறிஞர்களின் தனித்தனி மொழிபெயர்ப்பில் கடலும்கிழவனும் தமிழில் வெளிவந்துள்ளது
இந்திய அளவிலான தமிழ்கல்விப்புலம்களை உள்ளடக்கிய இருபத்துமூன்று பல்கலைக்கழகங்களின் 1282 முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கம் இணையத்தில் பதிவேற்றம் பெற்றிருக்கிறது. 

அனைத்துக்கல்லூரி அளவிலான 594 ஆய்வேடுகள் தனி எண்ணிக்கையைச் சேரும். இதில் கூர்ந்து நோக்கினால் கடல்வாழ்மீனவர்களின் பண்பாடு பற்றி ஆ.திருமேனி, ப.மகாலெட்சுமி,க.மதியழகன் ஆகியோரின் மூன்று ஆய்வுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.நாகைமாவட்ட மீனவர்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும், மரபுவழிமருத்துவம், வாழ்வியல் குறித்ததாக இவை அமைந்திருக்கிறது. இது மொத்த ஆய்வில் மிகக்குறைந்த அளவிலான  0.16 சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கிறது.கல்விப்புலங்களில் மீனவர்வாழ்வுகுறித்த ஆய்வுகள் மிகுந்த போதாமையுடனே இருக்கிறது.

நன்றி....

பெரும்பிடுகு பெருஞ்சேனை குழுமம்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்