வலைஞர்
____________
தமிழர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மிக நெடுங்காலந்தொட்டு செய்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப் படுகின்றன. கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்பவர்களை மீனவர் என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். இவர்களைச் சங்க காலத்தில் ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். ‘வலைஞர்’ என்பது வலையால் மீன்பிடிப்பவர் எனும் பொருளில் வரும் ஒரு காரணப் பெயராகும்.
fishermen 600சங்க இலக்கியங்களில் மீன் வகைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் ‘மீனவர்’ என்ற சொல் எங்கும் இடம் பெற்றிருக்கவில்லை.
அகநானூற்றூப் பாடலொன்று கடலுக்குள் சென்று மீன்பிடிப்போனைத் ‘திமிலோன்’ என்றும் சுட்டுகின்றது. திமில் என்றால் ‘மீன்படகு’ (Tamil Lexicon,, ப.1880) என்பதாகும். ‘திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) என்று புறநானூற்றுப் பாடலொன்றும் சுட்டுகிறது.
ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
கானல் அம் சிறுகுடி... ... (அகம். 320: 1- 5).
‘உயர்ந்தெழுந்து வரும் அலைகளையுடைய கடலில் சென்று மீன்பிடிக்கும் படகினைக் கொண்ட ‘திமிலோன்’ வலைவிரித்துப் பிடித்துவந்த மீன்களை தழையாடை உடுத்திய அழகிய பரதவப் பெண் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் விற்று வருவர். இத்தகைய வளம் பொருந்திய சிற்றூர்க்குத் தலைவனே’ என்று படகில் சென்று மீன் பிடித்தலையும் தெருவில் மீன் விற்றலையும் குறிப்பிடுகிறது இந்த அகநானூற்றுப் பாடல்.
இன்னொரு அகநானூற்றுப் பாடல் கடலுக்குள் திமிலில் (திமில் - மரக்கலம் என்றும் பொருளுண்டு) சென்று மீன் பிடித்த குறிப்பைத் தருகின்றது.
பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்க
கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலோடு வைகிய தந்தைக்கு
உப்புநொடை நெல்லின் மூரல்வெண் சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி (அகம். 60: 1 - 7)
‘பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால்மீன்கள் நடுங்கும்படி மீன்களைப் பிடிக்கும் தொழிலையுடைய, வலையினைக் கையிலே கொண்டவாறு பெரிய படகில் மீன் பிடி தொழிலுக்குச் செல்லும் தந்தைக்கு, உப்பு விற்று வாங்கி வந்த நெல்லால் செய்யப்பட்ட வெண் சோற்றுடன் சுவை மிகுந்த புளிக்கறியைச் சேர்த்து
செய்த அயிலை மீன் குழம்பையும், கொழுமீன் கருவாட்டையும் மகள் உணவாகக் கொடுக்கும் வளம்பொருந்திய பொறையன் தொண்டி’ என்கிறது இந்தப் பாடல்.
இறால் மீன்கள் அஞ்சி நடுங்கும்படியாகக் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்யும் ‘மீனவன்’ பற்றிய குறிப்பை இப்பாடல் சுட்டுகிறது. தும்பி சேர்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாட லொன்றில் குளத்தில் உள்ள மீன் பிடிப்போரை ‘வலைஞர்’ என்று சுட்டும் குறிப்பொன்று காணப் படுகின்றது. கணவனை இழந்த பெண் வருந்தும் கைம்மைக் கோலத்தைக் கூறும் ‘தாபத நிலை’ எனும் புறத்துறை வகையைச் சார்ந்தது இப்பாடல். ஒரு பெண் கணவனோடு வாழ்ந்தபோது அவள் மீன்களின் கறி
யோடு புகா என்னும் அரிசியால் சமைத்த வெண்பொங் கலையும் சேர்த்து விருந்தூட்டிக்கொண்டு வாழ்ந்த சூழலை அழகாகவும் அக்கணவன் இழந்த பின் அவள் படும் துயரையும் காட்டுகிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.
கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
(புறம். 249:1- 3)
‘பூக்கள் நிரம்பிய பொய்கையில் சேற்றில் சென்று ஒளியும் ஆரல் மீன்கள், நீரின் மேல்பகுதியில் துள்ளும் பருத்த கோட்டையுடைய வாளை மீன்கள், கிணையின் முகம்போல் விளங்கும் யாமை மீன்கள், பனையின் குருத்தைப் போல கூர் முற்றிய வரால் மீன்கள், வேல் போன்று ஒளிபொருந்திய கயல் மீன்கள் இவைகளை வலைஞர் அணுகிப் பிடித்துச் செல்லும் வளம் பொருந்திய நாடு’ என்கிறது அந்தப் பாடல்.
பத்துப்பாட்டுள் உள்ள பெரும்பாணாற்றுப் படையிலும் குளத்திலுள்ள மீன்கள் பிடிப்போரை வலைஞர் என்று சுட்டும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஒரு முதுவேனில் காலத்துப் பகல் பொழுதில் வறுமையில் வாடிய பெரும்பாணன் ஒருவன் கையில் யாழொடு தம் வறுமை நீங்கப் பொருள்தேடி அலைகிறான். தொண்டைமான் இளந்திரையனிடம் பொருள் பெற்றுத் திரும்பும் ஒரு பாணன் வழியில் எதிரே வருகிறான்.
வறுமையில் வாடும் பாணனை வறுமை நீங்க இளந்திரையனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தும் அந்தப் பாணன் அவன் செல்ல வேண்டிய வழியை மிக விரிவாக விவரித்துக் கூறுகிறான். பாணன் சுட்டிக் காட்டும் வழியில் நெய்தல் நிலக் குறிப்பும், மீனவர் குடியிருப்பும் ஓரிடத்தில் சுட்டப்படுகிறது. அப் பாடலடிகள்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்குங்
...கொடுமுடி வலைஞர்... (பெரும். 270-274)
என்பனவாகும்.
‘செவ்வரிக் கழல் மீனும், இறால் மீனும் பெருகிக் கிடக்கும் கருமையான பெரிய குளத்திலே தம் மகளோடு மீன் பிடித்துக்கொண்டும், கோடைக் காலம் நீண்ட தாயினும் வற்றாத நீர்நிலையை உடைய குளத்தைக் காத்துக்கொண்டுமிருக்கும் வலைஞர் குடியிருப்பில் தங்கிச் சென்றால் நல்ல விருந்துண்டு செல்லலாம்’ (உ.வே.சா. ப. 236, 237). என்பதாக அப்பாடல் நீண்டு செல்லும்.
மதுரைக்காஞ்சியிலும் ஓரிடத்தில் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து விற்கும் தொழில் செய்யும் வலைஞர் பற்றிய குறிப்பு வருகிறது.
கம்புள் சேவல் இன் துயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
(மது. 254- 256)
குளத்தில் ‘கம்புட்கோழி இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு விலைகூறி விற்ற கொடிய முடிச்சுக்களையுடைய வலையால் மீன்பிடிப்பார்’ (உ.வே.சா. ப. 365) என்பார் நச்சினார்க்கினியர். வலைஞர் என்பதற்கு ‘வலையான் மீன்பிடிப்பார்’ என்கிறார் அவர்.
பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பைக் கூறுமிடத்தில் வலைஞர் முன்றில் மீன் பிறழவும் (பட். 197 - 198) என்ற குறிப்பொன்று காணப்படுகின்றது. அதாவது ‘வலைஞர் வீடுகளின் முன் மீன்கள் அச்சமின்றித் துள்ளித் திரிந்தன’ என்கின்றன இப்பாடலடிகள்.
இறுதியாகச் சில கருத்துக்கள்
பண்டைத் தமிழர்கள் கடல்தொழில் செய்த குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப் படுகின்றன. அவர்கள் கட்டுமரங்கள், படகுகளைப் பயன்படுத்திக் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வந்து உண்டும் விற்பனை செய்தும் வாழ்ந்துள்ளனர். தாம் வாழும் நிலப்பகுதியிலிருந்த ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளிலிருந்தும் மீன்களைப் பிடித்துண்டும் விற்பனை செய்தும் வாழ்ந்துள்ளனர் பண்டைத் தமிழர்கள்.
சங்க காலத்தில் மீன்கள் பிடிப்போரை ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். மடுக்கள், குளங்கள், கழனிகள் ஆகியனவற்றிலிருந்த மீன்கள் பிடிப்பவர்களை மட்டுமே இச்சொல் வழக்குச் சுட்டி நிற்கிறது. பத்துப்பாட்டிலும் புறநானூற்றுப் பாடலொன்றிலும் மட்டுமே ‘வலைஞர்’ என்ற சொல் வழக்கு காணப்படுகின்றது.
இன்றைக்குக் கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்வோரை மட்டுமே ‘மீனவர்’ என்று சுட்டும் வழக்கம் காணப்படுகிறது.
கடலில் சென்று மீன் பிடி தொழில் செய்வோரைத் ‘திமிலோன்’ என்று சுட்டும் வழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது. மீனவர் என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்திருக்கவில்லை.
துணைநின்ற நூல்கள்
1.சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு) பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
2.பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); மோகன், இரா. (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் பத்துப்பாட்டு (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
3. பதிப்பாசியர் குழு. 1982 (மறுஅச்சு). Tamil Lexicon, சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.
4. பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); செயபால், 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் புறநானூறு (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
நன்றி: கீற்று மின்னிதழ்
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥
Comments
Post a Comment